Wednesday, September 21, 2016

விவாதக் களங்கள்


மனித வாழ்க்கையில் விவாதங்கள் முதன்மையானவை. தனிமனிதன் தன்மனத்தோடும், ஒரு மனிதன் பிற மனிதனோடும், ஒரு குழு இன்னொரு குழுவோடும் நேரிய விவாதங்களை மேற்கொள்ளல் இயற்கையானது மட்டுமில்லை இன்றியமையாததும்கூட.
ஊரிலிருந்து வந்த உறவினர் ஒருவரிடம் "ஓய்வெடுத்துக் கொண்டிருங்கள் வங்கி வரை போய்வருகிறேன்' என்றேன். அவர் தனக்கும் அங்கு வேலையிருப்பதாகக்கூறி என்னுடன் வந்தார். வங்கிக்குள் நுழைந்தோம். இணைய இணைப்பின்மை காரணமாகப் (Non-connectivity of Net) பணம் செலுத்தவும் பணம் பெறவுமான அமைப்பிடங்கள் மூடப்பட்டிருந்தன.
என்னுடன் வந்தவர் உள்ளே இருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தார். சொந்தஊர், இவ்வூருக்கு வரும் முன் வேலைபார்த்த இடம், படிப்பு என ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே வந்தார். கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்தபடி விடை சொல்லிக் கொண்டே வந்தவர் தான் வேளாண்மையியல் பட்டதாரி (Agricultural degree holder) என்றார்.
என் உறவினர் வங்கிப்பணி முடிந்து இல்லம் திரும்பியதும் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
"வேளாண்மை படித்தவர் வயலுக்கு வேலைக்குப் போகாமல் வங்கிப் பணிக்கு வரலாமா' என்பது அவரின் முதல் வினாக்கணை. "வங்கிக்கு ஆளெடுக்கும்போது விண்ணப்பதாரர் ஒரு பட்டதாரியாக இருக்க வேண்டும் என்பதுதான் விதியே தவிரக் குறிப்பிட்ட பட்டம் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பியுங்கள் எனக் கேட்க முடியாதே' என்பது என் விடை.
அவர் அடுத்த எய்த அம்பு கூர்மையானது. அது "இவர் வேளாண்மைப் படிப்பைத் தேர்வு செய்யாதிருந்தால் ஒரு விவசாயக் குடும்பத்து இளைஞன் அந்தப் படிப்பைப் பெற்றிருக்க முடியும். அதன்வழி படித்த படிப்பையொட்டி விளைச்சல் செயல்பாடுகளில் ஈடுபடவும் வழி பிறந்திருக்குமே' என்பதாம்.
சிறிது சிந்தித்துவிட்டு அவரிடம் "அப்படிப் பார்க்க வேண்டுமென்பதில்லை. மருத்துவர் ஒருவரோ பொறியாளர் ஒருவரோ இந்திய ஆட்சிப் பணித் (IAS) தேர்வெழுதி ஆட்சியராக வருவதில் என்ன தவறு' என்றேன்.
"வாதத்திற்கு அப்படியே வைத்துக் கொள்வோம். நல்ல ஆட்சியர் ஒருவர் கிடைக்கும்போது ஒரு நல்ல மருத்துவரை இந்தச் சமூகம் இழக்கிறதே மருத்துவர்களில் சிலர் ஆட்சிப்பணி செய்ய முடியும் ஆட்சியர்கள் ஒரு நாளும் மருத்துவராக முடியாதே' என்ற அவரின் வினாவால் சற்றே தடுமாறத்தான் இயன்றது.
அரைமணி நேரத்துக்கும் மேலாக வாதாடியபின் நிறைவில் "உங்களது கருத்தைச் சொல்லுங்கள்' என்று கூறி அமர்ந்தேன். அவரின் சொல்லாடல்கள் வருமாறு: "வேளாண்மைப் படிப்பு அவருக்கு மரியாதையான வேலை வாங்கித் தந்துள்ளது. ஆனால், படித்த படிப்புக்கு அவர் என்ன மரியாதை செய்துள்ளார்?
இரண்டாவதாக, வங்கி நுட்பப் படிப்பு (Banking Technology Course) படித்த ஒருவரின் வேலையைத் தட்டிப் பறிப்பதாகத்தானே வேளாண்மைப் படிப்பாளியின் வங்கிப் பணி அமையும்!' ஒருவர் வழக்கறிஞர் தொழிலுக்குப் படிக்கும்போது அவர் எந்தத் துறைப் பட்டதாரி என்று பார்ப்பதில்லை. பார்க்க வேண்டியதுமில்லை. ஆனால் எல்லா இடத்துக்கும் இது பொருந்துமா என்பதையும் கணக்கிலெடுக்க வேண்டும்.
இக்கருத்துகளை எடைபோட்டுப் பார்த்தால் அவருடைய கருத்தில் அழுத்தம் சற்று அடர்த்தியாகவே தென்பட்டது. ஆனாலும், பிற துறைப் பட்டதாரிகள் வங்கிப் பணிக்கு உரியவரில்லை எனவும் கூறஇயலாது. மேலை நாடுகளில் அடுத்த ஐந்தாண்டுகளில் எவ்வளவு பொறியாளர்கள் தேவைப்படுவர் எனக் கணக்கிட்டு அத்தனை இடங்களை மட்டும் கல்லூரிகளில் அனுமதித்துக் கற்க வைப்பார்களாம்.
