Tuesday, March 24, 2015

லீ: சிங்கப்பூரின் சிற்பி!



சிங்கப்பூர் வரலாற்றில், சிங்கப்பூர் என்ற சொல்லோடு பிரித்துப் பார்க்க முடியாததாக இருந்த இன்னொரு சொல் உதிர்ந்திருக்கிறது: லீ குவான் யூ. சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் சுதந்திரம் வாங்கித்தந்த காந்தியும் இவரே, சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திய நேருவும் இவரே!

உலக வரைபடத்தில் சின்னஞ் சிறிய புள்ளியாக இருக்கும் சிங்கப்பூரை, இன்று நிர்வாகம், தொழில்நுட்பம், வணிகம் என்று பல துறைகளிலும் உலக நாடுகள் வியக்கும் சாதனை நாடாக மாற்றியமைத்த மாயாஜாலக்காரராகவே உலகத் தலைவர்கள் இவரைப் பார்க்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுபட்டு, சிங்கப்பூர் என்ற சுதந்திர நாடு உருவான நாள்தொட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலாக லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சியே சிங்கப்பூரின் ஆளும் கட்சி. சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ, தொடர்ந்து 8 முறை பிரதமராக இருந்தவர். உலகின் மிக நீண்ட காலப் பிரதமர்!

லீயுடன் ஓர் உரையாடல்

உலகம் முழுவதும் லீயைப் பற்றி இரு விதமான பேச்சுகள், மதிப்பீடுகள் உண்டு. அவர் சிங்கப்பூரை வளர்த்தெடுக்க எந்தக் கட்டுப்பாடுகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தினாரோ, பெரும்பாலும் அதுதான் இந்தப் பேச்சுகள், மதிப்பீடுகளின் மையப்புள்ளி. ஒருமுறை, நான் படித்த சிங்கப்பூர் தேசியக் கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராக லீ குவான் யூ வந்திருந்தார். அவருடைய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் அவரோடு கலந்துரையாடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லீ - சிங்கப்பூர் இரண்டுக்குமான பல்வேறு யூகங்களுக்குப் பதிலாக அமைந்ததோடு, அவருடைய தனித்துவமான அரசியல் - நிர்வாகப் பார்வையையும் வெளிக்காட்டியது அந்த உரையாடல்.

மாணவர்கள் நிறையக் கேட்டோம், எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார். அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிங்கப்பூர் - இன்றைய சிங்கப்பூர் பற்றிக் கேட்டபோது, அப்படியே மவுனத்தில் ஆழ்ந்தார். ஒரு இடைவெளிக்குப் பின் பேசினார்: “50 வருடங்களுக்கு முன் இந்தச் சின்ன தீவில் பிழைப்புக்காக வந்து இறங்கியவர்கள்தான் இன்றைய வளர்ந்து நிற்கும் சிங்கப்பூருக்கான திடமான அஸ்திவாரத்தைப் போட்டவர்கள். எந்தெந்த நாடுகளில் இருந்தோ இங்கு வந்திறங்கி, பத்துக்குப் பத்து சதுர அடியில் எட்டுப் பேர் நெருக்கியடித்துக்கொண்டு கிழிந்த உடைகளும், போஷாக்கு இல்லாத உணவும் கொண்டு உயிர் வளர்த்தவர்கள் கொடுத்த உழைப்புதான் இந்த நாட்டுக்கான உரம். இன்று மழை பெய்யும்போது குடை பிடிக்கும் அவசியம் இல்லாமல் சாலை ஓரம் எங்கும் கூரை வேயப்பட்டிருக்கிறது. உலக அரசாங்கங்கள் பாடம் படிக்கும் நவீன சொகுசுப் பேருந்து போக்குவரத்து வசதியை அனுபவிக்கிறோம். இதற்கெல்லாம், முகம் மறந்து போன அந்தப் பாட்டன்களுக்கும் முப்பாட்டன்களுக்கும் நாம் செலுத்த நன்றி மிச்சம் இருக்கிறது.”

