Wednesday, September 21, 2016



திரைக்கு பின்னால்: பின்னணிக் குரலுக்கும் விருதுகள் வேண்டும்!


ஷாலினி, தேவயானி, சுவலட்சுமி, ரம்பா, கெளசல்யா உள்ளிட்ட பல நாயகிகளுக்கு பின்னணிக் குரல் கொடுத்து பிரபலமானவர் ஸ்ரீஜா ரவி. அவருடைய மகள் ரவீணா தற்போதுள்ள முன்னணி நாயகிகளுக்கு பின்னணிக் குரல் கொடுத்து வருகிறார். ‘ப்ரேமம்' தெலுங்கு ரீமேக்கில் மடோனாவுக்குப் பின்னணிக் குரல் கொடுத்துவிட்டுச் சென்னை திரும்பியவரிடம் பேசிய போது...

பின்னணிக் குரல் துறைக்குள் எப்படி நுழைந்தீர்கள்?

எனது பாட்டி, அம்மா இருவருமே பின்னணிக் குரல் கலைஞர்கள் தான். இந்த துறைக்குள் வர வேண்டும் என நினைக்கவில்லை. வாய்ப்பு வந்தது ஏற்றுக்கொண்டேன்.

முதல் படமான ‘சாட்டை' வாய்ப்பு எப்படி அமைந்தது?

கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போது, அப்படத்துக்காக குரல் தேர்வு நடைபெற்றுவந்தது. யாருடைய குரலுமே நினைத்த மாதிரி வரவில்லை. எனது குடும்ப நண்பர் ஒருவர் ஒலிநுட்பப் பொறியாளராக (சவுண்ட் என்ஜினியர்) பணிபுரிந்தார். ஜா அக்காவின் மகள் இருக்கிறாள்; அவளுடைய குரல் இப்படத்துக்கு சரியாக இருக்கும் என்று அவர்தான் என்னை சிபாரிசு செய்தார். கல்லூரி முடிந்தவுடன் குரல் தேர்வுக்குச் சென்றேன். குரல் தேர்வு முடிந்தவுடன், “நாளை மாலை வந்து பேசிடுமா” என்று சொல்லிவிட்டார்கள். இதுதான் குரல் தேர்வு முறை என்பது எனக்கு அப்போது தான் தெரியும்.

அதற்குப் பிறகு ‘கத்தி', ‘அனேகன்', ‘ஐ', ‘தெறி' என உங்களுடைய பயணம் பற்றிச் சொல்லுங்கள்...

ஒவ்வொரு படத்துக்கும் குரல் தேர்வு இருக்கும். இயக்குநர் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு யாருடைய குரல் பொருத்தமாக இருக்கும் எனப் பார்ப்பார். கதாபாத்திரத்தின் வயதுக்கு ஏற்றவாறு யார் பேசுகிறார்கள் என முடிவு செய்து தேர்வு செய்வார்கள். கடவுளின் ஆசியாலும் அம்மாவின் அன்பினாலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்தன.

உங்களுடைய பின்னணிக் குரல் பயணத்தில் அம்மாவின் ஆலோசனை என்ன?

மலையாளப் படங்களுக்கு பின்னணிக் குரல் கொடுக்கச் செல்லும்போது என்னுடன் வருவார்கள். சென்னையில் படித்து வளர்ந்ததால், தமிழ் எளிதாகப் பேசிவிடுவேன். வீட்டில் மட்டும்தான் மலையாளம் பேசுவேன். மலபார் வட்டார மலையாளம்தான் எனக்கு வரும். ஆனால், பின்னணிக் குரல் கொடுக்கும்போது அப்படிப் பேசக் கூடாது என்று அம்மா சொல்வார்.

மலையாள இயக்குநர்கள் பின்னணிக் குரலில் ரொம்பத் தெளிவாகப் பார்ப்பார்கள். மலையாளத்தில் இப்படி பேசக் கூடாது, இந்தக் காட்சிக்கு இப்படிப் பேச வேண்டும் என்று உடன் உட்கார்ந்து அம்மா சொல்லிக் கொடுப்பார். தமிழில் நான் டப்பிங் பேசும்போது அம்மா பார்த்ததில்லை. நானும் நீங்கள் வராதீர்கள், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிடுவேன்.

தமிழ்ப் படங்களைப் பார்த்துவிட்டு, இதற்கு நீ இப்படிப் பேசியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொல்வார். அதையெல்லாம் கேட்டு அடுத்த படத்துக்குப் பேசப் போகும் போது சரி செய்துகொள்வேன்.

உங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு?

ஒவ்வொரு படத்துக்கும் அம்மாவின் பாராட்டுக்காகக் காத்திருப்பேன். எனக்கு அதுதான் ரொம்ப முக்கியம். பின்னணிக் குரலுக்காக 5 முறை மாநில விருதுகள் வென்றிருக்கிறார்கள் எனும்போது அவர்கள்என்ன சொல்கிறார்கள் என்பதை ரொம்ப முக்கியமாகப் பார்ப்பேன்.

