Thursday, September 8, 2016

கண்ணீரும் புன்னகையும்: கருக்கலைப்புக்கு மறுத்ததால் கொலை முயற்சி


ஆந்திர மாநிலத்தின் முதுக்கூர் கிராமத்தில் கர்ப்பிணிப் பெண் கருக்கலைப்பு செய்ய மறுத்ததால், கணவர் வீட்டாரின் கொலைமுயற்சிக்கு ஆளானார். ஏற்கெனவே ஒரு பெண் குழந்தைக்குத் தாயான கிரிஜா, இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தபோது, ஜோதிடர் ஒருவர் மீண்டும் பெண்குழந்தைதான் பிறக்கும் என்று கூறியிருக்கிறார். அவருடைய மாமியாரும் மைத்துனியும் கிரிஜாவைக் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியுள்ளனர். ஆனால் கிரிஜா அதற்கு மறுத்தார். இந்நிலையில் கிரிஜா உறங்கும் நேரத்தில் அவர் வயிற்றில் அமிலம் கலந்த மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்றனர். கிரிஜா கூச்சல் போட ஊரார் வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கிரிஜா தற்போது தேறிவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தண்ணீருக்காக 20 கோடி மணி நேரம்

உலகம் முழுவதும் பெண்களும் பெண்குழந்தைகளும் தண்ணீர் சேகரிப்பதற்காக மட்டுமே தினமும் 20 கோடி மணி நேரத்தைச் செலவழிப்பதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நீர் வாரம் கடந்த திங்களன்று தொடங்கியதை அடுத்து இந்தச் செய்தியை யுனிசெப் வெளியுட்டுள்ளது. சுத்தமான நீரும், அடிப்படை சுகாதார வசதிகளும் முப்பது நிமிடப் பயணத் தொலைவுக்குள் உலகில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் கிடைக்க வைப்பதுதான் ஐ.நா. சபையின் வளம் குன்றா வளர்ச்சி இலக்காக உள்ளது என்று யுனிசெப் குளோபல் ஹெட் ஆஃப் வாட்டர் சானிட்டேஷன் அண்ட் ஹைஜீனின் உலகத் தலைவர் சஞ்சய் விஜிசேகரா கூறியுள்ளார். வீட்டுக்கு அருகே தண்ணீர் கிடைக்காதபோது, தண்ணீர்த் தேவையை நிறைவேற்றும் பொறுப்பு பெண்கள், பெண் குழந்தைகளின் தலையிலேயே விழுவதாகவும் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் குடும்பத்தோடு செலவழிக்கும் நேரமும் ஓய்வு நேரமும் குழந்தைகளைப் பராமரிக்கும் நேரமும் குறைகிறது. பெண்குழந்தைகளின் கல்வி குறிப்பாகப் பாதிக்கப்படுகிறது என்று யுனிசெப் எச்சரித்துள்ளது.

Wednesday, September 7, 2016

ரயில் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி : தாய் காலும் துண்டானது; சித்தப்பிரமையான நபர்

சென்னை: மாம்பலம் ரயில் நிலையத்தில், தஞ்சையில் இருந்து சென்னை வந்த மன்னை விரைவு ரயிலில், கணவன் கண் முன்னே, மனைவி தவறவிட்ட ஒன்றரை வயது குழந்தை

பலியானது; தாய்க்கும் கால் துண்டானது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரவடிவேல், 40; பேராசிரியர். சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி லட்சுமி, 32. கே.கே.நகர் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு, ஒன்றரை வயதில் ஏகஸ்ரீ என்ற மகள் இருந்தாள். கடந்த வாரம், சொந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவிற்கு, குடும்பத்துடன் சுந்தரவடிவேலு, விழா முடிந்து, நேற்று முன்தினம் இரவு, 9:15 மணிக்கு, தஞ்சையிலிருந்து சென்னைக்கு வரும் மன்னை விரைவு ரயிலில், மனைவி மற்றும் குழந்தையுடன், முன்பதிவு செய்யப்பட்ட, இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணித்தார்.




