Sunday, March 29, 2015

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை... இஎம்ஐ செலுத்துபவர்கள் தவிப்பு!

சென்னை/மும்பை: வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருவதால் கடன் தவணையை செலுத்துபவர்கள் தவிப்பில் உள்ளனர். ம்ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது.

மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1ஆம் தேதிகளில் ஆண்டு கணக்கு முடிப்புக்காக வங்கிகள் செயல்படாது.

ஏப்ரல் 2ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் அன்றைய தினமும் வங்கிகளுக்கு விடுமுறை. அடுத்து ஏப்ரல் 3ஆம் தேதி புனித வெள்ளியன்று வங்கிகளுக்கு விடுமுறை. அடுத்து வரும் சனிக்கிழமை அரைநாள் மட்டுமே வங்கிகள் செயல்படும். அடுத்து ஞாயிறு விடுமுறையாகும்.

இதனால் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்படும் என தெரிகிறது. வங்கிகளில் வீட்டுக்கடன் மற்றும் பெர்சனல் லோன் வாங்கியவர்கள், அந்த கடனை திருப்பி செலுத்தும் தவணை தேதிகளாக பெரும்பாலான வங்கிகளில் 1, 4, 7 ஆகிய தேதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு மாதத்தின் கடைசி நாளில் சம்பளம் வங்கிகளில் செலுத்தப்படுகிறது. தனியார் நிறுவனங்களிலும் 1 முதல் 5 வரை அந்தந்த நிறுவனங்களுக்கு தகுந்தவாறு ஊதியம் கிரெடிட் செய்யப்படுகிறது.  பெரும்பாலோனார் இந்த சம்பளத்தை கொண்டே தங்களது கடன் தவணைக்கான பணத்தை இஎம்ஐ எடுக்கப்படும் வங்கி கணக்கில் செலுத்துகின்றனர் அல்லது சம்பளம் கிரெடிட் ஆகும் வங்கி கணக்கில் இஎம்ஐ தொகை எடுக்கப்படுகிறது. இந்நிலையில்  தொடர் விடுமுறை காரணமாக சம்பளம் வழக்கமான தேதியில் கிடைப்பது தாமதம் ஆகும் என்பதால், உரிய தேதியில், குறிப்பாக 4 ஆம் தேதி இஎம்ஐ உள்ளவர்கள் தவிக்கின்றனர். ஏனெனில் அன்றைய தினம் வங்கி செயல்படும் ( சனிக்கிழமை) என்பதால் இஎம்ஐ வந்துவிடும்.  இதனால் வங்கிகளின் தொடர் விடுமுறை குறித்த தகவலை முன்கூட்டியே அறிந்திராதவர்கள் கடைசி நேரத்தில் கையை பிசைந்துகொண்டிருக்கின்றனர்.  

மேலும், தொடர்விடுமுறை காரணமாக ஏடிஎம்-கள் செயல்படாத நிலை ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிகளை சந்திக்க நேரிடும். அவசரத்துக்கு பணம் தேவை உள்ளவர்கள் முன்னதாகவே ஏடிஎம் சென்று தேவையான பணத்தை எடுத்துக் கொள்வது நல்லது.

இதற்கு மாற்று ஏற்பாடு செய்யுமாறு ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசை தொழில் கூட்டமைப்பான அசோசேம் வலியுறுத்தியுள்ளது. தொடர் விடுமுறையால் வாடிக்கையாளர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாவார்கள் என்றும் அது சுட்டிக் காட்டியுள்ளது.

இத்தகைய தொடர் விடுமுறை பங்குச் சந்தையில் பண பரிவர்த்தனையை பாதிக்கும் என்றும், ஏற்றுமதி, இறக்குமதி, சம்பள பட்டுவாடா உள்ளிட்டவை பாதிப்புக்குள்ளாகும் என்றும் அசோசேம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி தலையிட்டு வங்கிகளுக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு வலியுறுத்தியுள்ளதாக அசோசேம் கூறியுள்ளது.

வங்கிகளில் பெரும்பாலானவை பொதுத்துறை வங்கிகள் என்பதால் இதில் நிதித்துறை தலையிட்டு வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு தீர்வு காணலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

தொழில்துறையின் பல்வேறு பிரிவுகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், இதற்குத் தீர்வு காண வேண்டியது அவசியம் என்று அசோசேம் செயலர் டி.எஸ்.ரவாத் வலியுறுத்தியுள்ளார்.
 
பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்

இதனிடையே வரும் திங்கட்கிழமை முதல் 6 நாட்கள் வங்கிகள் செயல்படுவது குறித்து வெளியான தகவல்களுக்கு நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, 30ம் தேதி திங்கட்கிழமையும், 31ம் தேதி செவ்வாய்க்கிழமையும் வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
 
ஏப்ரல் 1ஆம் தேதி ஆண்டு கணக்கு முடிவு, 2 மற்றும் 3ம் தேதி மஹாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி ஆகிய நாட்களில் வங்கிகள் செயல்படாது என்றும், 4ம் தேதி சனிக்கிழமை வங்கிகளில் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சனிக்கிழமை அரசு கருவூலத்துக்கு விடுமுறை என்ற நிலையில், அரசு ஊழியர் ஊதியம் 6ஆம் தேதிக்கு தள்ளிப் போக நேர்ந்தால், அதற்கு வங்கிகள் பொறுப்பாகாது என்றும் பாரத ஸ்டேட் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...