Sunday, September 11, 2016

பத்தரை மாற்று தங்கம்


பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில், தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் மாரியப்பன் தங்கவேலு. இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் நமக்கு கூடுதல் பெருமை. ஆண்கள் உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்திருக்கிறார் மாரியப்பன். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வருண் சிங் வெண்கலம் வென்றிருக்கிறார். ஊனம், ஏழ்மை, ஏளனம் போன்ற தடைக்கற்களை தகர்த்தெறிந்து சிகரத்தை எட்டியிருக்கும் இந்த வீரர்களின் சாதனை, ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறது. பாராலிம்பிக் போட்டியில் கிடைத்த தங்கம் என்று இதை குறைத்து மதிப்பிடுவது கூடாது. உலக அளவில் மிகச் சிறந்த வீரர்களின் கடுமையான போட்டியை சமாளித்து மாற்றுத் திறனாளியான மாரியப்பன் வென்றுள்ளது பத்தரை மாற்றுத் தங்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவரது மகத்தான வெற்றி, அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக, உந்துசக்தியாக இருக்கும்.

காதல் என்ற பெயரில் பெண்களை வெட்டிச் சாய்த்து, அமிலம் ஊற்றி சிதைத்து, பின்னர் தண்டனைக்கு பயந்து தற்கொலை செய்துகொள்ளும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் அவநம்பிக்கையையும் விரக்தியையும் அளித்த நிலையில், இளைஞர்கள் தங்களின் ஆற்றலை ஆக்கசக்தியாக, குடும்பத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை மாரியப்பனின் வெற்றி உணர்த்துகிறது. சாதனை வீரருக்கு பாராட்டு, வாழ்த்துகளுடன் கோடிக் கணக்கில் ரொக்கப் பரிசுகளும் குவிகின்றன. வென்றவர்களை பாராட்டுவதும், கவுரவிப்பதும் நமது கடமை. அப்போது தான் மாரியப்பன், வருண் போல நாமும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்களை கடுமையாக முயற்சிக்கத் தூண்டும். நாடு முழுவதும் விளையாட்டு போட்டிகளுக்கான அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், திறமையான சிறுவர் சிறுமியரை தேர்வு செய்து உணவு, உடை, கல்வி, பயிற்சி என அனைத்து வசதிகளையும் அளிக்க வேண்டும்.

அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் உறுதி செய்து, எதிர்காலம் பற்றிய கவலையை போக்க வேண்டியதும் அவசியம். வெற்றியாளர்களை தோளில் தூக்கிக் கொண்டாடும் அதே சமயம், தோற்றவர்கள் துவண்டு விடாமல் முனைப்புடன் தங்கள் முயற்சியை தொடர ஆதரியுங்கள். ஒலிம்பிக்ஸ் முடிந்து பரபரப்பு ஓய்ந்ததும் விளையாட்டுத் துறை அமைச்சகம், அதிகாரிகள், நிர்வாகிகள் வழக்கம் போல தூக்கத்தில் ஆழ்ந்துவிடாமல், 2020ஐ மனதில் வைத்து ஆக்கபூர்வ நடவடிக்கையில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024