Thursday, September 29, 2016

காலம் மாறிவிட்டது

By வாதூலன் | Last Updated on : 29th September 2016 01:00 AM | அ+அ அ- |

ஆறு மாதம் முன்பு, என் உறவினரின் பேரன் திருமணம் நடந்தது. இந்தச் சுப நிகழ்வையொட்டி, எல்லாரையும் சந்தித்துப் பேசலாமென்று நினைத்திருந்தேன். ஆனால், குறிப்பிட்ட நாளன்று உடல்நலக் குறைவால், அந்தத் திருமணத்துக்குப் போக முடியவில்லை.
அன்பளிப்பாக ரூ.500 அனுப்பி வைத்தேன். இரண்டு நாள் கழித்து போனில் பேசினேன். "உங்கள் செக் கிடைத்தது. நீங்கள் எல்லாரும் வருவீர்கள் என்று ரொம்ப எதிர்பார்த்தேன்' என்று உளமாரச் சொன்னது, எனக்குத் திருப்தியாக இருந்தது.
ஆனால் அந்தக் காசோலை கணக்கில் பற்று ஆகவேயில்லை. மூன்று மாதக் காலக் கெடு நெருங்கிக் கொண்டிருந்தது.
உறவுக்காரப் பெண்மணியிடம் விசாரித்தபோது, "பையனிடம் கொடுத்தேன். இப்போது அவன் வீட்டிலில்லை, போன வாரம்தான் அவர்கள் இலங்கையிலிருந்து வந்தார்கள்!' என்றார். குரலில் அலுப்பு தொனித்த மாதிரி இருந்தது.
ஒரு வழியாகக் காலாவதி தேதிக்கு மூன்று நாள் முன் காசோலை பற்று ஆகியது. கிரிக்கெட் பந்தயத்து ஆட்டக்காரர் கோட்டைக் கடைசி நிமிடத்தில் தொடுவது போல.
இதேபோல வேறொரு நிகழ்ச்சி. என் நெருங்கிய பள்ளி நண்பனின் தம்பி இல்லத்தில் ஒரு விழா. அதற்கான அழைப்பிதழ் வந்த அன்றே, போக இயலாதென்று புரிந்துவிட்டது. ஏனெனில் வேறு ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம். வழக்கம்போல, கடிதத்துடன் காசோலையும் அனுப்பினேன்.
விழா முடிந்த மறுநாள் அவனே தொலைபேசியில் பேசினான். "என்ன? வராமலே இருந்து விட்டீர்கள்? பழைய எம்.ஸிடி. ஸ்கூல் சினேகிதர்களை பார்த்திருக்கலாமே? எழும்பூர் "ப்ரெண்ட்ஸ்' நிறைய பேர் வந்திருந்தார்கள்' என்று சொல்லிக் கொண்டே போனவன், பேச்சோடு பேச்சாகக் காசோலை கிடைத்த விஷயத்தையும் தெரிவித்தான்.
ஆனால், இங்கு என்ன ஆயிற்றென்றால், காசோலை பற்று ஆகவே இல்லை. அதாவது வங்கியில் சேர்க்கப்படவேயில்லை! என் மனக்குறையை நண்பனிடம் புலம்பித் தீர்த்தேன்.
"உன் தம்பி அடிக்கடி அமெரிக்கா போய் விட்டு வருகிறவன். என், 500 ரூபாய் அற்பமாகத் தோன்றியிருக்கும்! அதனால்தான்' என்று கூறினேன். நண்பன் என்னைச் சமாதானம் செய்தான். "சே! அப்படி நினைக்காதே. சோம்பேறித்தனமாயிருக்கும். நீ தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது' என்று தம்பிக்குப் பரிந்து பேசினான்.
அலுவலக நண்பனிடம் ஏதோ சந்தர்ப்பம் வரும்போது இதைப் பகிர்ந்து கொண்டேன். அவனுடைய பார்வை கொஞ்சம் வேறு விதமாக இருந்தது.
"அன்பளிப்பாகச் செக்கோ, பொருளோ தந்துவிட்டால், அதோடு நம் பங்கு முடிந்துவிட்டது. அதை எப்படிப் பயன்படுத்துகிறார்களென்று கவனிப்பது நம் வேலை இல்லை!' என்றான்.