மாறாத வடு

சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்பியவர் லீ. ஒன்றிணைந்த மலேசியாவின் வர்த்தகத் தலைநகராக சிங்கப்பூர் இருக்க வேண்டும் என்று கனவு கண்டவர். மலேசியாவுடன் சிங்கப்பூரை இணைக்க நடவடிக்கைகள் எடுத்தார். ஆனால், மலேசிய அரசாங்கத்துடன் சரியான உடன்படிக்கை ஏற்படாத காரணத்தால், மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு, கண்கள் கலங்க, தலைகுனிந்து விசும்பியபடி சிங்கப்பூர் -மலேசியப் பிரிவினை அவர் அறிவித்தார். பின்னொரு நாளில், அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தார். “1965-ல் சிங்கப்பூரை மலேசியாவில் இருந்து பிரிந்த சுதந்திரக் குடியரசாக நான் அறிவித்தேன். நாடு முழுவதும், பலரும் அதைப் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் பரிமாறியும் கொண்டாடினர். ஆனால், எனக்கோ தூக்கங்கள் இல்லாத இரவுகளாக, மிகுந்த மன உளைச்சலுடனேயே நாட்கள் கழிந்தன. சிங்கப்பூருக்கு இது வாழ்வா, சாவா பிரச்சினை. ஒரு தனி நாடாக இயங்குவதற்குத் தேவையான இயற்கை வளம், மனித வளம் எதுவும் நம்மிடம் கிடையாது. சிங்கப்பூரின் சொத்து, கடல் வணிகத்துக்கு ஏதுவான நமது புவியியல் அமைப்பு மட்டுமே. இருந்தாலும் நமது குறைகள் அனைத்தையும் தகர்த்து, இன்று உயர்ந்த நிலையை நாம் எட்டியிருக்கிறோம். இதற்கான முழு பாராட்டும், நம் மண் மீது நம்பிக்கைகொண்டு இங்கு புலம்பெயர்ந்தவர்களும் அவர்களது அயராத உழைப்புமே.”

தன் தலைமுறையைச் சேர்ந்த ஒவ்வொரு சிங்கப்பூர் வாசியையும் அவர், தங்களை வருத்திக்கொண்டு நாட்டைச் செதுக்கிய தியாகிகளாகவே பார்த்தார்.

ஒழுக்கம் மட்டுமே உயர்வு தரும்

19-ம் நூற்றாண்டின் தொடக்கங்களில், சிங்கப்பூர் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இயங்கிவந்தது. மற்ற பிரிட்டிஷ் காலனிகளைப் போலவே சிங்கப்பூரும் ஓரளவு வளர்ச்சி கண்டது. இருப்பினும் சொல்லிக்கொள்ளும்படியான உள்கட்டமைப்பு வசதிகள் அந்தக் காலகட்டத்தில் இல்லை. சொல்லப்போனால், அன்றைய சென்னையின் நிலவரத்தில் அரைப் பங்குகூட இல்லை.

சிங்கப்பூர் விடுதலை பெற்று, லீ குவான் யூ ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன், கடுமையான சட்டங்கள் பாய்ந்தன. சாலையில் எச்சில் உமிழ்ந்தால் பிரம்படி; பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால் ஜெயில் தண்டனை; போதைப் பொருட்கள் உட்கொண்டாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை - இப்படியான சட்டங்களால் நாடே கிடுகிடுத்துப் போனது. இதனால் பலரது விரோதத்துக்கும் அவப்பெயருக்கும் லீ ஆளாக வேண்டியிருந்தது. இருந்தாலும், அதையெல்லாம் அவர் பெரிதாகப் பொருட் படுத்தவில்லை. “நாட்டின் வளர்ச்சிக்குச் சில தியாகங்களைச் செய்தாக வேண்டும். அது ஆரம்பத்தில் ஒரு கசப்பான கஷாயமாகத்தான் இருக்கும். ஆனால், காலப்போக்கில் அதன் பலன்களை நீங்கள் கட்டாயம் அறுவடை செய்வீர்கள்” என்றார்.

அதுமட்டுமல்லாமல், தெளிவான பொருளாதாரக் கொள்கைகளாலும், முதலீட்டுக் கட்டமைப்புகளாலும் சிங்கப்பூரை என்றென்றைக்கும் அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் சொர்க்கமாக மாற்றினார். சமீபத்திய உதாரணம், ஃபேஸ்புக் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எடுவார்டோ சாவரின், தனது அமெரிக்க குடியுரிமையைத் துறந்துவிட்டு, சிங்கப்பூர்வாசியாகி இருப்பது.

அரசியலுக்குத் தகுதி தேவையில்லையா?

அரசியல் பதவிகளுக்கு நிறைய தகுதிகள் வேண்டும் என்று நினைத்தவர் லீ. “எதன் அடிப்படையில் உங்கள் அரசாங்கத்தின் அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?” என்று கேட்டபோது சொன்னார்: “எந்தப் பதவியும் இல்லாமலே திறனுடன் செயல்படுபவர்களை ‘சைக்கோமெட்ரிக் சோதனைகள்’ வழியாக ஆராய்வதுதான் முதல் பணி. அந்தப் பயிற்சியில் அவர்கள் அரசியல் எனும் பெருங்கடலில் நீந்தக்கூடிய திறன் படைத்தவர்கள் என்று தேர்வானால், நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர்களுக்கு எந்தச் சலுகைகளும், பதவி உயர்வுகளும் அளிக்காமல் தத்தமது தொகுதிகளை அவர்கள் எவ்வாறு பராமரிக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்போம். முடிவில் அவரவர் திறனுக்கேற்ப அவர்களை இளநிலை அமைச்சர்களாகவோ, அமைச்சராகவோ நியமிக்கிறோம். இத்தனை கடும் சோதனைகளைக் கடந்துவருபவர்கள், பெரும்பாலும் சேவை மனப்பான்மையுடனும், தன்னலம் கருதாச் சமூக அக்கறையுடனும் செயலாற்றக் கூடியவர் களாகவே இருக்கிறார்கள்.”

இப்படித் திறமையான, நேர்மையான அரசியல்வாதியைக் கண்டெடுப்பது, வெறும் முதல்கட்டப் பணி மட்டுமே. அதன் பிறகு, அவர்கள் அதே நேர்வழிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ஊக்கமூட்டுவதாக இருக்க வேண்டும். “மக்களின் காசுக்கு ஆசைப்படாத அளவுக்கு ஊதியத்தை அரசே அளித்துவிட்டால், அதிகாரத்தில் இருப்பவர்கள் வெளியில் கை நீட்ட மாட்டார்கள்” என்பதும் லீயின் நம்பிக்கை களில் ஒன்று. சிங்கப்பூரின் ஆறு முன்னணித் துறைகளில் அதிக ஊதியம் பெரும் முதல் எட்டுப் பேரின் வருமானம் எவ்வளவோ, அதில் மூன்றில் இரண்டு பங்கு சிங்கப்பூர் அமைச்சர்களின் ஊதியம். லீயின் நம்பிக்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் இடைவெளி இருப்பதில்லை.

வாரிசு அரசியலுக்கும் தகுதி தேவை

“பலம் மிக்க அரசியல் குடும்பத்து வாரிசுகள், சமுதாயத்தில் கட்டாயம் உயர்பதவி வகிக்கலாம். ஆனால், அதில் ஒரு தர்மமும் வேண்டும்” என்று சொல்வார் லீ. அவரது மூத்த மகன் லீ சியன் லூங், புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 13 வருடங்கள் சிங்கப்பூர் ராணுவத்தில் முறையே பயிற்சி பெற்ற லீ சியன் லூங், 1990-ல் துணைப் பிரதமர் ஆனார். 14 வருடங்கள் கழித்து, 2004-ல் பிரதமர் ஆனார்.

இளைய மகன் லீ சியன் யாங், ஸ்டான்பர்ட் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவரும் சிங்கப்பூர் ராணுவத்தில் பணியாற்றியவர். பின் அந்நாட்டின் புகழ்பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனமான சிங்டெல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, பின் அதன் முதன்மை நிறுவனராக உயர்ந்தார். இப்போது சிங்கப்பூர் விமானப் படைத் தலைவர்.

இப்படி லீ குடும்பத்து வாரிசுகள் அரசில் கோலோச்சினாலும், யாரும் அவர்களுடைய தகுதியைக் கேள்விக்குள்ளாக்க முடியாது, இந்திய / தமிழக அரசியலைப் போல ‘வாரிசு முறை’ இவர் விஷயத்தில் சர்ச்சை ஆகவில்லை.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது

சுமார் 50 ஆண்டுகளாக எதிர்க் கட்சிகளை ஒரு சில தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்க விட்டுக்கொண்டிருந்த லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சி, 2011 தேர்தலில் சறுக்கல் களைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் தங்கள் கைவசம் இருந்த முக்கியமான 6 தொகுதிகளை இழந்தது. இதன் தொடர்ச்சியாக, செயற்குழுவைக் கூட்டி, சுயபரிசோதனையில் இறங்கியது லீயின் கட்சி. “இன்றைய இளைஞர்களுக்குத் தங்கள் எதிர்காலம் மீதும், நாட்டின் முன்னேற்றத்திலும் அதிக அக்கறை உள்ளது. இணையம் வழியாக அவர்கள் பதிவிடும் கருத்துக்கள், நாடாளுமன்றம் வரை ஒலிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். உடனுக்குடன் மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்த நவீன குரல்களுக்குச் செவிசாய்க்கும் சுறுசுறுப்பான அமைச்சர்களையே தங்கள் பிரதிநிதிகளாக அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒன்று, கால மாற்றத்துக்கு ஏற்றார்போல் நம்மை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். அல்லது இளைய சமுதாயத்துக்கு வழிவிட்டு, கவுரவமாக நாம் விலகிக்கொள்ள வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, இதுவரை மக்கள் செயல் கட்சியின் அரசியல் ஆலோசகராக இருந்துவரும் நான், அரசியலிலிருந்து நிரந்தரமாக விலகிக்கொள்வதாக அறிவிக்கிறேன்” என்று அறிவித்தார் லீ.

தன்னைப் போன்ற மூத்தவர்கள், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதைத் தானே முன்னின்று ஏனையோருக்கு உணர்த்தினார்.

கல்லறையிலிருந்து வருவேன்

தன் மீதான விமர்சனங்கள் மீது - கட்டுப்பாடுகள், சுதந்திரத் தலையீடு, கருத்துச் சுதந்திரம், ஏனைய அரசியல் தலைவர்கள் / கட்சிகள் மீதான கட்டுப்பாடு - பற்றியும் லீ பேசியிருக்கிறார். “தேசத் தலைவர் என்று வந்துவிட்டால், மக்களின் பார்வையும், விமர்சனங்களும் நம் மீது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அப்படியான விமர்சனங்களைக் கருத்தில்கொண்டு, ஆட்சிமுறையில் மக்களுக்குத் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். என் பார்வையில் கருத்துச் சுதந்திரம் அவசியம். எனினும், அது சரியான அளவுகோலில் உரிய எல்லைக்குள் இருப்பதும் அவசியம்.

சிங்கப்பூரை ஆட்சி செய்பவர் எவராக இருந்தாலும், அவரிடத்தில் இரும்பு போன்ற திடம் இருக்க வேண்டும். ஏதோ, வந்தோம் சென்றோம் என்று விளையாட்டாக ஆட்சி செய்துவிட்டுப் போக இது ஒன்றும் சீட்டாட்டம் இல்லை. சிங்கப்பூரை வளர்க்க நான் என்னுடைய மொத்த ஆயுளையும் அர்ப்பணித்திருக்கிறேன். நான் உயிருடன் இருக்கும் வரையில் என் நாட்டை யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஒருவேளை, நாளை நான் இறந்த பிறகும், என் நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் அச்சுறுத்தல் நேர்ந்தால், கல்லறையில் இருந்தும் எழுந்துவருவேன்!”

இலங்கைத் தமிழர்க்கு ஆதரவு!

லீக்கு தமிழர்கள் மீது பெரும் மதிப்பு உண்டு. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் வெளிப்படையாக இலங்கை அரசைக் கடுமையாக விமர்சித்தவர் அவர்.

“இலங்கை கட்டாயம் ஒரு சந்தோஷமான நாடாக இருக்க வாய்ப்பில்லை. யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பார்த்துப் பொறுக்க முடியவில்லை. இலங்கையில் சிங்களர்கள் இருந்த காலம் தொட்டுத் தமிழர்களும் இருந்துவருகின்றனர். அந்த நிலப்பரப்பில் இரு இனத்தவர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால், திறமையில் தமிழர்களைக் காட்டிலும் பின்தங்கிய சிங்களர்கள் தாழ்வு மனப்பான்மையால் தமிழர்களைக் கொன்றுவருகின்றனர். அதை எதிர்த்து ஈழத் தமிழர்கள் தொடுத்த போர் என்னைப் பொறுத்தவரை நியாயமானதே!

நான் ராஜபக்சவின் சில பிரச்சாரங்களையும், மேடைப் பேச்சுக்களையும் கேட்டிருக்கிறேன். அதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது அவர் ஒரு ‘சிங்கள வெறியர்' என்றுதான் தோன்றுகிறது. வெற்றிக்காக எதையும் துணிந்து செய்யக் கூடியவர் என்று புரிகிறது.

இந்தப் போரில் தமிழர்களின் தோல்வி தற்காலிக மானது. அவர்கள் வெகு நாட்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. கூடிய விரைவில் மீண்டு வருவார்கள்” என்று லீ குவான் யூ குறிப்பிட்டிருக்கிறார்.

- ஏ. ஆதித்யன்,

சிங்கப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் - எழுத்தாளர்,

இந்தோனேசிய www.ayobis.com நிறுவனத்தின் முதன்மை நிறுவனர், தொடர்புக்கு : adi1101990@gmail.com

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...