Tuesday, March 24, 2015

உலகக் கோப்பை 2-வது அரையிறுதியைக் காண சிட்னிக்கு படையெடுக்கும் இந்திய ரசிகர்கள்: மிரட்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதி ஆட்டம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

இந்தப் போட்டிக்கு தங்கள் நாட்டுக்கு ரசிகர்களே அதிகம் வருவார்கள். அவர்களுடைய ஆதரவோடு சிறப்பாக விளையாட முடியும் என ஆஸ்திரேலிய வீரர்கள் நம்பியிருந்தனர். ஆனால் 42 ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட சிட்னி மைதானத்தில் 70 சதவீத டிக்கெட்டுகளை இந்திய ரசிகர்கள் வாங்கியிருப்பது ஆஸ்திரேலிய வீரர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடுவது போன்றதொரு சூழலுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஆகியோர் டுவிட்டர் மூலம் தங்களுக்கு ஆதரவு தருமாறு தங்கள் நாட்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில், “வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள 2-வது அரையிறுதி போட்டியைக் காண ஆஸ்திரேலிய ரசிகர்கள் அனைவரும் மஞ்சள் வர்ணம் பூசிக்கொண்டு வாருங்கள். உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் பார்மி ஆர்மி என்ற பெயரில் கிரிக்கெட் ரசிகர்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்து அணி, வெளிநாடுகளில் சென்று விளையாடும்போது அந்த போட்டிகளுக்கு பார்மி ஆர்மி சார்பில் ரசிகர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

அதேபோன்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அமைப்பை ஸ்வாமி ஆர்மி என்ற பெயரில் நடத்தி வரும் கார்த்திக் அய்யாலசோமய்யாஜுலா என்பவர் இந்தியா-ஆஸி. இடையிலான 2-வது அரையிறுதி குறித்து பேசும் போது, “ரசிகர்கள் விஷயத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு கடினமான தருணம் இது. போட்டியின்போது இந்திய ரசிகர்கள் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக காதை கிழிக்கும் வகையில் குரல் எழுப்புவார்கள். அது ஆஸ்திரேலிய அணியினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அப்போது ஏதோ வெளிநாட்டில் விளையாடுவது போன்ற உணர்வு ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஏற்படும்.

இந்திய ரசிகர்கள் தாரை தப்பட்டையுடன் மைதானத்தை வலம் வருவதோடு, பாட்டுப் பாடியும், நடனம் ஆடியும் அசத்தப் போகிறார்கள். இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்கும் போதும், இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்கும்போதும் பாடல்களை பாடி கொண்டாடவுள்ளனர்.

கிளார்க்கும், வார்னரும் தங்களுக்கு ஆதரவு தருமாறு தங்கள் நாட்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இதிலிருந்தே இந்திய ரசிகர்கள் குறித்து அவர்கள் எவ்வளவு கவலையடைந்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளலாம். சிட்னி மைதானத்தில் இந்திய ரசிகர்களே அதிகமிருப்பார்கள் என்பதை கிளார்க், வார்னர் ஆகியோரின் டுவிட்டர் கருத்துகள் சொல்லிவிட்டன. வரும் வியாழக்கிழமை மைதானத்துக்கு வரும் ஆஸ்திரேலிய ரசிகர்கள், தெற்காசியாவில் கிரிக்கெட்டுக்கு என்ன அர்த்தம் என்பதை புரிந்து கொள்வார்கள். அரையிறுதியில் இந்திய அணிக்கு கிடைக்கப் போகிற ஆதரவை இதற்கு முன் ஆஸ்திரேலியர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்” என்றார்.

கார்த்திக், மெல்போர்னில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024