கலந்து பேசுங்கள்
காவிரி விவகாரம் உருவாக்கிய பதற்றம் குறைய ஆரம்பித்திருப்பது ஆறுதல் அளித்தாலும், இப்பிரச்சினையின் அதிர்வுகள் அடங்குவதற்கு இன்னும் காலம் பிடிக்கும் என்றே தோன்றுகிறது. கன்னட அமைப்புகள் அரங்கேற்றிய வன்முறையின் அதிர்வலைகள் இம்முறை அமெரிக்கா வரை எதிரொலித்திருக்கின்றன. தன்னுடைய குடிமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. இதற்கு முன்பு எப்படியோ அப்படியே மீண்டும் தமிழர்கள் இயல்பான சூழலுக்குத் திரும்புவார்கள்; கன்னடர் - தமிழர் உறவு மீண்டும் இயல்பான நிலைக்குத் திரும்பும் என்றெல்லாம் பெங்களூருவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தாலும், நடந்த நிகழ்வுகளை யோசிக்கையில், சில விஷயங்களை நாம் பேச வேண்டும் என்று தோன்றுகிறது.
பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு, கொள்ளேகால், ஷிமோகா, பத்ராவதி என்று கர்நாடக மாநிலம் முழுவதும் சுமார் ஒரு கோடித் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கர்நாடகத்தில் குடியேறியவர்கள். மைசூரு மகாராஜாக்கள் காலத்திலேயே, திவான்களாகத் திகழ்ந்த தமிழர்களும் உண்டு. கர்நாடகத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்திலும் உறுதுணையாகத் தமிழர்கள் நின்ற வரலாறு உண்டு. கல்வி, வணிகம், திரைத் துறை என்று சகல துறைகளிலும் தமிழர்களுக்குப் பங்கிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், அங்கு வெறியுணர்வு தூண்டப்பட்டு பதற்றச் சூழல் ஏற்படும்போது தமிழகத்தில் நடக்கும் சிறு சிறு சம்பவங்களும் இன்னொரு முனையில் சக தமிழர்களின் வாழ்வுக்கே துன்பத்தை விளைவிக்கும்.
கர்நாடகம் அளவுக்குத் தமிழகத்தில் வன்முறைகள் இல்லை. இயல்பாகவே நம் மக்கள் அமைதி காத்தார்கள் என்பதோடு, தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததும் இதற்கு முக்கியமான காரணம். அதேபோல, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. ஆனால், இப்படியான விஷயங்கள் மாற்றுத்தரப்பின் காதுகளை எட்டுவது முக்கியம். தமிழக முதல்வர் இந்தத் தருணத்தில் பேசியிருக்க வேண்டும். கர்நாடகத் தரப்பை நோக்கி அல்ல; தமிழக மக்களை நோக்கியே அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு, அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்திருக்கலாம். அது பதற்றங்களைக் குறைக்கவும் நல்லெண்ணங்களை விதைக்கவும் வழிவகுக்கும். மேலும், பிரச்சினை இவ்வளவு தூரம் சென்ற பிறகும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கூட்டாதது சரியான போக்கல்ல.
ஒருபக்கம் காவிரியில் நம்முடைய உரிமைகளை நிலைநாட்ட சட்டரீதியிலும் அரசியல்ரீதியிலுமான நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம். மறுபக்கம் இனிவரும் காலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறையை நம்மளவில் எதிர்கொள்ள என்ன மாதிரியான தீர்வுகளை நோக்கி நாம் நகரப்போகிறோம் என்று விவாதிப்பதும் முக்கியம். ஊர் கூடித் தேர் இழுக்கும் வேலை இது. முதல்வர்தான் ஊரைக் கூட்ட வேண்டும்!
No comments:
Post a Comment