கோர சம்பவம் : சென்னை, மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி, கே.கே.நகர் செல்வது எளிது என்பதால், அந்த ரயில் நிலையத்தில் இறங்குவது என, முடிவு செய்துள்ளனர். ரயில், நேற்று காலை, 5:10 மணிக்கு, மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது, துாக்கத்தில் இருந்த சுந்தரவடிவேலும் அவரது மனைவியும், ரயில் புறப்பட தயாராக இருந்த சமயத்தில், கண் விழித்து பார்த்துள்ளனர். தாங்கள் இறங்க வேண்டி ரயில் நிலையம் வந்துவிட்டதால், சொந்த

ஊரிலிருந்து எடுத்து வந்த அரிசி, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை துாக்கிக் கொண்டு சுந்தரவடிவேல் முதலில் இறங்கி உள்ளார்.அவரை தொடர்ந்து, கையில் குழந்தையை துாக்கியபடி லட்சு மியும் இறங்கி உள்ளார். அப்போது, ரயில் வேகமெடுக்கத் துவங்கியதாக தெரிகிறது. இறங்கிவிடலாம் என நினைத்து, நடைமேடையில் கால் வைக்க முயன்ற லட்சுமி, நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். இதில், லட்சுமி வைத்திருந்த குழந்தை, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே இருந்த துவாரத்தில் விழுந்தது.இதனால், ''என்னங்க... குழந்தைய காப்பாத்துங்க,'' என பதறியபடி, அந்த துவாரம் வழியாக லட்சுமி இறங்கினார். இதனால், அவரது காலும் மாட்டிக்

கொண்டது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர நிகழ்வில், குழந்தையும் மனைவியும்

உயிருக்கு போராடுவதை கண்ட சுந்தரவடிவேல் கதறி அழுத காட்சி, கல் நெஞ்சத்தையும் கரைப்பதாக இருந்தது.




மீட்கும் முயற்சி : இந்த கோர விபத்தை கண்டு, ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் கூச்சல் போட்டனர். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, குழந்தை மற்றும் லட்சுமியை மீட்கும் முயற்சியில்

ஈடுபட்டனர்.ஆனால் அந்த பச்ச மண், ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்து கிடந்தது. இடது கால் துண்டாகிக் கிடந்த லட்சுமி, மகளின் பேரை உச்சரித்தவாறு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். தகவலறிந்து வந்த, எழும்பூர் ரயில்வே போலீசார், அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையின் உடல், பிரேத பரிசோதனைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. கண் எதிரே குழந்தை இறந்து விட, மனைவியும் உயிருக்கு போராடு வருவதை கண்ட சுந்தரவடிவேல், பித்துப்பிடித்தவர் போல் காணப்படுகிறார்; அவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுந்தரவடிவேலின் சொந்த ஊரிலிருந்து, அவரது உறவினர்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர். நேற்று காலை நடந்த இந்த கோர விபத்தால், மாம்பலம் ரயில் நிலையம் சோகமயமாக காட்சி அளித்தது.
'என்னால முடியலடா சாமி... ஆள விடு!' : 25 பரோட்டா சாப்பிட முடியாமல் திணறல்

அன்னுார் : கோவை, அன்னுார் அருகே, 25 பரோட்டா சாப்பிடும் போட்டியில், 5,001 ரூபாய் பரிசுத் தொகை யாருக்குமே கிடைக்கவில்லை. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல நிறுவனங்களில் தள்ளுபடி விற்பனையை கேள்விப்பட்டிருப்போம். சற்று வித்தியாசமாக, கோவை அன்னுார் அருகே, ஒரு ஓட்டல் நிர்வாகம், வெண்ணிலா கபடி குழு திரைப்பட பாணியில், 25 பரோட்டாக்கள் சாப்பிட்டால், 5,001 ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தது. நேற்று முன்தினம் நடந்த போட்டியில், 200 பேர் குவிந்தனர். 