ஆனால் நம் நாட்டில் புற்றீசல்கள் போல எல்லாப் படிப்புகளுக்குமான கல்லூரிகள். இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் ஒருபுறம். எந்த வேலையானானலும் பரவாயில்லை என்னும் மனநிலை மறுபுறம்.
அதனால்தான் கடைநிலை ஊழியருக்கான பதவிக்கு முதுகலை படித்தவர்களும் விண்ணப்பம் போடும் துயரச்சூழல். இவை போன்றவற்றால் "படிப்பும் வேலையும்' என்ற தலைப்பில் விவாதிக்க வேண்டிய சூழல் இயல்பாகவே இவண் கருக்கொள்கிறது.
வடமாநிலத்திற்குச் சுற்றுலா. குழுவாகப் பயணித்தோம். சென்னையிலிருந்து தொடர்வண்டிப் பயணம். எங்களுடன் பயணித்த ஒரு குடும்பம் எல்லோருக்குமாக இட்லி, துவையல், மிளகாய்ப்பொடி போன்றவற்றை எடுத்து வந்தது. இரவு உணவுக்கான நேரம் வந்தது.
ஒவ்வொருவர் கையிலும் காகித அட்டையிலான தட்டுகள். இட்லி வைத்திருந்த பெரிய பாத்திரத்திலிருந்து எல்லோருடைய தட்டுகளிலும் மூன்றுமூன்று இட்லிகள் வைக்கப்பெற்றன. துவையல் வைக்கப்பட்டது. சிலர் மட்டும் எண்ணெய் கலந்த மிளகாய்ப்பொடியையும் உடன் சேர்த்துக் கொண்டனர்.
மூன்று இட்லிகளையும் உண்ட ஒரு சிறுவனுக்கு அடுத்தாற்போல இட்லி தேவைப்பட்டது. பெரிய கலத்தில் உள்ள இட்லியை எடுக்கப் போனபோது அவனுடைய அம்மா அவனைத் தடுத்தார். இருங்க இதோ வந்துடறேன் என்றபடி அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த இட்லித்தட்டை இருக்கையில் வைத்துவிட்டார். விடுவிடென்று அந்தப் பெட்டியின் இறுதிப் பகுதியையும் கடந்தார். வெளிப்பகுதியிலிருந்த குழாயில் கையைக் கழுவிவிட்டுத் திரும்பினார்.
தான் கொண்டுவந்திருந்த பெட்டி ஒன்றைக் குடைந்து, பொருட்களைத் துழாவி, அடிப்பகுதியிலிருந்து ஒரு மர இடுக்கி ஒன்றை எடுத்தார். அதனையும் குழாய் நீரில் கழுவிக் கொணர்ந்தார். அந்த இடுக்கியின் மூலம் பெரிய கலத்திலிருந்து இட்லியை எடுத்துப் பையனின் தட்டில் வைத்தார்.
இந்தப் பணிகளை அவர் மேற்கொள்வதற்குள் பலரின் தட்டுகளில் இட்லிகள் தீர்ந்துவிட்டன. அந்தப் பையன் கேட்டான் இட்லியைக் கையாலெடுத்துக் கொண்டால் என்னவாம்? ஓர் இனந்தெரியாத சினம் இச்சொற்களில் இழைந்தது.
"அப்படியில்லே தம்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிற எச்சில் கையினாலே இட்லியை எடுத்தா மத்தவங்களுக்கு ஒரு மாதிரியா இருக்கும். சிலர் அருவருப்பாகக் கூட நெனப்பாங்க அதுனாலதான் கரண்டி, இல்லாட்டா இடுக்கி வச்சு எடுத்துக்கறோம்' என்றார்.
அந்தப் பையனைவிட இரண்டு மூன்று வயது மூத்த ஒரு சிறுமி சட்டென்று "எச்சில் கையினாலே எடுக்க வேண்டாம் இடது கையினாலே எடுத்துக்கலாமே' என்றார். பொதுவாக அப்படிச் செய்வதில்லை. இடது கையால் உணவினை நேரடியாகத் தொட்டு எடுப்பதில் பலருக்கு இசைவில்லை.
இதைப் பெரியவர்கள் புரியவைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பையன் உதிர்த்த சொற்களில் இன்னமும் விவாதம் உறங்கிக் கொண்டுள்ளது அவன் கூறியவை வருமாறு:
"எல்லாம் சரிதான். நான் என் எச்சில் கையால் இட்டலிப் பாத்திரத்தில் கை வைக்கக்கூடாது என்கிறீர்களே, நான் தொட்ட இட்லியைத்தான் வெளியே எடுத்துக் கொள்கின்றேனே மற்ற இட்லிகள் எல்லாம் புனிதம் கெடவில்லையே, எல்லா உணவுகளிலும் என் எச்சிற்கை படவில்லையே, அப்புறம் என்ன தவறு?
