இது அவசரம்!
By ஆசிரியர் | Last Updated on : 22nd September 2016 02:37 AM |
அடுத்த நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதனால் அவ்வாறே அமைக்கப்படும் என்பது உறுதி. அப்படி அமைக்கப்படும் காவிரி மேலாண்மை வாரியம் நடுநிலையுடன், விவசாயிகளின் நம்பகத்தன்மையைக் காப்பாற்றுவதாக இருக்கும் என்பதை தமிழகம் உறுதிப்படுத்தியாக வேண்டும்.
மத்திய நீர்வளத்துறையின் கீழ் அமையும் காவிரி மேலாண்மை வாரியத்தில் மொத்தம் ஒன்பது பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். தலைவரையும், இரு நிரந்தர உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமிக்கும். தலைவராக நியமிக்கப்படுபவர் பாசன மேலாண்மையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். நிரந்தர உறுப்பினர்களில் ஒருவர் பாசன மேலாண்மையில்
15 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராகவும், மற்றோர் உறுப்பினர் வேளாண் பொருளாதாரத்தில் வல்லுநராகவும், வேளாண்மையில் 15 ஆண்டுகள் அனுபவம் கொண்டவராகவும் இருத்தல்
வேண்டும்.
தலைமைப் பொறியாளர் பதவியில் இருப்போரில் இரண்டு பேர் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகளாக நியமிக்கப்
படுவர். இது தவிர, கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகளாக அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பொறியாளர் நியமிக்கப்படுவார். ஒன்பது உறுப்
பினர்கள் கொண்ட இந்த வாரியத்தின் முடிவுகளுக்கு ஆறு பேரின் ஆதரவு இன்றியமையாதது.
பற்றாக்குறை காலங்களில், அந்தந்த மாநிலங்களுக்கு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் எவ்வளவு நீர் அளவு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறதோ அதே விகிதத்தில், இருக்கின்ற நீரை பகிர்ந்து அளிக்கும் பொறுப்பு மேலாண்மை வாரியத்துக்கு உண்டு என்று அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. காவிரியுடன் தொடர்புடைய அனைத்து அணைகளிலும் நீர் வெளியேற்றும் அளவை 10 நாள்
களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கும் அதிகாரமும் மேலாண்மைக் குழுவுக்கு இருக்கிறது.
அதேசமயம், பற்றாக்குறை காலங்களில் அதற்கான விகிதத்தின்படி நீர் வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், அதில் குறைபாடு காணப்பட்டால் மத்திய அரசு உதவியுடன் அல்லது தானே அதை நடைமுறைபடுத்துவதற்கான அதிகாரமும் மேலாண்மை வாரியத்துக்கு தரப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு இந்த ஒன்பது உறுப்பினர்கள் யார் யாராக இருக்க வேண்டும் என்பதில் இப்போதே கவனம் செலுத்தாவிட்டால், தமிழகத்திற்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்ய முடியாமல் போய்விடும். ஆகவே, மேலாண்மை வாரியத்தின் தலைவர் தமிழகம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு அப்பாற்பட்ட நபராக இருக்க வேண்டும் என்பதை இப்போதே தமிழகம் வலியுறுத்தியாக வேண்டும்.
அதேபோல நிரந்தர உறுப்பினர்களும் அமைய வேண்டும். குறைந்தபட்சம் ஓர் உறுப்பினர் தமிழகத்தைச் சேர்ந்தவராகவும், ஓர் உறுப்பினர் கர்நாடகத்தைச் சேர்ந்தவராகவும் இருப்பது இன்றியமையாதது. அதேபோன்று, மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் இருவரில் ஒருவர் கேரளத்தை சேர்ந்தவராகவும், ஒருவர் புதுச்சேரியைச் சேர்ந்தவராகவும் இருப்பதில் தவறில்லை.
மேலாண்மை வாரியம் இவ்வாறாக அமைவதுதான் நடுநிலையையும், காவிரிக்கு கீழ்ப்பகுதியில் அமைந்து, கர்நாடகத்திடம் நீரை எதிர்நோக்கும் மாநிலங்களுக்கும் நியாயம் கிடைப்பதை உறுதி செய்யும். இல்லாவிட்டால், வாரியத்தின் ஒன்பது உறுப்பினர்களில் ஆறு பேர் ஆதரவே இறுதி முடிவைத் தீர்மானிக்கும் என்கிற நிலையில், இப்போதே நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் தமிழகம் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.
மேலே குறிப்பிட்ட வகையில்தான் உறுப்பினர்கள் அமைய வேண்டும் என்று இப்போதே நாம் உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும். எல்லா தரப்பினருக்கும் பொதுவான உறுப்
பினர்கள் அமைவதை உறுதிப்படுத்த வேண்டும். அப்படி செய்யாமல் போனால் வருங்காலத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படலாம். ஆகவே இப்போதே நாம் கவனமாக செயல்பட்டாக வேண்டும்.
காவிரி பிரச்னை என்பது பொதுவாக கர்நாடகம், தமிழ்நாடு இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள தொடர் பிரச்னையாக இருப்பதால், மேலாண்மை வாரியத்தின் அலுவலகம், இரு மாநில அணைகளையும் கண்காணிக்க ஏதுவாகவும், இரு மாநிலத்திலும் இல்லாமலும் இருக்க வேண்டும். இதன் தலைமை அலுவலகம் எங்கோ இருக்கும் தில்லியில் அமைவதைவிட ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்தால், சிறப்பாக இருக்கும். முற்றுகை போராட்டம் நடப்பதையும் தவிர்க்கலாம்.
மேலாண்மை வாரியத்தின் தலைவர் விரும்பினால், மத்திய நீர் ஆணையம், தேசிய நீரியல் துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், வேளாண் கல்லூரிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை, வாரியத்தின் கூட்ட நிகழ்வில் பங்கேற்க அழைக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. இது விருப்புரிமையாக இல்லாமல் கட்டாயமாக்கப்பட வேண்டும். பல்வேறு வேளாண் துறை வல்லுநர்கள், பொறியாளர்கள் இந்தக் கூட்டத்தின் பார்வையாளர்களாக இருக்கும்போது, இந்தக் குழு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தகுதி வாய்ந்தவர்களால் கவனிக்கப்படுகிறது என்ற எண்ணம், இவர்களை நீதி
யிலிருந்து விலகாமல் இருக்கச் செய்யும்.
தமிழ்நாடு இப்போதே இந்த விவகாரங்களில் ஆர்வம் செலுத்த வேண்டும். வாரியம் அமைக்கப்பட்ட பின்னர் ஆட்சேபணை தெரிவித்துப் பயனில்லை!
No comments:
Post a Comment