Thursday, September 22, 2016

சினிமா எல்லாம் சும்மா...! 4 கோடி ரூபாயைக் கொள்ளையடித்த நிஜ போலீஸ்

கோவை : கோவையில் போலீஸ் வேடமிட்டு காருடன் ரூ.4 கோடி கடத்தியதாக சொல்லப்பட்ட வழக்கில், கடத்தியது நிஜ போலீஸ் தான் என்பது இப்போது தெரியவந்துள்ளது. ஹவலா பணத்தை கொள்ளையடித்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறது தமிழக காவல்துறை. சிறையில் ராம்குமார் மர்மமான முறையில் உயிரிழக்க அந்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்ததாக இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மதுக்கரை அருகே கடந்த மாதம் 25ம் தேதி அதிகாலை சென்னையிலிருந்து கேரள மாநிலம் மலப்புரம் நோக்கி சென்ற காரை காவல்துறையினர் போல் வேடமணிந்த மர்ம நபர்கள் வழிமறித்தனர்.தங்களை காவல்துறையினர் என அடையாளப்படுத்திக்கொண்ட அக்கும்பல் காரில் பயணம் செய்தமலப்புரத்தை சேர்ந்த முசீர், முகம்மது, சீதோஷ் மற்றும் அனந்த் ஆகியோரை கீழே இறக்கி விட்டதுடன் காரை சோதனையிடுவது போல் நடித்து காரை கடத்தி சென்றனர்.

கடத்தப்பட்ட காரில் சுமார் 3கோடியே 90 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் இருந்ததாக சொல்லப்ப்பட்டது. ஆனால் அதன் உரிமையாளரான மலப்புரம்பகுதியை சேர்ந்த தங்க நகை கடை உரிமையாளர் அன்வர் சதா, 'காரில் எந்த பொருளும் இல்லை. கார் மட்டும் கடத்தப்பட்டது' என கோவை மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தார்.

ஆனால் காரில் ஹவாலா பணம் ரூ.3.90 கோடி இருந்ததாக எழுந்த தகவல் குறித்து அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது காரில் ஹவாலா பணம் இருந்ததை போலீசார் உறுதி செய்தனர். இது தொடர்பாக 4 தனிப்படை அமைத்து தேடுதல் பணியை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே கடந்த 27ம் தேதி கேரளா மாநிலம், பாலக்காடு அருகே தேசியநெடுஞ்சாலையில் கார் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுதீர்,சபீக்,சுபாஷ் ஆகியமூன்று பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையின் போது போலீஸ் வேடமிட்டு கொள்ளையடித்த நபர்கள் குறித்து போலீசார் கேள்வி எழுப்பினர். அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது நிஜ போலீஸ் தான் என அவர்கள் தெரிவித்தனர்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் ஆய்வாளர் முத்துக்குமார், உதவி ஆய்வாளர் சரவணன், ஏட்டு தர்மேந்திரன் ஆகியோர் தான் இந்த சம்பவத்தில் எங்களோடு ஈடுபட்டதாகவும், அவர்கள் 2 கோடி ரூபாயை எடுத்துக்கொண்டதாகவும், மீதமுள்ள 1.90 கோடியை நாங்கள் எடுத்துக்கொண்டோம் என தெரிவித்தனர்.
இது தொடர்பாக விசாரித்த திருச்சி டி.ஐ.ஜி. அருண், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சரவணன், தர்மேந்திரன் ஆகிய மூவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து இவர்களில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரை கோவை போலீஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். எஸ்.ஐ. சரவணன், ஏட்டு தர்மேந்திரன் ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இன்ஸ்பெக்டரிடம் மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் உள்ள மற்றவர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவர்கள் மூவரும் கைது செய்து சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

- ச.ஜெ.ரவி,

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024