Sunday, September 11, 2016

உங்கள் விரல்களே உங்கள் மருத்துவர்!

By -சலன் 
இன்று மருத்துவத்துறை வணிகமயமாகிவிட்டது என்று எல்லாரும் சொல்கிறார்கள். நீங்கள் மருத்துவமனை சென்றாலும் செலவைப் பற்றி கவலைப்படாமல் இருக்க காப்பீட்டுத்துறையும் உங்களை கவனிக்கத் தொடங்கி விட்டது. ஆனால் இது எதுவுமே தேவை இல்லை. நீங்களே உங்கள் விரல்களின் மூலம் உங்கள் நோயைச் சரி செய்து கொள்ளலாம் என்று தைரியமாகக் கூறுகிறார், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் டாக்டர் பட்டம் பெற்ற பாசு கண்ணா. அவர் முத்திரைகளின் மூலம் நமது நோயை நாமே தீர்த்துக்கொள்ளும் முறை பற்றி கூறுகிறார்:

 
 ""உடம்பைப் பொருத்தவரை இரண்டே இரண்டு தான் நமக்கு மிக முக்கியம். ஒன்று நோய் வந்தால் சரி செய்து கொள்வது எப்படி? மற்றது நோய்வரும் முன் காப்பது எப்படி? இந்த இரண்டும் நமக்குத் தெரிந்தால் நமக்கு நாமே சிறந்த மருத்துவர்.

எனக்குச் சிறுவயது முதலே ஆராய்ச்சி என்றால் பிடிக்கும். என் மனைவி ஒரு சித்த மருத்துவர். ஒரு முறை நான் ஆராய்ச்சி செய்வதைப் பார்த்த அவர், இது நல்ல விஷயம், தொடருங்கள் என்று ஊக்கப் படுத்தினர். நமது விரல்களே நமக்கு மருத்துவம் பார்க்க முடியும் என்றால்

நம்மில் பலரும் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் அது உண்மை. ஆரம்பத்தில் நான் ஆராய்ச்சி மாணவனாக இருந்த போது முத்திரைகளைப் படிக்கப் படிக்க என் மனமும் அறிவும் விசாலமடைந்தது மட்டுமல்லாமல், உடம்பில் வித்தியாசமான ஓர் உணர்வும் ஏற்பட்டது. இதை டாக்டர் என்ற முறையில் எனது மனைவியிடம் பகிர்ந்து கொள்ள, அவர் மேலும் என்னை உற்சாகப்படுத்தினார். அன்றிலிருந்து இன்று வரை நான் முத்திரைகளைச் செய்து எனக்குத் தெரிந்த பலரையும் குணப்படுத்தி உள்ளேன்.

சுமார் 3000 முத்திரைகள் உள்ளன. ஒரு மனிதனுக்கு என்ன நோய்கள் வருமோ அதை சரி செய்ய தேவைப் படும் என்று பார்த்துப் பார்த்து முத்திரைகளை தொகுக்க ஆரம்பித்தேன். ஒரு முத்திரை ஆராய்ச்சி என்றால் அதற்கு கிட்டத்தட்ட 90,000 ரூபாய் செலவு ஆகும். ஆராய்ச்சி என்றால் மற்றவர்களை இதைச் செய்யச் சொல்லி அவர்களின் ரத்தம், மலம், சிறுநீர் பரிசோதனை மற்றும் அவர்களின் உடல் நிலையைக் கண்காணிக்க மட்டும் அல்லாமல், மற்ற செலவுகளையும் சேர்த்து ஆகும் செலவு இது. ஒரே வேளையில் என்னால் ஒரு முத்திரையை மட்டுமே ஆராய்ச்சி செய்ய முடிந்தது. இதற்குக் காரணம் பொருளாதாரம் மட்டும் அல்லாமல்,வேறு பல பிரச்னைகளும் ஏற்பட்டன. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நான் இப்படி ஆராய்ச்சி செய்ததன் பயனாக 226 முத்திரைகளைத் தேடித் தேடி கண்டுபிடித்து அதன் பயன்கள் எவை என்றும் எழுதி வைத்தேன்.

