Thursday, March 26, 2015

கருத்து சுதந்திரத்துக்கு விடுதலை

இந்திய அரசியல் சட்டம்தான் இந்தியாவில் உள்ள மக்களை மட்டுமல்லாமல், அரசாங்கங்கள், துறைகள் என்று எல்லோருக்குமே வழிகாட்டும் சாசனமாக அமைந்துள்ளது. இந்த அரசியல் சட்டத்தில் 19(1) பிரிவு அனைத்து மக்களுக்கும் கருத்து சுதந்திரத்தையும், பேச்சுரிமையையும் வழங்கியுள்ளது. இது ஒரு முக்கியமான சட்டப்பிரிவு ஆகும். பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் பற்றி இப்போது அல்ல, ஏறத்தாழ 240 ஆண்டுகளுக்கு முன்பே வால்டேர் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர் சொன்னது இன்றும் இதன் ஆழத்தை தெளிவாக காட்டுகிறது.

‘உன் கருத்தில் ஒரு சொல்லில்கூட எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், எனக்கு உடன்பாடு இல்லாத அந்த கருத்தை சொல்வதற்கான உன் உரிமையை காப்பாற்றுவதற்காக என் உயிரையும் கொடுப்பேன்’ என்று முழங்கினார். இதுபோல, 1976–ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில், மறைந்த பத்திரிகையாளரான ஆர்.எம்.டி. சம்பந்தம், ஒரு வழக்கில் அவர் வெளியிட்ட செய்தி எங்கிருந்து கிடைத்தது? என்று கேட்டபோது, ‘பத்திரிகையாளர்கள் தங்களது செய்தி எங்கிருந்து கிடைத்தது என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டியதில்லை’ என்று சொன்னது இன்றளவும் பத்திரிகையாளர்களுக்கு ஒரு பலமாக திகழ்கிறது. பேச்சுரிமைக்கும், எழுத்துரிமைக்கும் கொடுக்கப்பட்டுவந்த முக்கியத்துவம், 2008–ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தகவல் தொழில்நுட்பச்சட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தினால், 66–ஏ என்ற ஒரு கொடிய பிரிவு முளைத்தது.

டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட ஏதாவது தகவல் பொய்யானது என்றோ, இடைஞ்சலோ, அசவுகரியமோ, ஆபத்தோ, அவமானமோ, தடையோ, தலையீடோ, பகையோ, வெறுப்போ ஏற்படுத்துவதாக அமைந்தால், அதன்கீழ் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், 3 ஆண்டுவரை ஜெயில் தண்டனை கிடைக்கவும் வகைசெய்யும் ஆபத்தான சட்டப்பிரிவு இது என்பது கருத்துரிமையையும், பேச்சுரிமையையும் விரும்பும் எல்லோருடைய ஆதங்கமும் ஆகும். இந்த சட்டத்தை பயன்படுத்தி எத்தனையோ பேர் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக சிவசேனா தலைவர் பால்தாக்கரே மறைந்தபோது, மும்பையில் நடந்த கடை அடைப்பை விமர்சனம் செய்து, பேஸ்புக்கில் மும்பையில் வசிக்கும் ஷாகின் தாதா என்ற பாலக்காடு மாணவி கருத்து வெளியிட்டதற்கும், அந்த கருத்தை விரும்புவதாக தெரிவித்த அவரது தோழி ரீனு சீனிவாசன் என்பவரையும் மும்பை போலீஸ் கைது செய்தது. இதை கண்டு சட்டக்கல்லூரி மாணவி ஷிரேயா சிங்கால் தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், ரோகிண்டன் நாரிமன் ஆகியோர் வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளனர். கடந்த 50 ஆண்டுகளாக எந்த சட்டத்தையும் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று சொல்லாத உச்சநீதிமன்றம், இந்த பிரிவை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று கூறி அதை ரத்து செய்துள்ளது. சிறைப்பட்டுக்கிடந்த பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் இந்த தீர்ப்பின்மூலம் கூண்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டுவிட்டது.

ஒரு சட்டக்கல்லூரி மாணவிக்கு உள்ள இந்த பொறுப்புணர்ச்சியை இந்தியாவே பாராட்டுகிறது. கருத்துகள், விமர்சனங்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்தால், அதை கருத்து ரீதியாகத்தான் எதிர்க்கவேண்டுமே தவிர, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், வன்முறைகளுக்கு இடமே இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி அத்துமீறப்பட்டால், அதற்கும் அரசியல் சட்டத்தின் மற்றப் பிரிவுகள் இருக்கிறது. அந்த பாதுகாப்பு கேடயத்தை எடுத்து நீதிமன்றத்தை அணுகலாமே தவிர, கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்கும் முயற்சியில் இனியும் யாரும் ஈடுபடக்கூடாது என்பதற்கு இதுவே ஒரு நல்ல சான்றாகும்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...