முற்றிலும் உண்மைதான். ஆனால் என் சினேகிதனின் தம்பி காசோலையை ஒரு பொருட்டாகவே கருதவில்லையே? அலட்சியமாக இருந்ததால்தானே சாவகாசமாய் வங்கியை அணுகியிருக்கிறான். "இதே செக் 50 டாலராயிருந்தால் இது போலிருந்திருப்பானா?' என்ற கேள்வியும் என்னுள் எழாமலில்லை.
என் மனைவி ஆறுதலாகச் சொன்னாள், "இப்போதெல்லாம் கல்யாணமானவுடன் மணமக்கள் வெளிநாட்டுக்கு தேனிலவுக்காக போகிறார்கள். கிரகப்பிரவேசம் செய்தால், புது வீட்டுக்கு பர்னிச்சர் வாங்க அலைகிறார்கள்! அந்த நாள் மாதிரியா?' என்று ஏக்கப் பெருமூச்சுவிட்டாள்.
அதன் அர்த்தம் எனக்குப் புரிந்தது. 40 வருடம் முன்பு புதுமனை புகுவிழா கொண்டாடியபோது, என் சித்தி அளித்த "மில்க் குக்க'ரை ரொம்ப வருடம் பயன்படுத்தி வந்தோம்.
இன்று காலம் மிகவும் மாறிவிட்டது. எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும், பளபளக்கும் விளக்குகள், வண்ணமயமான அலங்காரங்கள், விடியோ வெளிச்சம் போன்றவை நீக்கமற நிறைந்திருக்கின்றன.
நிதானமான கனிவான விசாரிப்புக்குப் பதில், அவசர கை குலுக்கல்கள்; தம்பதிகளை மனமாரப் பாராட்டுவதற்குப் பதில் அவர்கள் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது. இடையிடையே வரும் செல்லிடப்பேசி அழைப்புகள்.
பரிசுப் பொருள்கள் மேடையில் ஒரு மூலையில் குவிகின்றன. காசோலையோ வேறு உறையோ பெறுகிறவர்கள் விரைவாகக் குறித்துக் கொள்கிறார்கள்.
ஆக சகல மதிப்பீடுகளும் மாறிவிட்டன. இது குடும்பத்தில் மாத்திரமல்ல. அரசியல், திரைப்படம், விளையாட்டு போன்ற பிற துறைகளிலும்தான்.
ஒரு சின்ன உதாரணம். சில நாள் முன்பு பிரபல ஆங்கில நாளேட்டில், கிரிக்கெட் ஆட்டக்காரர் ஸி.டி. கோபிநாத் (86 வயது), 1952-இல் தாங்கள் முதன் முதலாக இங்கிலாந்தை வெற்றி கொண்டதை நினைவுகூர்ந்த கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.
"வெற்றி பெற்றவுடன் மாற்றுக் கட்சியிடம் கைகுலுக்கி விட்டு ஓட்டலுக்குத் திரும்பி விட்டோம். மேலே குதிப்பது, கீழே புரள்வது போன்ற செய்கைகள் இல்லை.
"விருந்து உண்டா?' என்று யாரோ கேட்டார்கள். அன்று, எங்களிடமும் சரி, வாரியத்திடமும் சரி அதற்குச் செலவு செய்ய தொகை இல்லை!' என்று கூறியிருக்கிறார். அந்த வெற்றியில் கோபிநாத்துக்கு முக்கிய பங்களிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன், 33 ஆண்டுகளுக்கு பின், கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பை வென்றபோது, பெரும் ஆர்ப்பாட்டம் இருக்கவில்லை.
இன்று, கணினியும், நவீன ஊடக வசதிகளும் அனைவரது வாழ்க்கையையும் ஒரு புரட்டு புரட்டியிருக்கிறது. "உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்' என்ற குறள் ஓரளவுக்குப் பொருந்தும்தான்.
வயதானவர்கள் சில தன்மைகளை அனுசரித்துச் சகித்துக் கொள்ளும் பக்குவம் பெற வேண்டியதுதான். அதேபோல், இளைஞர்களும் பழைய உயர் பண்புகளையும் நல் மதிப்பீடுகளையும் பேணிப் போற்றக் கற்றுக்கொள்வது உசிதம்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...