Wednesday, September 21, 2016

ராம்குமார் கடைசியாக பேசியது இதுதான்..! சிக்கலில் சிறை அதிகாரிகள்
vikatan.com

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18ம் தேதி புழல் சிறைக்குள் மின்வயரை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம் சொல்கிறது. ஆனால், ராம்குமாரின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக சமூகவலைத்தளங்கள் தொடங்கி அவரது உறவினர்களும் சொல்கின்றனர். ராம்குமாரின் மரணம் இன்று விவாத பொருளாக மாறியிருந்தாலும் சிறைக்குள் ராம்குமார் உயிர் இழப்பதற்கு முன்பு கடைசியாக யாருடன் என்ன பேசினார் என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "அன்றைய தினம் காலை உணவை மட்டுமே ராம்குமார் சாப்பிட்டார். அவர் அடைத்து வைத்திருந்த டிஸ்பென்சரி பிளாக்கில் ராம்குமாருக்கு 10க்கு 10 அளவு கொண்ட அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. அதே வரிசையில் கைதிகள் இளங்கோவும், வெங்கடேசனும் தனித்தனி அறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். ராம்குமார், அறைக்குள்ளேயே பாத்ரூம் வசதி இருந்தது. எப்போதும் அறைக்குள்ளேயே முடங்கி கிடப்பார் அவர். யாருடனும் சரிவர பேச மாட்டார். அமைதியாக இருக்கும் அவருடன் சக கைதிகளும் பேச தயங்கினர். ஆரம்பத்தில் ராம்குமாரின் நடவடிக்கைகளை முழுமையாக கண்காணித்தனர். அதன்பிறகு அவரை கண்காணிப்பதில்லை. சிறையில் அடைக்கப்பட்டு 75 நாட்களுக்கு மேலாகி விட்டதால் சிறை காவலர்கள் வழக்கம் போல தங்களது பணியில் ஈடுபடத் தொடங்கினர். சில நேரங்களில் சிறை காவலர்கள், வார்டன்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் ஒற்றை வரியில் பதில் அளிப்பார்.

'சிறையிலிருந்து எப்போது வெளியே விடுவார்கள்' என்பது தொடர்பாகவே அவரது பதில் இருக்கும். இந்த சமயத்தில் கடந்த வாரம் ராம்குமார் அடைக்கப்பட்டு இருந்த பிளாக்கின் வாராண்டாவில் அவர் மட்டும் தனியாக இருந்தார். அப்போது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஒரு விசாரணை கைதி ராம்குமாரிடம் பேசி உள்ளார். அப்போது அந்த கைதி, 'ராம்குமாரிடம் கவலைப்படாதே தம்பி, எனக்கும் உங்க ஏரியா தான். முதல் தடவை வரும் போது இதுமாதிரியாகத் தான் இருக்கும். நீ கொலை செய்யவில்லை என்றால் எதற்காக பயப்பட வேண்டும், இந்த வழக்கின் தீர்ப்பு உனக்கு சாதகமாகத்தான் வரும்' என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார். அப்போது, 'எனக்கும், இந்த கேஸிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சுவாதி யார் என்ற தெரியாது. வெளியில் சென்ற பிறகு இந்த வழக்கில் என்னை எப்படி சிக்க வைத்தார்கள் என்பதை மீடியாக்களிடம் சொல்வேன்' என்று நம்பிக்கையுடன் ராம்குமார், அந்த கைதியிடம் சொல்லி இருக்கிறார். இதற்குள் அங்கு வந்த சிறைக்காவலர் ஒருவர், இருவரையும் எச்சரித்து விட்டு சென்றுள்ளார். உடனடியாக ராம்குமார், தன்னுடைய அறைக்குள் சென்று விட்டார்.

அந்த விசாரணை கைதி, நேற்று நடந்த மாஜிஸ்திரேட் விசாரணையின் போது இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதன்பிறகு மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி, ராம்குமாரின் அறை கதவை திறந்து விட்ட சிறைக்காவலர் ஏன் அவரை தொடர்ந்து கண்காணிக்கவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு சிறைக்காவலர், ராம்குமார் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொன்னார்,அறைக்கதவைத் திறந்துவிட்டேன். அந்த நேரத்தில் உயரதிகாரிகளிடம், வாக்கி டாக்கியில் அவசரமாக எனக்கு அழைப்பு வந்தது. இதனால் அங்கு சென்று விட்டதாக சொல்லியுள்ளார். இதுதொடர்பாக துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அந்த சிறைக்காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கிடையில் நேற்று சிறைத்துறை ஏ.டி.ஜி.பி விஜயகுமார், புழல் சிறைக்கு வந்தார். அவர், ராம்குமார் மரணம் குறித்து விசாரித்தார். இதன்பிறகு ராம்குமார் தங்கி இருந்த அறை, அவரது சிறை கதவை திறந்து விட்ட சிறைக்காவலர் மற்றும் பணியில் இருந்த சிறை வார்டன், அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து சி.சி.டி.வி கேமரா பழுது, பழுதடைந்த சுவிட்ச் பாக்ஸ் குறித்தும் விசாரணை நடத்தினார்" என்றனர்.

சுவாதி கொலை வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் அதை காரணம் காட்டி ராம்குமார் ஜாமீனில் வெளிவந்திருக்க வாய்ப்பு இருந்தது. அவ்வாறு ராம்குமார் வெளியில் வந்திருந்தால் சுவாதி கொலையில் உள்ள மர்மங்களும் வெளியில் வந்திருக்கும். ஆனால் அதற்குள் ராம்குமார் உயிர் இழந்து விட்டதால் அவருடன் சேர்ந்து இந்த கொலை வழக்கில் உள்ள மர்மங்களும் புதைந்து விட்டது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரியிடம் பேசிய போது, "இந்த வழக்குகள் விசாரணையில் இருப்பதால் எந்த தகவலும் சொல்ல முடியாது. ஏ.டி.ஜி.பி, சிறைக்காவலரிடம் விசாரித்துள்ளார். விரைவில் பணி நேரத்தில் கவனக்குறைவாக இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது" என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024