சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள போலி டாக்டர் தம்பதி பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எம்.பி.பி.எஸ். என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் 5 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
போலி டாக்டர் தம்பதி
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த போலி டாக்டர் தம்பதி ஆனந்தகுமார், நிர்மலா சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலி டாக்டர் வேடம் போட்டதோடு, சென்னை மாநகராட்சி கமிஷனர் தங்களது குடும்ப நண்பர் என்றும், அவர் மூலம் மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக ஏராளமான பேரிடம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி உள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., எம்.டி. என்ற படிப்புகள் பற்றி இருவரிடமும் போலீசார் கேட்டபோது, அந்த வார்த்தைகளின் அர்த்தம் கூட இவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் டாக்டர் வேடத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு ஊசி, மாத்திரை கொடுத்து சிகிச்சை அளித்துள்ளனர். எந்த வகை நோயாளி வந்தாலும், இவர்கள் கொடுப்பது ஒரே வலி நிவாரண மாத்திரை தான்.
பிரபல மருத்துவமனைகள் பெயரில்
சென்னையில் உள்ள இரண்டு பிரபல மருத்துவமனைகளின் பெயரைச் சொல்லி அங்கு இருதய நோய் சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருவதாக ஆனந்தகுமார் கதை விட்டுள்ளார். நிர்மலா ஒரு பிரபல மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பேராசிரியராக பணியாற்றுவதாக கூறியுள்ளார்.
இவர்களிடம் இருந்து ஸ்டெதாஸ்கோப், ஊசிகள் மற்றும் மருந்து, மாத்திரைகளும் ஏராளமாக கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களிடம் சிகிச்சை பெற்ற மக்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. ஆனந்தகுமார், எம்.பி.பி.எஸ், எம்.டி. என்று விசிட்டிங் கார்டு போட்டுள்ளார். அகில இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் தான், இவர்களின் முகமூடியை கிழித்துள்ளனர்.
தனி வழக்கு
தற்போது இவர்கள் மீது வேலைவாய்ப்பு மோசடிக்கு மட்டும் சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்கு போட்டுள்ளார். இவர்கள் மீது போலி டாக்டர் என்ற வகையில் மேலும் ஒரு தனி வழக்கு போடவும் போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.
இதற்காக ஆனந்தகுமார், நிர்மலா இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். அப்போது இவர்கள் இருவர் பற்றியும் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது. இவர்களிடம் வேலை கேட்டு பணத்தை பறிகொடுத்தவர்களின் புகார்கள் தொடர்ந்து கமிஷனர் அலுவலகத்தில் குவிந்து வருகிறது. நேற்றும் 5 பேர் இதுதொடர்பாக புகார் கொடுத்தார்கள்.
ஆந்திராவில் முதலீடு
இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மோசடி மூலம் கொள்ளை அடித்த கோடிக்கணக்கான பணத்தை ஆந்திராவில் கந்து வட்டி தொழிலில் முதலீடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்கள் 3 சொகுசு கார்கள் வைத்துள்ளனர்.
போலீஸ் தேடுவதை அறிந்ததும் அந்த கார்களை ஆந்திராவில் மறைத்து வைத்து விட்டதாக தெரிகிறது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் தற்போது பிளஸ்–2 பரீட்சை எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment