Friday, March 27, 2015

உங்கள் அபிமான பொன்னியின் செல்வனை இனி கம்ப்யூட்டர் திரையில் காணலாம்!

சென்னை: சோழ சாம்ராஜ்யம் குறித்த வரலாற்று புதினமாக, 1950களில் வெளியானது 'பொன்னியின் செல்வன்' நாவல். பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த புத்தகம், தமிழகத்தின் அனைத்து புத்தக கண்காட்சிகளிலும் அதிகப்படியாக விற்பனையாகும் வரலாற்று நாவலாக சாதனை படைத்து வருகிறது. வீரம், காதல், நகைச்சுவை, அன்பு, அறிவு, அரசியல், திடுக்கிடும் திருப்பங்கள் என வாசகர்களை கட்டிப்போடும் அத்தனை அம்சங்களும், உண்மையான வரலாற்று செய்திகளுடன், இணைந்துள்ளதால், புத்தகத்தின் மீதான ஈர்ப்பு தமிழ் வாசகர்களுக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நாவலின் சுவாரசியத்தால் ஈர்க்கப்பட்ட கமலஹாசன் இதை திரைப்படமாக எடுக்க முயன்றதாகவும், ஆனால், பொருட்செலவு கருதி அந்த திட்டத்தை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி எம்.ஜி.ஆர், இயக்குநர் மணிரத்னம் என பலர் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்க முயற்சித்துள்ளனர். ஆனால் யாருடைய முயற்சியும் முழுமையடையவில்லை. தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குநராக பணியாற்றும் ஈராஸ் நிறுவனம், பொன்னியின் செல்வனை கையிலெடுத்துள்ளது. ஆனால் திரைப்படமாக அல்லாமல் பகுதிகளாகப் பிரித்து இணயத்தில் பதிவேற்றப்படுகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமலோ, விசிடிக்களாகவோ இல்லாமல் ஒவ்வொரு பகுதியும் இணையத்தில் பதிவேற்றப்படும். பார்க்க விரும்புபவர்கள் ஒவ்வொரு பாகத்திற்கும் பணம் செலுத்தி கம்ப்யூட்டர் திரையில் பார்த்துக் கொள்ளலாம் என தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது. அதிகபட்சம் 5 பகுதிகளாக பதிவேற்றம் செய்யப்படலாம் என்று ஈராஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. முன்பு ஒருமுறை, மணிரத்னம், பொன்னியின் செல்வனுக்கு திரை வடிவம் தர முயற்சித்தபோது எழுத்தாளர் ஜெயமோகனை திரைக்கதை எழுதினார். அந்த கதையில் நடிக்க விஜய் ஆசைப்பட்டார். தற்போது ஈராஸ் நிறுவனமும் ஜெயமோகனையே அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்புக்குத் தேவையான ஏற்பாடுகள் நடைபெறுவதாக ஈராஸ் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024