 இந்த முத்திரைகள் எல்லாமே நம் சரீரத்தில் ஏற்படும் நோய்கள் அனைத்திற்கும் மருந்தாக அமையும். நான் அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் பல்வேறு வகையான சிகிச்சை முறைகளையும் என்னுடைய ஆராய்ச்சியில் இணைத்து, அந்த அந்த முறைகளை விட நம் கை விரல்களே நமக்கு எவ்வளவு முக்கியமானது, உபயோககரமானது, சிறந்தது என்று நிரூபிக்கும் வகையில் செய்ததால், இதை பலரும் பின்பற்றுகிறார்கள். இந்த முத்திரைகளைச் செய்ய ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது. வலி உள்ளவர்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் கிடையாது. வரும்முன் காப்போம் என்று நான் முன்பே சொன்னேன் அல்லவா? அது போல நோய் இல்லாதவர்களும், நோய் வரும் என்று நினைப்பவர்களும், ""உதாரணமாக சார் எனக்கு ஜுரம் வரும் போல இருக்கு... தொண்டை கரகரனு இருக்கு சார், இருமல்ல கொண்டு போய் விட்டுடுமோ?'' என்றெல்லாம் கேட்பவர்களுக்கு இந்த முத்திரைகள் மிக மிக உபயோகமாக இருக்கும். குறிப்பாக ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த வேண்டும்.

முத்திரைகளால் 21 நாட்களில் ரத்த குழாய் அடைப்பைச் சரி செய்ய முடிந்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல், வேலை செய்யாத சிறுநீரகத்தை இந்த முத்திரைகள் வேலை செய்ய வைத்திருக்கின்றன. இப்படி பல உதாரணங்களை என்னால் சொல்லிக் கொண்டே போக முடியும்.

முத்திரைகளை நாம் உட்காரும்போது மட்டுமே செய்ய வேண்டும். நடக்கும் போதோ அல்லது படுக்கும் நிலையிலோ செய்வது சரி அல்ல. ஒரு முத்திரையை சுமார் 20 மற்றும் 30 நிமிடங்களுக்கு செய்தால் நலம். உணவு உண்ட பின் சுமார் அரை மணிநேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்குப்பின் செய்தால் பலன் அதிகமாகும்.

என் மகள் அம்ருதவானி பிட்ஸ் பிலானியில் படித்துக் கொண்டு இருக்கிறாள். ஒரு நாள் அவளுக்குத் தலைவலி. அவளது அறை தோழி ஒரு சில முத்திரைகளைச் சொல்லி இதை செய்தால் உனக்கு குணமாகிவிடும் என்றாள். எங்கிருந்து இந்த முத்திரைகளைக் கற்றாள் என்று என் மகள் அவளிடம் கேட்டாள். ""நான் டிவியில் பார்த்தேன். யூடியூபில்லும் இருக்கிறது. நீ தைரியமாகப் பண்ணலாம். உன் தலை வலி பறந்து விடும்'' என்று சொல்ல என் மகள் உடனே எனக்கு தொலைபேசியில் அழைத்து, ""டாடி உங்கள் முயற்சி வீண் போகவில்லை'' என்று பெருமையுடன் கூறினாள். நான் செலவு செய்தாலும் எல்லாரும் இன்புற்றிருப்பதே என் நோக்கம் என்று ஒரு கால கட்டத்திலிருந்து யார் கேட்டாலும் இலவசமாக முத்திரைகளைச் சொல்லித் தருகிறேன். அது மட்டுமல்லாமல், 108 முத்திரைகளை அதன் படங்களுடன், பலன்களையும் சேர்த்து ஒரு புத்தகமாகத் தயாரித்து வெளியிட்டு விட்டேன். யார் வேண்டுமானாலும் பார்த்து, செய்து பயன் பெறலாம். முத்திரை பலவும் கற்று கொள்வோம் முதுமையில் கூட நோயில்லா வாழ்வை பெற்று மகிழ்வோம்'' என்கிறார் டாக்டர். பாசு கண்ணா.
-சலன்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024