பங்கேற்றவர்களிடம், 100 ரூபாயும் பெறப்பட்டது. இதில், காலை உணவை தவிர்த்து வந்தவர்கள் தான் ஏராளம். முதல் சுற்றில், ஐந்து பேர் பங்கேற்றனர். குருமாவை அதிகம் தொட்டுக் கொண்டால், பரோட்டா சாப்பிட முடியாது என்று உணர்ந்த பலர், பரோட்டாவை மட்டுமே, 'ருசி' பார்த்தனர்; நீரையும் அதிகம் பருகவில்லை. இதில், செல்வபுரத்தை சேர்ந்த பசும்பொன் அழகுக்கு மட்டுமே, 10 பரோட்டாக்களை விழுங்க முடிந்தது.இரண்டாவது சுற்றில், பங்கேற்ற ஆறு பேரில், ஒருவர் கூட, ஏழு பரோட்டாவை தாண்டவில்லை. மூன்றாவது சுற்றில், யாரும் பங்கேற்காததால், 20 பரோட்டா சாப்பிட்டாலே, பரிசுத் தொகை வழங்கப்படும் என, ஓட்டல் உரிமையாளர் தெரிவித்தும், ஒருவரும் அசைந்து கொடுக்கவில்லை.

 பரோட்டாவை சாப்பிட்டவர்கள், அதற்குரிய பணத்தை கொடுத்து, பரிசு வாங்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் திரும்பினர். சாப்பிட வந்தவர்களை விட, பார்க்க வந்த கூட்டமே அதிகம். பத்து பரோட்டா சாப்பிட்ட பசும்பொன் அழகு கூறுகையில், ''செல்வபுரத்தில் பரோட்டா மாஸ்டராக உள்ளேன். சாதாரணமாக, காலையில், 20 பரோட்டா சாப்பிடுவேன். இங்கு, 10க்கு மேல் சாப்பிட முடியவில்லை. பரோட்டாவின் எடை மற்றும் எண்ணெய் அதிகமாக இருந்தது, இதற்கு காரணம்,'' என்றார். பரிசுத் தொகை வாங்க முடியவில்லை என்ற ஏக்கமும், யாருக்கு கிடைக்கும் என்ற பொதுமக்களின் ஆர்வமும், கடைசி வரை நிறைவேறாமலே போனது.
எஸ்.ஆர்.எம்., பல்கலையிடம் பணம் பறிக்க முயற்சி : சமூக விரோதிகள் மீது பதிவாளர் போலீசில் புகார்

DINAMALAR
சென்னை: எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி, சமூக விரோதிகள் பணம் பறிக்க முயற்சி செய்வதாக, பல்கலை பதிவாளர், போலீசில் புகார் செய்துள்ளார்.

எஸ்.ஆர்.எம்., பல்கலை பதிவாளர் சேதுராமன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார் மனு: ஒன்பது ஆண்டுகளாக, எஸ்.ஆர்.எம்., பல்கலை பதிவாளராக உள்ளேன். எங்கள் பல்கலை., பொறியியல், மருத்துவம், சட்டம் என, பல்வேறு பிரிவுகளில், உயர்தர கல்வியை அளித்து வருகிறது. துரதிஷ்டவசமாக, டாக்டர் ஜெயச்சந்திரன் உட்பட சிலர் அளித்த புகாரால், எங்கள் பல்கலை வேந்தரான, பச்சமுத்து, ஆக., 25ல், போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார்; அவரை ஜாமினில் எடுக்க முயன்று வருகிறோம்.

பச்சமுத்து நடத்தி வரும், இந்திய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலராக, மதன் என்பவர் இருந்தார். அவர், பச்சமுத்துவுடன் இருந்த பழக்கத்தை பயன்படுத்தி, எஸ்.ஆர்.எம்., பல்கலையில், மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக, பல கோடி ரூபாய் சுருட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார். அவர் மீது, பெற்றோர், மாணவர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில், பச்சமுத்துவையும், மோசடி குற்றச்சாட்டில், மதன் சேர்த்து விட்டார். இதனால் ஏற்பட்டுள்ள களங்கத்தை, பச்சமுத்து, சட்டரீதியாக எதிர்கொண்டு, தான் நிரபராதி என்பதை நிரூபிப்பார்.

