ஆடு மேய்த்த சிறுமி இன்று கல்வி அமைச்சர்!
ம.சுசித்ரா
‘வாழ்க்கை என்பது பெரும் போராட்டம்தான்; அதற்காகப் போராடாமல் விட்டுவிட முடியுமா?’ என்பதை இளம் வயதிலேயே உணரத் தொடங்கியவர் நஜா வெலு பெல்காசம் (Najat Vallaud-Balkacem). இன்று ‘பிரான்ஸின் புதிய முகம்’ எனக் கொண்டாடப்படும் இவர் வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் ஒரு குக்கிராமத்தில் வறுமைப் பிடியில் வாடிய இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். அப்பா கட்டிடத் தொழிலாளர்; உடன் பிறந்தவர்கள் ஆறு பேர். இளந்தளிர் நஜா நான்கு வயதில் ஆடு மேய்க்க விடப்பட்டார். வறுமை வாழ்க்கை விளிம்புக்குத் தள்ள ஆப்பிரிக்காவை விட்டுப் புலம்பெயர்ந்து பிரான்ஸில் குடியேறும் நிலைக்கு நஜாவின் குடும்பம் தள்ளப்பட்டது.
எதையும் சந்திப்பேன்!
பிறந்த பூமியை, உறவினரை, நண்பர்களை, பழக்கப்பட்ட கலாச்சாரத்தை திடீரென்று உதறிவிட்டு முற்றிலும் அந்நியமான சூழலில் வாழ்க்கையைத் தொடங்குவது மிகப் பெரிய சவால்! பள்ளிப் பாடங்களைப் படிப்பது முதல் பிரெஞ்சு மொழியைப் பேசுவது அதன் கலாச்சாரத்தைப் பழகிக்கொள்வதுவரை திகைப்பும் தடுமாற்றமும் ஆரம்ப நாட்களில் நஜாவுக்கு இருந்தது. ஆனால் தனக்கு நேர்ந்த அனுபவத்தைத் துணிச்சலாகவும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொண்டார் இளம் நஜா.
பிரான்ஸின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான பாரிஸ் அரசியல் ஆய்வுகள் கல்வி நிறுவனத்தில் (Institut detudes politiques de Paris) 2002-ல் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே வேளையில் பகுதி நேர வேலைக்குச் சென்று குடும்ப பாரத்தையும் தாங்கினார். சக மாணவர் போரிஸ் வெலுவோடு காதல் மலரவே கல்வியோடு காதலும் கைகூடியது. இருவரும் 2005-ல் தம்பதிகள் ஆனார்கள்.
புதிய திறப்பு
அரசியல் கல்வி அரசியலுக்கான கதவுகளைத் திறந்தது. வேலையில்லாத் திண்டாட்டம், அகதிகள், புலம்பெயர்ந்தவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்தல், நிறப் பாகுபாடு உள்ளிட்ட அரசியல் பிரச்சினைகள் அன்றைய காலகட்டத்தில் பிரான்ஸில் நிறைந்திருந்தன. இது போன்ற பிரச்சினைகளில் பிரெஞ்சு அரசு கொண்டிருந்த கொள்கைகள் மீது நஜாவுக்குக் கடுமையான அதிருப்தி ஏற்பட்டது. ஜனநாயகத்தை நிலைநாட்டவும், குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அரசியலில் ஈடுபடுவது என முடிவெடுத்து சோஷலிஸ்ட் கட்சியில் 2002-ல் சேர்ந்தார். லியான் நகர மேயரான ஜெரார்து கோலம்பை ஆதரித்து முழு மூச்சாக அரசியலில் 2003-ல் இறங்கினார். ரோன் - ஆப்ஸ் பிராந்திய சபையின் கலாச்சாரக் கழகத் தலைவராக 2004-ல் நஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே சோஷலிஸ்ட் கட்சியின் ஆலோசகரானார்.
2008-ல் அவர் முதன்முதலில் களமிறங்கிய லியான் நகருக்கே கவுன்சிலரானார். 2012-ல் பெண்கள் அமைச்சகத்தின் அமைச்சரானார். 2013-ல் தன்பாலின உறவாளர்களின் திருமணத்தைச் சட்டரீதியாக பிரான்ஸ் அங்கீகரித்ததை “இது வரலாற்று முன்னேற்றம்” என துணிச்சலாகப் பாராட்டி ஆதரித்தார். சமூக வலைத்தளமான டிவிட்டரை வெறுப்பு அரசியலுக்குப் பிரயோகிக்கக் கூடாது என்கிற சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். அதை அடுத்து, நகர்சார் விவகாரங்களுக்கான அமைச்சர், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், அரசாங்கச் செய்தி தொடர்பாளர் எனப் பல பதவிகள் வகித்தார்.
சாதனைப் பெண்
2014-ல் பிரான்ஸ் அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தபோது பல அமைச்சர்களின் பதவிகள் பறிபோயின. ஆனால், நஜாவின் திறமைக்காகவும் போராட்டக் குணத்துக்காகவும், அதுவரை அவர் வகித்துவந்த பொறுப்புகளில் சிறப்பாகப் பங்காற்றியதற்காகவும் 2014-ல் கல்வித் துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புலம்பெயர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண் 38 வயதில் பிரான்ஸின் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அமைச்சராக ஆனது மிகப் பெரிய வரலாற்று நிகழ்வு. பிரான்ஸின் முதல் பெண் கல்வி அமைச்சர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரர் அவர். நிஜமாகவே நஜா பிரான்ஸுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே உற்சாகமூட்டும் புதிய முகம்தான்!
No comments:
Post a Comment