Sunday, September 11, 2016

ஆக்கிரமிப்புகளுக்கு அதிகாரிகள்தான் பொறுப்பு

DAILY THANTHI

ஆதிகாலத்திலிருந்து தமிழ்நாட்டை மன்னர்கள் ஆண்டபோதும், ஆங்காங்கு ஜமீன்தாரர்கள் நிர்வாகத்திலும் சரி, தொடர்ந்து ஆங்கிலேயர் ஆட்சியிலும், பாசனவசதிக்காகவும், குடிநீர்வசதிக்காகவும், ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊருணிகள் அமைக்கப்பட்டன. நதிவளம் அதிகமில்லாத தமிழ்நாட்டில் பெய்கிற மழைநீரை இத்தகைய நீர்நிலைகளில் சேமித்துவைத்ததால்தான் பேருதவியாக இருந்தது. அந்தகாலத்திலேயே இவ்வளவு நீர்நிலைகள் இருந்தபோது, பெருகிவரும் ஜனத்தொகைக்கேற்ப இந்தகாலத்தில், புதிதுபுதிதாக நீர்நிலைகளை உருவாக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆனால், அவ்வாறு புதிய நீர்நிலைகள் உருவாக்கப்படாமல், தற்போது இருக்கும் நீர்நிலைகளிலேயே ஏராளமான ஆக்கிரமிப்புகள் உருவாகிவிட்டன. நீர்நிலைகளின் ஓரங்களில் முதலில் கட்டிடக்கழிவுகள், குப்பைகளைக்கொட்டி தரையாக்கிவிட்டு, அடுத்தமாதங்களுக்குள்ளேயே பட்டா போட்டுவிற்கும் கொடிய செயல்கள் எல்லா இடங்களிலும் அரங்கேறுகிறது. அவ்வப்போது நீதிமன்ற தீர்ப்புகள், பத்திரிகைகளில் படம்போட்டு காட்டும் காட்சிகள் வழங்கப்பட்டாலும், ஆக்கிரமிப்புகள் மட்டும் குறைந்தபாடில்லை. இந்த நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளில் மட்டும் சாதி, மத வேறுபாடின்றி, அதிலும் மிகவும் முக்கியமாக அரசியல்கட்சிகள் வேறுபாடில்லாமல் ஒற்றுமையாக இருப்பதை பார்க்க முடிகிறது.

சென்னையில், சேலையூரிலுள்ள ராஜகீழ்ப்பாக்கம் ஏரி பாதியாக சுருங்கி, 3 புதிய வார்டுகள், நகராட்சியில் உருவாகும் வகையில் வீடுகள் கட்டப்பட்டுவிட்டன. இந்த வீடுகளுக்கெல்லாம் சாலைவசதி, குடிநீர்வசதி, மின்சாரவசதி, ரேஷன் கார்டு என எல்லாவசதிகளையும் அதிகாரிகள் வேகமாக செய்துதந்துவிட்டனர். ‘‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’’ என மாநிலம் முழுவதிலும் இவ்வாறு அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டாபோட்டு கொடுப்பதும், அனைத்து அடிப்படைவசதிகளை செய்வதும் ஏன்?, அனைத்திற்கும் பின்னணியாக ஊழல்தான் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. சென்ற ஆண்டு சென்னையில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பை பார்வையிட வந்த மத்தியகுழு அதிகாரிகள், சென்னையிலுள்ள நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளைக்கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஆர்.மகாதேவன், சேலம் மாவட்டத்திலுள்ள 105 நீர்நிலைகளில் இவ்வாறு ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டாபோட்டு கொடுத்த அதிகாரிகளை எவ்வாறு பதில் சொல்லவைக்கலாம்? என்ற பொறுப்புகடமையை அவர்கள்மீது சுமத்தவேண்டியது குறித்து தமிழக அரசின் வருவாய்த்துறை தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த நீர்நிலைகளில் எல்லாம் புதிதுபுதிதாக வீடுகள் தோன்றுவதற்கு ஆக்கிரமிப்பு வசதிகளுக்கு அதிகாரிகள் பட்டாபோட்டு கொடுத்திருப்பது நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தவுடன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், சென்னை வெள்ளம் தொடர்பாகவும், சென்னை நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்பதற்காகவும் தொடரப்பட்ட வழக்கில், அடையாறு கரைகளில் 28 குடிசைப்பகுதிகள் ஆக்கிரமிப்பால் தோன்றியதுதான், சென்னை நகருக்குள் பாய்ந்த வெள்ளத்துக்கு காரணம் என்றும், நீர்போக்குவரத்து வழியாக தேசிய நீர்வழி சட்டத்தின்கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டதையும் பட்டவர்த்தனமாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்குகளில் உயர்நீதிமன்றம் இறுதித்தீர்ப்பை வழங்கும்போது, சென்னை, சேலம் மாவட்டத்தோடு நிறுத்திவிடாமல், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்று சமுதாயம் எதிர்பார்க்கிறது. தமிழக அரசும் இதுதொடர்பாக உடனடியாக தீவிரநடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாட்டிலுள்ள கால்வாய்கள், ஏரிகள், வாய்க்கால்கள், குளங்கள், குட்டைகள் எல்லாவற்றையும் சர்வே எடுத்து, எங்கெங்கு ஆக்கிரமிப்பு இருக்கிறதோ?, அங்கு உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்கவேண்டும். இதில் அரசின் கடமை மட்டுமல்ல, அடுத்தமாதம் நடைபெற இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள், அதாவது கிராமப்பஞ்சாயத்து, நகரப்பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து அமைப்புகளிலும் இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதே தங்களின் முதல்கடமையாக எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும். முதல்கட்டமாக தமிழ்நாட்டிலுள்ள 39 ஆயிரத்து 202 ஏரிகளும், அதன் முழுப்பரப்பில் இருக்கிறதா? என்பதை சர்வேசெய்து, எவ்வளவு ஆக்கிரமிப்பு இருக்கிறது? என்பதை தமிழக அரசின் பொதுப்பணித்துறையும் கணக்கிடவேண்டும். மாநிலத்தின் சராசரியான ஆண்டு மழை 911.60 மி.மீ. தண்ணீரை முழுமையாக சேகரித்துவைக்க வேண்டுமெனில், அனைத்து நீர்நிலைகளும் முழுகொள்ளளவும் இருக்கும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024