‘ஐ' இந்தி இசை வெளியீட்டு விழாவின் போது மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் சாரை சந்தித்தேன். ஏமி ஜாக்சனுக்கு நான்தான் பேசினேன். அப்போது “நீங்கதான் பேசியிருக்கிறீர்களா? ஸ்ரீ மேடத்தின் பெண்ணா நீங்க? பின்னணி இசை பண்ணும்போது கேட்டேன். ரொம்ப நல்லா இருந்தது. Keep your good job” என்றார். ரஹ்மான் சாரின் அவ்வளவு பெரிய பாராட்டு கிடைத்தவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

குரலை எப்படிப் பராமரிக்கிறீர்கள்?

நான் எதுவும் பண்றதில்லை. உண்மையில் ஐஸ்கிரீம் எல்லாம் நிறையச் சாப்பிடுவேன். டப்பிங் பேசப் போகும்போது மட்டும் இடையே சுடு தண்ணீர் எடுத்துக்கொள்வேன்.

காட்சியமைப்புகளுக்குத் தகுந்தவாறு எப்படிக் குரலை மாற்றிப் பேசுவீர்கள்?

குரல் தேர்வில் நான் தேர்வானவுடன், நான் டப்பிங் பண்ணப் போகும் கதாபாத்திரத்தின் தன்மையை இயக்குநர் அல்லது உதவி இயக்குநர்கள் விளக்குவார்கள். அவர்கள் சொல்வதை முழுக்க உள்வாங்கி அதனைக் குரலில் எடுத்துக்கொண்டு வர வேண்டும். நம்முடைய காட்சிகளை மட்டும்தான் போட்டுக் காட்டி டப்பிங் பேசச் சொல்வார்கள். முழுப் படத்தை எல்லாம் காட்ட மாட்டார்கள்.

நீங்கள் அதிகமாகக் கஷ்டப்பட்டு பின்னணிக் குரல் கொடுத்த படம் எது?

மலையாளத்தில் ‘பாஸ்கர் தி ராஸ்கல்' படத்துக்காக நயன்தாரா மேடத்துக்குப் பேசியதைத்தான் சொல்வேன். ஏனென்றால் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நயன்தாரா நடித்திருந்தார். அவ்வளவு வயது முதிர்ந்த கதாபாத்திரத்துக்கு அதற்கு முன்பு பேசியதில்லை. அம்மாதான் நயன்தாராவுக்கு மலையாளத்தில் எப்போதுமே பின்னணிக் குரல் கொடுப்பார். சில நாட்கள் கழித்து மலையாளத்தில் நயன்தாரா நடிப்பதால் அம்மா என்னை சிபாரிசு செய்தார். என்னுடைய டப்பிங்கை நயன்தாரா பார்த்துவிட்டு, அடுத்த படத்துக்கும் சிபாரிசு செய்தார்.

அப்படத்தின் பின்னணிக் குரல் பணியின்போது, கண்ணை மூடி ஒரு குழந்தைக்கு அம்மாவாக நினைத்துக்கொண்டு பேசு என்று அம்மா கூறினார். ஒவ்வொரு காட்சிக்கும் என்னைத் தயார் பண்ணிக்கொண்டு பேச வேண்டியதிருந்ததால் ரொம்ப முக்கியமான படமாக அதைப் பார்க்கிறேன்.

படங்களின் விமர்சனத்தில் நமது பணி குறித்து எதுவும் இடம் பெறுவதில்லையே என்ற வருத்தம் இருக்கிறதா?

கண்டிப்பாக இருக்கிறது. என்னுடைய காலத்தை விட அம்மாவின் காலத்தில் விமர்சனத்தில் பின்னணிக் குரல் எப்படியிருந்தது எனச் சொல்லவே மாட்டார்கள். மாநில விருதுகள் கிடைத்தவுடன்தான் அனைவருக்கும் தெரிந்தது. இப்போதுதான் ஒரு சில விமர்சனங்களில் டப்பிங்கையும் சேர்த்து எழுதுகிறார்கள். ‘கத்தி', ‘ஐ', ‘அனேகன்' ஆகிய விமர்சனங்களில் என்னுடைய பெயர் வந்ததில் ரொம்ப சந்தோஷம். நிறைய விருதுகள் வழங்கும் விழாவில் டப்பிங் என்ற பிரிவே கிடையாது. அதிலும் சேர்த்தால் இன்னும் நிறைய மக்களுக்குத் தெரியவரும்.

நாயகியாகிவிட்டீர்களாமே? தொடர்ந்து பின்னணிக் குரல் கொடுப்பீர்களா?

என்னுடைய புகைப்படத்தைப் பார்த்துவிட்டு நாயகி தேர்வுக்கு அழைத்திருந்தார்கள். சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த்துடன் ‘ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் நாயகியாக அறிமுகமாகிறேன். படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகிவருகிறது. பின்னணிக் குரல் கொடுப்பதை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட மாட்டேன். அதுவே என் முதல் பணி.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...