Wednesday, March 25, 2015

சகிப்பின்மைக்குக் கிடைத்த சவுக்கடி



தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 ‘ஏ’ பிரிவு, அரசியல் சட்டம் அளிக்கும் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் விதத்தில் இருப்பதால் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலோ, சமூகத்தில் ஒழுங்கைக் கெடுக்கும் விதத்திலோ, பிற நாடுகளுடன் இந்தியாவுக்குள்ள உறவைக் குலைக்கும் வகையிலோ கருத்துகள் பதிவிடப்பட்டால் அந்த இணையதளத்தை அரசு முடக்கிவைக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பில் கூறியுள்ளது. நீதிபதிகள் ஜே. சலமேஸ்வர், ரோஹின்டன் ஃபாலி நாரிமன் அடங்கிய அமர்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பை வெளியிட்டிருக்கிறது.

“தகவல்களை அறிந்துகொள்வதற்கு மக்களுக்குள்ள உரிமையைத் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) சட்டத்தின் 66 (ஏ) பிரிவு பாதிக்கிறது. அத்துடன், பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றுக்கும் குந்தகம் விளைவிக்கிறது. இந்தச் சட்டத்தில் விவரிக்கப்படும் ‘குற்றம்’, எந்த விதத்தில் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பது தெளிவாகக் குறிப்பிடப் படவில்லை. இந்தச் சட்ட வாசகத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பொருள் கொள்ளும் வகையில் அமைந்துள்ளன” என்று அமர்வு சுட்டிக்காட்டியிருக்கிறது.

மேலும், “விவாதம், ஒரு கருத்துக்கு ஆதரவு தேடுதல், தூண்டி விடுதல் என்ற மூன்றுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. ஒரு பொருள் பற்றி விவாதிப்பதோ, ஒரு கருத்துக்கு ஆதரவு திரட்டுவதோ சிலருக்கு எரிச்சலை ஊட்டினாலும் அதை அனுமதித்தாக வேண்டும்” என்றும் அமர்வு கூறியுள்ளது.

“ஒரு சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்புகள் இருப்பதால், அந்தச் சட்டத்தையே அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று கூறிவிட முடியாது” என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. “பேச்சுரிமையையோ கருத்துரிமையையோ கட்டுப்படுத்த அரசு விரும்பவில்லை. அதே வேளையில், இணையதளம் போன்ற ‘சைபர்’ மேடைகளை எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமலும் அனுமதித்துவிட முடியாது” என்றும் அரசுத் தரப்பு கூறியிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் மாநில அமைச்சரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஆசம் கான் பற்றி முகநூலில் 18 வயது பள்ளி மாணவர் ஒருவர் தெரிவித்த கருத்து ஆட்சேபகரமானது என்பதால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66 (ஏ) பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் கைது தொடர்பாக மாநில அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கையும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இந்த நிலையில், இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

சிவசேனைத் தலைவர் இறந்தபோது ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்ததற்காக 2 இளம் பெண்களும், தற்போது ஒரு பள்ளிக்கூட மாணவரும் கைது செய்யப்பட்ட இதுபோன்ற சம்பவங்களிலிருந்து இந்தச் சட்டம் எப்படி சரியான ஆலோசனைகள் இன்றி, குழப்பம் தரும் விதத்தில் இயற்றப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. நல்ல சட்டங்களையே தவறாகப் பயன்படுத்தும் ஆட்சியாளர்கள், மோசமாக உருவாக்கப்பட்ட சட்டங்களை வைத்துக்கொண்டு அப்பாவிகளை எப்படி அலைக்கழிப்பார்கள் என்பதை விவரிக்க வேண்டியதில்லை. ஆகவே, சகிப்பின்மைக்குக் கிடைத்த சவுக்கடி என்றே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கருத வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024