Tuesday, March 31, 2015

தேர்வு முறைகளில் பெரிய மாற்றம் தேவை

தமிழ்நாட்டில் உள்ள தேர்வு முறைகளில் பெரிய மாற்றம் தேவை என்பதை நிரூபிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. பிளஸ்–2 தேர்வில் தமிழ்நாட்டில் விஞ்ஞான ரீதியாக நடந்த ஒரு பெரிய முறைகேடு மிகுந்த கவலையை அளிப்பதாக உள்ளது. தற்போது, தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு இன்று முடிகிறது. கடந்த 18–ந்தேதி கணிதத்தேர்வு நடந்தது. கணிதத்தில் 200–க்கு 200 வாங்கினால்தான், என்ஜினீயரிங் கல்லூரிகளில் ‘பிரி சீட்’ நிச்சயம் என்ற உணர்வில், இந்த தேர்வுக்கு தனி முக்கியத்துவம் உண்டு.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 323 மாணவர்கள் தேர்வு எழுதினர். அங்கு தேர்வு தொடங்குவதற்கு முன்பு, அந்த வகுப்பறையில் கண்காணிப்பாளராக பணியில் இருந்த ஒரு ஆசிரியர், கணித வினாத்தாளை அப்படியே தனது செல்போனில் படம்பிடித்து, அதை ‘வாட்ஸ் அப்’ மூலம் தன்னுடைய நண்பர்களான வெளியே உள்ள மற்ற ஆசிரியர்களுக்கு அனுப்ப, அவர்கள் அந்த வினாக்களுக்குரிய விடைகளை தங்கள் வாட்ஸ் அப் மூலம் தேர்வு அறைக்குள் இருக்கும் ஆசிரியர்களுக்கு அனுப்பி, அந்த செல்போன் தகவல்கள் மாணவர்களுக்கும் பரிமாறப்பட்டதாக புகார் எழுந்ததன் அடிப்படையில், இப்போது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல், பல இடங்களில் தேர்வு மையங்களில் மாணவர்களை காப்பி அடிக்க அனுமதி அளிக்கும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. கிருஷ்ணகிரியில் ஒரு ஆசிரியை வினாத்தாளை ஜெராக்ஸ் எடுத்து, அதில் விடைகளை ‘டிக்’ செய்து மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறார். இவ்வளவு பெரிய முறைகேடுகள் நடந்தது நன்றாக படிக்கும் மற்ற மாணவர்களுக்கு ஒரு நம்பிக்கை அற்ற நிலையை இப்போது ஏற்படுத்திவிட்டது. நாம் கஷ்டப்பட்டு படித்து தேர்வை எழுதும்போது, படிக்காத மாணவர்களும் இப்படி முறைகேடுகளால் நமக்கு இணையாக மார்க் எடுக்கிறார்களே என்ற சலிப்பு வந்துவிடும். இந்த சம்பவங்கள் ஒரு சந்தேகப்பார்வையை நமது தேர்வுத்துறை மீது ஏற்படுத்திவிட்டது. தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது செல்போன்களுக்கு தடை உள்பட வினாத்தாள்கள் வெளியே செல்லாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்? என்று தீவிரமாக ஆராய்ந்து தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல், வினாத்தாள்களிலேயே பல தவறுகள் இருப்பதும் வெளியே வந்துவிட்டது. வினாத்தாள்களில் உள்ள தவறுகளை தேர்வு எழுதிவிட்டு வெளியேவரும் மாணவர்களே வெளியே சொல்லி குறைப்பட்டுக்கொள்ளும்போது, வினாத்தாள் தயாரிப்பு, அதை சரிபார்ப்பு ஆகிய நேரங்களில் ஏன் கற்றறிந்த ஆசிரியர்களுக்கும், கல்வித்துறைக்கும் தெரியாமல் போய்விட்டது.

மாணவர்களின் அறிவாற்றலை சோதிப்பதற்குத்தான் தேர்வு, வினாத்தாள்கள் என்றால், அதிலேயே தவறு என்றால் எங்கு செல்வது என்பதுதான் இப்போது சமுதாயத்தில் உள்ள பெரிய கேள்வி. பொதுவாக நமது கல்வி முறையிலேயே பெரிய மாற்றம் தேவை. வினாத்தாள் லீக் ஆகிறது, வாட்ஸ் அப்பில் வெளியே தகவல்கள் அனுப்பப்படுகிறது என்பது போன்ற குறைபாடுகளைத்தவிர, விடைத்தாள்கள் மதிப்பீடு, மார்க் பட்டியலில் கூட்டலில் தவறு என்று தொடர்ந்து தவறுகள் நடக்கிறது. அதனால்தான் பொதுவாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன், மறுமதிப்பீடு, மறுகூட்டல் போன்றவற்றுக்கு ஏராளமானவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். இதுபோன்ற குறைபாடுகள் எதுவுமே பள்ளிக்கூட, பல்கலைக்கழக தேர்வுகளில் இல்லாத ஒரு நிலையை உருவாக்க, கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில், தேர்வு முறைகளிலேயே நம்பிக்கை இல்லாத நிலை உருவாகிவிடும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024