ஏமாற்றம் அளிக்கிறது சௌம்யா வழக்கின் தீர்ப்பு!
கேரள மாநிலத்தில் இளம்பெண் சௌம்யா (23) ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொல்லப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது.
எர்ணாகுளம் - ஷோரனூர் பயணிகள் ரயிலில் 2011 பிப்ரவரி 1 அன்று பெண்களுக்கான பெட்டியில் தனியாகச் சென்றிருக்கிறார் சௌம்யா. அந்தப் பெட்டி யில் ஏறிய கோவிந்தசாமி, சௌம்யா வைத்திருந்த கைப்பையைப் பறிக்க முயன்றிருக்கிறார். அவர் தடுக்க முற்பட்டபோது அவரைத் தாக்கியிருக்கிறார்.
பிறகு, ரயிலிலிருந்து தள்ளப்பட்ட நிலையில், சுயநினை வற்றுப்போன சௌம்யாவைப் பாலியல் வல்லுறவுக்கும் ஆட்படுத்தியிருக்கிறார் கோவிந்தசாமி. காணாமல்போன சௌம்யாவைப் பல இடங்களிலும் தேடிய போலீஸார், பிப்ரவரி 6 அன்று தண்டவாளத்தின் அருகே கிடந்த அவரை மீட்டு திருச்சூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கை விசாரித்த திருச்சூர் விரைவு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. கேரள மக்களைக் கொந்தளிக்க வைத்த இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தது அரசு. பிரேதப் பரிசோதனை மருத்துவர், ‘சௌம்யா ரயிலிலிருந்து குதிக்கவில்லை, தள்ளப்பட்டிருக்கிறார்’ என்று காயங்களின் அடிப்படையில் அறிக்கை அளித்திருக்கிறார். ஆனால், இந்த வழக்கில் சாட்சிகளாக இருந்த வேறு சிலர் அளித்த முரண்பட்ட வாக்குமூலங்கள் காரணமாக, கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மரண தண்ட னையாக மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தனிப்பட்ட நபர்கள் அளிக்கும் வாக்குமூலங்களைவிட, தடய அறிவியல்பூர்வமாகத் தரப்படும் ஆதாரங்கள் நம்பகத்தன்மை உள்ளவை. ஆனால், நீதிமன்றம் அதை ஏற்காமல்போனது துரதிர்ஷ்டம். விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி ஏற்கெனவே குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர். கோவிந்தசாமி தரப்பில், அனுபவம் உள்ள பெரிய வழக்கறிஞர் வாதாடியிருக்கிறார். அவர் இந்த வழக்கில் காவல் துறையினர் விட்ட ஓட்டைகளை நன்கு பயன்படுத்தியிருக்கிறார்.
கேரள அரசோ, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் வாதாட புதிய வழக்கறிஞரை அமர்த்தியிருக்கிறது. அவருக்கு இந்த வழக்கின் முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள நேரம் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை.
தீர்ப்பு சௌம்யா குடும்பத்தவருக்கு மட்டுமல்ல; நாட்டின் பெரும்பாலானோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி யிருக்கிறது. அரிதினும் அரிதான இந்த வழக்கில் சந்தேகத்தின் பலனைப் பெறும் அளவுக்குத் தகுதி யானவர் அல்ல குற்றம்சாட்டப்பட்டவர் என்பதே பெரும் பாலானவர்களின் கருத்து. பெண்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்படும் இந்நாட்களில் இம்மாதிரியான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுப்பதாகத் தீர்ப்புகள் இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் காவல் துறை, நீதித் துறை இரண்டும் ஒருங்கிணைந்து, விரைவாகச் செயல்பட வேண்டும்.
No comments:
Post a Comment