சிட்னி: எனக்கு இப்போது 33 வயதுதான் ஆகிறது. அந்தப் போட்டித் தொடர் முடிந்த பிறகு 2019 உலகக்கோப்பை போட்டி குறித்து யோசிக்கலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
உல கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியாவும்-ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் இந்தியா தோல்வி அடைந்தது.
இதன் பிறகு இந்திய அணியின் கேப்டன் தோனி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஆஸ்திரேலியா 350 ரன்கள் வரை எடுக்கும் சூழ்நிலை இருந்தது. ஆனால், நாங்கள் அதை கட்டுப்படுத்தினோம். 300 ரன்களுக்கும் மேலான இலக்கை துரத்துவது என்பது கடினமானதுதான்.
உலகக் கோப்பையில் எங்கள் அணியின் ஆட்டம் திருப்தி அளிக்கக் கூடியதாக இருந்தது. உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கும்போது, இந்த அணியின் மீது பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.
ரஹானே இந்தத் தொடரில் முன்னேற்றம் அடைந்த ஒரு வீரர் என்று நிச்சயம் கூற வேண்டும். டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் என்று அவர் நல்ல மேம்பாடு அடைந்துள்ளார்.
ரசிகர்களுக்கு நான் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். இந்தியாவிலிருந்தும், ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலிருந்தும் போட்டிகளுக்கு நேரில் வந்து ஆதரவு அளித்துள்ளனர். எங்களுடன் பயணித்த ரசிகர்களுக்கு நன்றி. ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும்” என்றார்.
‘இதுதான் உங்களது கடைசி உலகக்கோப்பையா?’ என்று கேட்டதற்கு, ''எனக்கு இப்போது 33 வயதுதான் ஆகிறது. நல்ல உடல்தகுதியுடன் இருப்பதோடு, நன்றாக விளையாடியும் வருகிறேன்.
அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளது. அந்தப் போட்டித் தொடர் முடிந்த பிறகு 2019 உலகக்கோப்பை போட்டி குறித்து யோசிக்கலாம். இப்போதைக்கு எதுவும் கூற முடியாது'' என்றார்.
No comments:
Post a Comment