பூச்சிகள் உலகம்: உலகின் ஆபத்தான ங்கொய்ய்... ங்கொய்ய்...
எஸ்.எஸ்.லெனின்
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் மனிதர்கள் இறப்புக்குக் காரணமாகும் உயிரினம் எது தெரியுமா? சிங்கம் புலி போன்ற விலங்குகளோ, சுறா, திமிங்கலம் போன்ற கடல் வாழ் உயிரிகளோ, பாம்பு போன்ற விஷ ஜந்துக்களோ கிடையாது. அளவில் மிகவும் சிறிய கொசுதான் அந்த ஆபத்தான உயிரினம்!
மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு எனப் பல்வேறு காய்ச்சல்களைப் பரப்பும் கொசுவிடமிருந்து நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதுவும் மழைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆபத்தான உயிரினம் மட்டுமல்ல, அறிந்துகொள்ள பல்வேறு சுவாரசியங்களைக் கொண்டிருப்பவை இந்தக் கொசுக்கள். அவற்றைத் தெரிந்து கொள்வோமா?
டைனோசர்கள் வாழ்ந்த காலத்திலிருந்து பூமியில் இருக்கும் பழமையான உயிரினங்களில் ஒன்று கொசு.
# சுமார் 3,000-க்கும் மேற்பட்ட கொசு இனங்கள் உலகம் முழுக்க வாழ்கின்றன. இவற்றில் குறிப்பிட்ட இனக் கொசுக்கள் மட்டுமே மனிதர்களைப் பாதிக்கின்றன.
# பெண் கொசு மட்டுமே மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளிடமிருந்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன. கொசுக்கள் நீர்ப்பரப்பில் முட்டையிட்டு தனது இனத்தைப் பெருக்கும். அதனாலேயே நமது வசிப்பிடத்தைச் சுற்றி நீர் தேங்காது கவனித்துக்கொள்கிறோம்.
# பெண் கொசு தனது முட்டைகளை உருவாக்கத் தேவையான புரதச் சத்துக்காக மனித ரத்தத்தை உறிஞ்சுகின்றன.
# ஆண் கொசுக்கள் பெரிய தொந்தரவு செய்வதில்லை. தமக்குத் தேவையான உணவைத் தாவரங்களிடமிருந்து ஆண் கொசுக்கள் பெறுகின்றன.
# ஆணைவிடப் பெண் கொசுவுக்குப் பல மடங்கு ஆயுள் அதிகம். பெண் கொசு ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் இடும். இதுவே கொசுக்களின் எண்ணிக்கை வேகமாகப் பெருகக் காரணம்.
# கொசு நம் தோலுக்குள் துளையிட்டு ரத்தம் உறிஞ்சுவதையே கொசு கடிப்பதாக சொல்கிறோம். உண்மையில் கொசுவுக்குப் பல் போன்ற உறுப்புகள் இல்லை. ஊசி போன்ற குழல் ஒன்றைச் செலுத்தி ரத்தத்தை உறிஞ்சுகிறது.
# அப்படி உறிஞ்சும்போது உமிழ்நீரை நம் உடலில் கொசு செலுத்துகிறது. இதுவே நமக்கு அந்த இடத்தில் அரிப்புக்கும் தடிப்புக்கும் காரணமாகிறது.
# மனிதர்களிடமிருந்து வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் உடல் வெப்பத்தைத் தனது உணர்நீட்சி மூலம் பல அடி தொலைவிலிருந்தும் கொசுக்களால் அடையாளம் காண முடியும்.
# கொசு நம்மைச் சுற்றிப் பறக்கும்போது ‘ங்கொய்ய்’ என்று எரிச்சலூட்டுமே, அந்த ஒலி கொசுவின் இறக்கைகளிலிருந்து வருகிறது. விநாடிக்குப் பல நூறு தடவைகள் என அப்போதைய வேகத்தைப் பொறுத்துத் தனது இறக்கைகளைக் கொசு விசிறிப் பறக்கும். கொசுக்கள் முன் பின்னாகவும், பக்கவாட்டிலும், மேல் கீழ் என பல திசைகளில் பறக்கக் கூடியவை.
# சராசரியாக 2.5 மில்லி கிராம் எடையே உள்ள கொசு, தனது எடையைப்போல 2 மடங்குக்கும் அதிகமான ரத்தத்தை மனிதரிடமிருந்து உறிஞ்சும்.
மிகக் குறைவான எடை காரணமாக, வேகமான காற்று கொசுவுக்கு இடைஞ்சலாகும். இதனாலேயே கொசு விரட்டிகளைவிட மின் விசிறி, நம்மைக் கொசுக்களிடமிருந்து பாதுகாக்கிறது.
No comments:
Post a Comment