இந்தியா முழுவதும் கார்கில் நிதி திரட்டப்பட்ட காலகட்டம் அது. மதுரையில் கலை நிகழ்ச்சி நடத்தி, தமிழ் திரையுலகினரும் நிதி திரட்டி அனுப்ப முடிவு செய்தனர். அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் விஜயகாந்த்.
அப்போது நடந்த சம்பவம் ஒன்றை, நம்மிடம் சம்பந்தப்பட்டவர் நினைவுகூர்ந்தார்.
மதுரையில் கலை நிகழ்ச்சி நடைபெற்ற நாளில் நடிகர், நடிகைகள் சென்னை திரும்புவதற்கு, இரவு 8:01-க்கு கிளம்பும் ரயிலில் இரண்டு பெட்டிகள் கடைசியாக இணைக்கப்பட்டது. ஆனால், கலை நிகழ்ச்சி முடிய தாமதமாகி விட்டது. முன்பே தீர்மானித்து அனைவரையும் தங்கியிருக்கும் அறையில் இருந்து துணிகளை பேக் செய்துகொண்டு வந்துவிடுங்கள் என்று அறிவுறுதப்பட்டது. அதன்படியே அனைவருமே கலை நிகழ்ச்சி முடிவுற்றவுடன், ரயிலுக்கு கிளம்ப ஆயுத்தமாகி வந்தனர்.
கலைநிகழ்ச்சி முடிய தாமதமாகி, ரயில் நிலையத்துக்கு வந்தார்கள். நடிகர், நடிகைகளுக்காக ரயில் காத்திருந்தது. அனைவரும் அவசர அவசரமாக ரயிலில் ஏறினார். புறப்பட்டது ரயில்.
மதுரையைத் தாண்டி சோழவந்தான் அருகே ரயில் வந்துகொண்டிருந்தது. அப்போது விஜயகாந்த்தை சந்தித்து "நாங்கள் யாருமே சாப்பிடவில்லை கேப்டன்..!" என்றார்கள் சக கலைஞர்களின் பிரதிநிதிகள் சிலர்.
அதைக் கேட்ட விஜயகாந்த்துக்கு அதிர்ச்சி. அப்போது சட்டென ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். சாலை ஓரம் வரிசையாக ரோட்டோர சாப்பாடுக் கடைகள் இருந்ததைக் கண்டார்.
சற்றும் தாமதிக்காமல், தனது தலைக்கு மேல் இருந்த செயினைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினாராம் விஜயகாந்த். அவருடன் இருந்தவர்களுக்கு பேரதிர்ச்சி. உடனடியாக வேஷ்டியை தூக்கிக் கட்டிக் கொண்டு, சாப்பாடு கடை நோக்கி ஒட ஆரம்பித்தார் விஜயகாந்த். உடன் இருந்தவர்கள் அவர் பின்னால் ஓடினார்கள்.
"கடையில் இருக்கும் அத்தனையும் கட்டுங்கள். நான் எதுவும் எடுத்து வரவில்லை. ஆகையால் பாத்திரத்துடன் கொடுங்கள். அதற்கும் சேர்த்து பணம் கொடுத்துவிடுகிறேன்" என்று கடைக்காரிடம் விஜயகாந்த் தெரிவித்தாராம்.
"விஜயகாந்த் வந்தார். கடையை கொள்ளையடித்து போய்விட்டார் என்று யாரும் சொல்லிவிட கூடாது" என்று கூறியபடி தன் பையில் இருந்த பணம், உடனிருந்தவர்கள் கையில் இருந்த பணம் என அனைத்தையும் வாங்கி கடைக்காரிடம் கொடுத்துவிட்டு சாப்பாடு, பரோட்டாக்கள், குழம்புகளுடனான பாத்திரங்களைச் சுமந்துகொண்டு விஜயகாந்த் தலைமையிலான கலைஞர்கள் சிலர் ரயிலுக்குத் திரும்பினர்.
பின்னர் ரயில் கிளம்பியது. சக கலைஞர்கள் அனைவரும் பசியாற சாப்பிட்டனர், விஜயகாந்தின் துணிகர செயலை நெகிழ்ச்சியுடன் சிலாகித்தபடி!
அதேவேளையில், கார்கில் நிதி திரட்டுவதற்காக பயணம் மேற்கொண்டதைக் கருத்தில்கொண்டு, இந்தச் செயலுக்கு நல்லெண்ணத்துடன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம் ரயில்வே நிர்வாகம்.
No comments:
Post a Comment