பெற்றோர் மற்றும் மாணவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை பச்சமுத்து மறுத்துள்ள போதிலும், ஜாமின் மனுவில், புகார் தாரர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், 69 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் கட்டி விடுவதாக கூறி உள்ளார்.இந்நிலையில், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி, தொழில் முறை எதிரிகள், சமூக விரோதிகள், புகார்தாரர்களில் ஒரு சிலர், எங்களுக்கு பல வடிவங்களில் மிரட்டல் கொடுத்து, பணம் பறிக்க முயன்று வருகின்றனர். நாங்கள் ஏற்கனவே, சட்ட ரீதியாக எதிர்கொண்டு, தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளிலும், சம்பந்தப்பட்டோர் பணம் பறிக்க முயன்று வருகின்றனர்; எங்கள் பல்கலையை முடக்க சதி நடக்கிறது. நீங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், சமூக விரோத கும்பல்கள், எங்களிடம் பணம் பறிப்பதுடன், உயிருக்கும் ஆபத்தும் ஏற்படுத்தி விடுவர். எங்கள் கல்வி நிறுவனங்களில் பயிலும், 52 ஆயிரம் மாணவ, மாணவியரின் எதிர்காலம் கருதி, எங்களிடம் பணம் பறிக்க முயலும் கும்பல் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆடு மேய்த்த சிறுமி இன்று கல்வி அமைச்சர்!


‘வாழ்க்கை என்பது பெரும் போராட்டம்தான்; அதற்காகப் போராடாமல் விட்டுவிட முடியுமா?’ என்பதை இளம் வயதிலேயே உணரத் தொடங்கியவர் நஜா வெலு பெல்காசம் (Najat Vallaud-Balkacem). இன்று ‘பிரான்ஸின் புதிய முகம்’ எனக் கொண்டாடப்படும் இவர் வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் ஒரு குக்கிராமத்தில் வறுமைப் பிடியில் வாடிய இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். அப்பா கட்டிடத் தொழிலாளர்; உடன் பிறந்தவர்கள் ஆறு பேர். இளந்தளிர் நஜா நான்கு வயதில் ஆடு மேய்க்க விடப்பட்டார். வறுமை வாழ்க்கை விளிம்புக்குத் தள்ள ஆப்பிரிக்காவை விட்டுப் புலம்பெயர்ந்து பிரான்ஸில் குடியேறும் நிலைக்கு நஜாவின் குடும்பம் தள்ளப்பட்டது.

எதையும் சந்திப்பேன்!

பிறந்த பூமியை, உறவினரை, நண்பர்களை, பழக்கப்பட்ட கலாச்சாரத்தை திடீரென்று உதறிவிட்டு முற்றிலும் அந்நியமான சூழலில் வாழ்க்கையைத் தொடங்குவது மிகப் பெரிய சவால்! பள்ளிப் பாடங்களைப் படிப்பது முதல் பிரெஞ்சு மொழியைப் பேசுவது அதன் கலாச்சாரத்தைப் பழகிக்கொள்வதுவரை திகைப்பும் தடுமாற்றமும் ஆரம்ப நாட்களில் நஜாவுக்கு இருந்தது. ஆனால் தனக்கு நேர்ந்த அனுபவத்தைத் துணிச்சலாகவும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொண்டார் இளம் நஜா.

பிரான்ஸின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான பாரிஸ் அரசியல் ஆய்வுகள் கல்வி நிறுவனத்தில் (Institut detudes politiques de Paris) 2002-ல் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே வேளையில் பகுதி நேர வேலைக்குச் சென்று குடும்ப பாரத்தையும் தாங்கினார். சக மாணவர் போரிஸ் வெலுவோடு காதல் மலரவே கல்வியோடு காதலும் கைகூடியது. இருவரும் 2005-ல் தம்பதிகள் ஆனார்கள்.