ரெண்டாவதா நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கையாலே எடுத்து மத்தவங்களுக்குக் கொடுத்தாத்தானே தப்பு? நான் எனக்குத்தானே எடுத்துக்கறேன்'. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எங்களைப் போன்றவர்க்கு உடனடியாகப் பதில் கூறத் தெரியவில்லை. உண்டு பல நாட்களாகிவிட்டன. அந்த விவாதத்தை மட்டும் இன்னமும் அசைபோட்டுக் கொண்டே இருக்கிறோம்.
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஒரு மேடையில் பேசும்போது பின்வரும் செய்தியை முன்வைத்தார். "மக்களை ஏழை என்றும் பணக்காரன் என்றும் இறைவன் படைத்தான் என்று பலரும் நினைக்கிறோம். அது பொய். இறைவனைத்தான் நாம் அப்படி வேறுபடுத்தி வைக்கிறோம்.
பிள்ளையார்பட்டி என்னும் திருத்தலத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளியிருக்கிறார். அவரை வணங்குகிறோம் அருள் பெறுகிறோம். கோவிலின் வருவாயும் கணிசமானது. அவ்வூரின் மையச் சாலையிலிருந்து உள்ளே வரும்போது ஒரு மரத்தடியில் ஒரு விநாயகர் இருக்கிறார். நித்தியபூசை என்பதாகக்கூட வழிபாடு அந்த விநாயகருக்குக் கிடையாது. ஒரு சின்னக் கர்ப்பூரம் கூட ஏற்றப்படுவதில்லை. மலர் வழிபாடு, அருச்சனை என எதுவுமே மரத்தடி விநாயகருக்கு இல்லை.
ஒரே ஊரில் இரண்டு விநாயகர்கள்மேல் இரண்டுவிதப் பார்வைகள். இப்போது சொல்லுங்கள் கடவுள் மனிதனை ஏழை, செல்வந்தர் எனப் படைத்தாரென்பது மெய்யா அல்லது மனிதர்கள் கடவுளை ஏழை, பணக்காரர் எனப் பிரித்து வைத்துள்ளனர் என்பது மெய்யா?'
ஆன்மிகத்துக்கு எதிரானதன்று இக்கேள்வி. அதிகார வர்க்கம் - அடிமை வர்க்கம் எனப்பேசும் போக்கினதாகவும் இக்கூற்று இல்லை. இவ்வாறு அமைந்தமைக்கான காரணங்கள் இருக்கக்கூடும். இக்கேள்விக்குச் சட்டென்று பதில் தர இயலாது. ஆனாலும், விவாதத்திற்குரியது.
புதுவையிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஊரின் நடுவே பெரிய கோவில் இருக்கும். அதற்குப் பெயர் ஏழை மாரியம்மன் கோவில். அதே ஊரில் அக்கோவிலைவிடச் சிறிய ஆலயங்கள் உண்டு. அங்கு எழுந்தருளியுள்ள அம்மனை ஏழையம்மன் என்று அழைப்பதில்லை.
ஏராளமான செல்வங்களைக் கொட்டி வெகு நேர்த்தியான ஆலயம் ஒன்றை அரசன் எழுப்பிட, இறையன்பர் ஒருவர் தம் மனத்துக்குள்ளே ஆலயம் கட்டியபோது ஆண்டவன் மனக்கோவிலில் எழுந்தருளினானே தவிர, மன்னன் கோவிலுக்கு வரவில்லை என்ற புராணம் இந்த மண்ணில்தான் நிகழ்ந்தது.
கூர்ந்து நோக்கினால், புகழ்பெற்ற சிலருடைய வருகைக்குப் பிறகு சில ஆலயங்கள் பத்தர்களை ஈர்த்தன என்பது தெரியவரும். சில நம்பிக்கைகளும் இச்செயல்பாடுகளின் பின்னணியில் அமைந்திருக்கலாம்.
கற்பக விநாயகருக்கு உரிய முறையில் வழிபாடு இயற்றுவோர் பத்தில் ஒரு பங்காவது பக்கத்து விநாயகருக்கும் தங்களின் பங்களிப்பை செய்யலாமே செய்ய வேண்டுமென்பதுதான் இவ்விவாதத்தின் மையமாகிறது. இறையன்பர்களுக்கு இப்படிப் பாடம் நடத்த முடியாதுதான். ஆனால் கேள்வியின் பின்னால் உள்ள கனமான சிக்கலினை அழித்துவிடவும் முடியாதே.
வாழ்க்கைப் பாதையில் இப்படி விவாதங்கள் பல தோன்றும். சரியான விடைகளை நோக்கி அவை நகர்ந்தால் நலம் கூடும்; வளம் சேரும்.
விவாதங்களுக்கான களங்களும் மிகுதி. விவாதங்களும் நிறைய. சில களங்கள் மட்டும் ஓரளவே பொருத்தமான விடைகளைத் தந்திருக்கின்றன. எஞ்சியுள்ள தொடர் சிக்கல்களையும் விரிவாக விவாதிக்க முன்வரலாமே?

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...