Wednesday, September 21, 2016



vikatan.com

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், கடந்த 18ம் தேதி புழல் சிறைக்குள் சுவிட்ச் பாக்ஸை உடைத்து அதில் உள்ள மின்வயரை கடித்து தற்கொலை செய்ததாக சிறைத்துறை நிர்வாகம் தரப்பு சொல்கிறது. ஆனால், அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக உறவினர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் சொல்கின்றனர். இதற்கிடையில் ராம்குமார், தற்கொலைக்குப் பயன்படுத்தியதாக கூறப்படும் சுவிட்ச்பாக்ஸ் படம் ஒன்று நேற்று வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப்படம் எப்படி வெளியானது என்று சிறைத்துறை விசாரித்ததில் தடயவியல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சில புகைப்படங்களை எடுத்தனர். அவர்கள் மூலம்தான் இந்தப்புகைப்படம் வெளியாகி இருக்கலாம் என்ற சந்தேகம் சிறைத்துறையினருக்கு உள்ளது.

இந்நிலையில், ராம்குமார் இறந்தது எப்படி என்று நேரிடையாக களத்தில் இறங்கினோம். அப்போது கிடைத்த தகவல் இது. ராம்குமார் மரணத்தை விவரித்தார் சிறைத்துறை உயரதிகாரி ஒருவர்.

"ராம்குமார் சிறைக்குள் அடைக்கப்பட்ட நாளிலிருந்து அவர் தற்கொலைக்கு முயன்ற நாள் வரைக்கும் அவரை தீவிரமாக கண்காணித்து வந்தோம். சிறையில் ஒரு ஷிப்ட்க்கு 40 சிறைக்காவலர்கள் பணியில் இருப்பார்கள். இதில் சிலர் உயரதிகாரிகளுக்கு ஆர்டர்லி பணிக்காக சென்று விடுவர். மீதமுள்ளவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவர். கடந்த ஞாயிற்றுக் கிழமை 15 சிறைக்காவலர்கள் பணியில் இருந்தனர். பேச்சிமுத்து என்ற சிறைக்காவலரிடம், ராம்குமார், தாகமாக இருக்கிறது, தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனடியாக பேச்சிமுத்தும், கதவை திறந்துள்ளார். சிறை அறையிலிருந்து வெளியேறிய ராம்குமார், அந்த பிளாக்கில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் குடம் அருகே சென்று தண்ணீர் குடித்துள்ளார். இந்த சமயத்தில் பேச்சிமுத்து, அங்கிருந்து சென்று விட்டார். அப்போது, தண்ணீர் குடம் வைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகே உள்ள சுவிட்ச் பாக்ஸ் ஸ்குரு இல்லாமல் தொங்கி கொண்டு இருந்ததை ராம்குமார் பார்த்துள்ளார். உடனடியாக அதைப் பிடித்து உடைத்த ராம்குமார், அதிலிருந்து மின்வயரை இழுத்துள்ளார். பிறகு தன்னுடைய பற்களால் அந்த வயரை கடித்ததும் மின்சாரம் ராம்குமாரின் உடலில் பாய்ந்துள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சிறைக்காவலர் பேச்சிமுத்து, கையில் வைத்திருந்த லத்தியால் ராம்குமாரை தாக்கினார். இதன்பிறகு மின்சாரம் தாக்குதலிருந்து விடுவிக்கப்பட்ட ராம்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் சிறைத்துறைக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்திவிட்டது.