புதிய திறப்பு

அரசியல் கல்வி அரசியலுக்கான கதவுகளைத் திறந்தது. வேலையில்லாத் திண்டாட்டம், அகதிகள், புலம்பெயர்ந்தவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்தல், நிறப் பாகுபாடு உள்ளிட்ட அரசியல் பிரச்சினைகள் அன்றைய காலகட்டத்தில் பிரான்ஸில் நிறைந்திருந்தன. இது போன்ற பிரச்சினைகளில் பிரெஞ்சு அரசு கொண்டிருந்த கொள்கைகள் மீது நஜாவுக்குக் கடுமையான அதிருப்தி ஏற்பட்டது. ஜனநாயகத்தை நிலைநாட்டவும், குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அரசியலில் ஈடுபடுவது என முடிவெடுத்து சோஷலிஸ்ட் கட்சியில் 2002-ல் சேர்ந்தார். லியான் நகர மேயரான ஜெரார்து கோலம்பை ஆதரித்து முழு மூச்சாக அரசியலில் 2003-ல் இறங்கினார். ரோன் - ஆப்ஸ் பிராந்திய சபையின் கலாச்சாரக் கழகத் தலைவராக 2004-ல் நஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே சோஷலிஸ்ட் கட்சியின் ஆலோசகரானார்.

2008-ல் அவர் முதன்முதலில் களமிறங்கிய லியான் நகருக்கே கவுன்சிலரானார். 2012-ல் பெண்கள் அமைச்சகத்தின் அமைச்சரானார். 2013-ல் தன்பாலின உறவாளர்களின் திருமணத்தைச் சட்டரீதியாக பிரான்ஸ் அங்கீகரித்ததை “இது வரலாற்று முன்னேற்றம்” என துணிச்சலாகப் பாராட்டி ஆதரித்தார். சமூக வலைத்தளமான டிவிட்டரை வெறுப்பு அரசியலுக்குப் பிரயோகிக்கக் கூடாது என்கிற சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். அதை அடுத்து, நகர்சார் விவகாரங்களுக்கான அமைச்சர், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், அரசாங்கச் செய்தி தொடர்பாளர் எனப் பல பதவிகள் வகித்தார்.

சாதனைப் பெண்

2014-ல் பிரான்ஸ் அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தபோது பல அமைச்சர்களின் பதவிகள் பறிபோயின. ஆனால், நஜாவின் திறமைக்காகவும் போராட்டக் குணத்துக்காகவும், அதுவரை அவர் வகித்துவந்த பொறுப்புகளில் சிறப்பாகப் பங்காற்றியதற்காகவும் 2014-ல் கல்வித் துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புலம்பெயர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண் 38 வயதில் பிரான்ஸின் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அமைச்சராக ஆனது மிகப் பெரிய வரலாற்று நிகழ்வு. பிரான்ஸின் முதல் பெண் கல்வி அமைச்சர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரர் அவர். நிஜமாகவே நஜா பிரான்ஸுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே உற்சாகமூட்டும் புதிய முகம்தான்!

50 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்தால் சில்வர் அண்டா ஃப்ரீ..!- இது புது கலாட்டா!



அழகுக்கு அழகு சேர்க்கும் தங்க நகைகளை அணிவதை விட நடுத்தரவர்க்கத்தினர் அடகு வைக்க அதிகம் பயன்படுத்துகின்றனர். சமீபகாலமாக தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் தங்க நகைகளுக்கு வழங்கப்படும் கடன் மதிப்பும் அதிகரித்துள்ளது. தங்க நகைகளை உரசிப்பார்த்து உடனடியாக வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது. இதில் தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தங்க நகைகளுக்கு கடன் வழங்க கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்து தனியார் வங்கிகள் தங்க நகைகளுக்கு கடனை அள்ளி கொடுக்கின்றன. சில வங்கிகள் ஞாயிற்று கிழமைகளில் கூட தங்க நகைகளுக்கு கடன் வழங்குகின்றன.

