Wednesday, September 21, 2016

'சிறையிலேயே செத்துப் போய்விடுகிறேன்...!' -பேரறிவாளன் தாக்குதல் பின்னணி

vikatan.com


வேலூர் சிறையில் தாக்குதலுக்கு ஆளான பேரறிவாளனுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ' கொலைவெறியோடு நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் அவருக்கு நெருக்கமான சிலர் இருப்பதை அறிந்து மிகுந்த வேதனையில் இருக்கிறார் பேரறிவாளன்' என்கின்றனர் சிறை அதிகாரிகள்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு பகுதியில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 13-ம் தேதி வட மாநில கைதியான ராஜேஷ் கண்ணா என்பவர், இரும்புக் கம்பியால் பேரறிவாளனைக் கடுமையாகத் தாக்கினார். இதில், கை, கால் மற்றும் தலைப் பகுதியில் கொடும் காயத்திற்கு ஆளானார். சிறை வாழ்க்கையால் சிறுநீரகத் தொற்று, நரம்பு, மூட்டு பிரச்னை மற்றும் ரத்தக் கொதிப்பு நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வரும் பேரறிவாளனை குறிவைத்து நடந்த இந்தத் தாக்குதல் சிறை வட்டாரத்தை மட்டுமன்றி, அரசியல் கட்சிகளையும் அதிர வைத்தது. இதையடுத்து, ' தன் மகனை பரோலில் விட வேண்டும்' என்பதை வலியுறுத்தி, நேற்று முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தில் மனு கொடுத்தார் அற்புதம் அம்மாள்.

மருத்துவ சிகிச்சை முடிந்து சிறைக்குத் திரும்பிய பேரறிவாளனுக்கு, தாக்குதல் குறித்துக் கிடைத்த தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம். இதைப் பற்றி நம்மிடம் விவரித்தார் மனித உரிமை ஆர்வலர் ஒருவர், " ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார் பேரறிவாளன். இதற்காக, 25 ஆண்டுகளாக தெருத் தெருவாக அலைந்து கொண்டிருக்கிறார் அற்புதம் அம்மாள். அண்மையில், ஏழு பேர் விடுதலையை எதிர்நோக்கி பேரணியில், கட்சி சார்பில்லாமல் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஏழு பேர் விடுதலையை நம்பிக்கையோடு எதிர்பார்த்திருக்கிறோம். இந்த நேரத்தில் இப்படியொரு கொடூர தாக்குதல் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

தாக்குதலில் ஈடுபட்ட ராஜேஷ் கண்ணா என்ற கைதி, அடிக்கடி பேரறிவாளன் கொட்டடிக்கு வந்து, சகஜமாகப் பேசக் கூடியவர்தான். ஆனால், தாக்குதலுக்கு முன்பான ஒரு வாரம் முழுவதும் பேரறிவாளனுக்கு நெருக்கமான இரண்டு கைதிகள் அறையிலேயே ராஜேஷ் கண்ணா இருந்துள்ளார். அவர்கள்தான், பேரறிவாளனுக்கு எதிரான தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள். அந்த இரண்டு சக கைதிகளோடு சில மனஸ்தாபங்கள் இருந்தாலும், அவர்களோடு நட்பு பாராட்டியே வந்தார். இந்த வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டும் என நினைத்திருந்தால், சிறை நன்னடத்தை விதிகளின்படி பேரறிவாளன் எப்போதோ வந்திருக்க முடியும். ' ஏழு பேரும் ஒன்றாகத்தான் வெளியில் வருவோம்' என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

' நம்மை விடுவிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. ஆனால், அரசுக்கு எதிராக நளினி போன்றவர்கள் தொடுக்கும் வழக்குகளால் சிரமம்தான் ஏற்படுகிறது. எந்த வழக்கு போட்டாலும், ' உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது' என்ற ஒற்றைச் சொல்தான் வெளியில் வருகிறது. எனவே, அரசுக்கு எதிரான வழக்குகள் வேண்டாம்' என்பதுதான் பேரறிவாளனின் கருத்தாக இருக்கிறது. இதைச் சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து, பேரறிவாளனுக்கு எதிரான தாக்குதலைத் தூண்டிவிட்டுள்ளனர். அதிலும், கொலைவெறியோடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கைதி ராஜேஷ் கண்ணாவிடம், ' உனக்கு எதிராக சிறை அதிகாரிகளிடம் போட்டுக் கொடுப்பதே பேரறிவாளன்தான்' என அவரைத் தூண்டிவிட்டுள்ளனர்.

தாக்குதல் தொடர்பான அனைத்து விஷயங்களையும் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார் பேரறிவாளன். ' இவர்கள் இப்படியெல்லாம் செய்வார்களா? நண்பர்களே இவ்வாறு செய்தால், எதற்காக நான் உயிரோடு இருக்க வேண்டும்? சிறையிலேயே செத்துப் போய்விடுகிறேன்' எனக் கதறி அழுதிருக்கிறார். நரம்பு, மூட்டு பிரச்னைகளுக்கு மருந்து சாப்பிடும்போது, வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. தாக்குதலுக்குப் பின்னர் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருகிறார். இது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதோ தெரியவில்லை. யாரை நம்புவது என்று தெரியாமல் தவித்து வருகிறார் பேரறிவாளன்" என்றார் வேதனை கலந்த முகத்துடன்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024