பணியில் கவனக்குறைவாக இருந்த சிறைக்காவலர் பேச்சிமுத்து மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். ராம்குமாருக்கு மின்சாரத்தை குறித்த அனைத்து விவரங்களும் தெரியும். ஏனெனில் அவர் இன்ஜினீயரிங்கில் படித்ததே அந்தப் பிரிவுதான். இதனால்தான் அவர், தற்கொலைக்கு மின்சாரத்தை பயன்படுத்தி இருக்கிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவுடன் ராம்குமார், பிளேடால் தற்கொலைக்கு முயன்றார். அதிலிருந்து காப்பாற்றி சிறைக்குள் அடைத்தப்பிறகும் அவரது நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்தோம். ஒருசில சிறைக்காவலர்களின் கவனக்குறைவால் இன்று ஒட்டுமொத்த சிறைத்துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளோம். வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் சிறைக்குள் நடக்காமலிருக்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

17 ஆண்டுகளாக சிறைவாசத்தை அனுபவித்த இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா அப்துல் ரகீம் கூறுகையில், "நான் சிறையில் உயர்பாதுகாப்பு வளாகத்தில் அடைக்கப்பட்டு இருந்தேன். அப்போது சிறை நிர்வாகம், நீதித்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இன்று சிறைத்துறை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இதனால், எப்போது வேண்டும் என்றாலும் போலீஸார், விசாரணை கைதிகளிடம் விசாரிக்கும் சூழ்நிலை உள்ளது. இது விசாரணை கைதிகளுக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தும். போலீஸாரின் கட்டுபாட்டுக்குள் விசாரணை கைதிகள் இருக்கும் சூழ்நிலை உள்ளதால் வழக்கை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றலாம். ராம்குமாரைப் பொறுத்தவரைக்கும் இந்த வழக்கில்தான் அவர் முதல் முறையாக கைது செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்குள்ளேயே அவரிடம் போலீஸார் விசாரித்ததின் விளைவே அவரை கடுமையான மனஉளைச்சலுக்குள்ளாகி இருக்க வேண்டும். ஏற்கனவே தற்கொலைக்கு முயன்ற அவரை மீண்டும் தற்கொலைக்கு தூண்டியதே போலீஸ் விசாரணைத்தான்.

சிறையை பொறுத்தவரைக்கும் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இது சிறைத்துறை உயரதிகாரிகளுக்குத் தெரியும். சிறைக்குள் இருக்கும் மின்மோட்டார்களின் வயர்கள் தாழ்வான பகுதியில்தான் இருக்கும். அதன்மூலமாகக்கூட தற்கொலை செய்து கொள்ள வாய்ப்புள்ளது. சிறைச்சாலை குற்றவாளிகளை திருத்தும் மையமாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் சிறைச்சாலைகள் குற்றங்களின் பிறப்பிடமாகவே மாறி வருகிறது. சிறைக்காவலர்கள் கூடுதல் பணிச்சுமையால் சிரமப்படுகின்றனர். இதுவே ராம்குமாரை கண்காணிக்க முடியாததற்கு காரணம். மேலும், சிறை நிர்வாகத்தை மீறி நினைத்த சிறைவாசியை காவல்துறை நினைத்த பிளாக்கிற்கு மாற்றுகிறது. ராம்குமார், தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதற்கான விடை பிரேத பரிசோதனையில் தெரியவந்துவிடும். மற்ற வழக்கைப் போல இந்த வழக்கில் பிரேத பரிசோதனை முடிவுகளை மாற்ற முடியாது. ஏனெனில் நீதிமன்றம் தலையீடு உள்ளதால் மரணத்துக்கான உண்மையான காரணத்தையே டாக்டர்களால் சொல்ல முடியும். இல்லையெனில் டாக்டர்களுக்கு சிக்கல் ஏற்படும். சிறைத்துறையை மீண்டும் நீதித்துறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே இதுபோன்ற தற்கொலை சம்பவங்களை தடுக்க முடியும். சிறைக்குள்ளேயும் கைதிகள் மனிதர்களாக நடத்தப்படுவார்கள். சுவாதி, ராம்குமார் போன்ற முக்கியமான வழக்குகளில் சுற்றும் சர்ச்சைகளுக்கு முடிவு கட்ட சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் சிறைத்துறை அதற்கான ஆதாரங்களை நீதிமன்றங்களில் சமர்ப்பிக்க வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...