இந்த போட்டி காரணமாக தனியார் நிதி நிறுவனங்கள், அடகு கடைகள் (பான்புரோக்கர்ஸ்) பிசினஸ் இல்லாமல் தள்ளாட ஆரம்பித்து விட்டன. காரணம் வங்கிகளை விட இங்கு கூடுதல் வட்டி. வங்கிகளில் ஆயிரத்தெட்டு நடைமுறைகளுக்குப் பிறகே தங்க நகைகளுக்கு கடன் வழங்கப்படும். ஆனால், நிதிநிறுவனங்கள், அடகு கடைகளில் நடைமுறைகள் பெயரளவுக்குத் தான் இருக்கும்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் போட்டி போட்டு தங்க நகைகளுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதால் அடகு கடைகளில் பிசினஸ் டல்லாகி விட்டதாக அதன் உரிமையாளர்கள் சொல்கிறார்கள். இதனால் அடகு கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களை கவர புதிய யுக்தியை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளனர். வழக்கமாக ஜவுளி கடைகள் தான் பரிசு திட்டத்தை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பார்கள். அதே நடைமுறையை செய்யாறு அடகு கடைக்காரர்கள் கடைப்பிடித்துள்ளனர். இதற்காக ஸ்கூட்டி முதல் டிபன் பாக்ஸ் வரை பரிசுகளை அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்யாறு பகுதியில் பிட் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளன. அதில் எங்களிடம் 50 ஆயிரம் ரூபாய்க்கு நகைகளை அடகு வைத்தால் பெரிய சில்வர் அண்டா இலவசமாக வழங்கப்படும். 30 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்தால் சில்வர் பானை இலவசம். 10 ஆயிரத்துக்கு அடகு வைத்தால் எவர்சில்வர் பேஷன் இலவசம், 5 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்தால் டிபன் பாக்ஸ் இலவசம் என்று அதிரடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்படும் நகைகளுக்கு ஒரு கூப்பன் வழங்கப்படும். 1.11.2016ல் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்.மகேஷ்

ராயல் என்ஃபீல்டு பைக் விலை கிடுகிடு ஏற்றம்!


இந்தியாவில் தான் விற்பனை செய்யும் பைக்குகளின் விலையை, ஆகஸ்ட் மாத இறுதியில் கணிசமாக உயர்த்தியது. இந்த புதிய விலைகள், செப்டம்பர் மாதம் முதலாக அமலுக்கு வந்துள்ளன. ஆக ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை ஏற்றத்துக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 1955 முதலாக இந்தியாவில் பைக்குகளை விற்பனை செய்யும் ராயல் என்ஃபீல்டு, அதன் டிஸைனில் பெரிய அளவில் மாற்றங்களைச் செய்யாதது மைனஸ்தான் என்றாலும், இந்த பைக்குகளுக்கான ரசிகர் வட்டம் காலப்போக்கில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனுடன் பைக்குகளுக்கான வெயிட்டிங் பீரியட்டும் அதிகரித்து வருவதை இங்கு சொல்லியாக வேண்டும். ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் புதிய சென்னை ஆன் ரோடு விலைப்பட்டியல் பின்வருமாறு;

350சிசி பைக் மாடல்கள்:

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350: 1,23,228
ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரா 350: 1,38,992
ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350: 1,47,833
ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350: 1,59,401

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்: 1,76,035

500சிசி பைக் மாடல்கள்:

ராயல் என்ஃபீல்டு புல்லட் 500: 1,76,837
ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 500: 1,88,582
ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 500 டெஸர்ட் ஸ்டார்ம்: 1,91,688
ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 500 க்ரோம்: 2,00,371
ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500: 2,02,007
ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி: 2,23,303

NEWS TODAY 2.5.2024