Wednesday, September 7, 2016

'என்னால முடியலடா சாமி... ஆள விடு!' : 25 பரோட்டா சாப்பிட முடியாமல் திணறல்

அன்னுார் : கோவை, அன்னுார் அருகே, 25 பரோட்டா சாப்பிடும் போட்டியில், 5,001 ரூபாய் பரிசுத் தொகை யாருக்குமே கிடைக்கவில்லை. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல நிறுவனங்களில் தள்ளுபடி விற்பனையை கேள்விப்பட்டிருப்போம். சற்று வித்தியாசமாக, கோவை அன்னுார் அருகே, ஒரு ஓட்டல் நிர்வாகம், வெண்ணிலா கபடி குழு திரைப்பட பாணியில், 25 பரோட்டாக்கள் சாப்பிட்டால், 5,001 ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தது. நேற்று முன்தினம் நடந்த போட்டியில், 200 பேர் குவிந்தனர். 

பங்கேற்றவர்களிடம், 100 ரூபாயும் பெறப்பட்டது. இதில், காலை உணவை தவிர்த்து வந்தவர்கள் தான் ஏராளம். முதல் சுற்றில், ஐந்து பேர் பங்கேற்றனர். குருமாவை அதிகம் தொட்டுக் கொண்டால், பரோட்டா சாப்பிட முடியாது என்று உணர்ந்த பலர், பரோட்டாவை மட்டுமே, 'ருசி' பார்த்தனர்; நீரையும் அதிகம் பருகவில்லை. இதில், செல்வபுரத்தை சேர்ந்த பசும்பொன் அழகுக்கு மட்டுமே, 10 பரோட்டாக்களை விழுங்க முடிந்தது.இரண்டாவது சுற்றில், பங்கேற்ற ஆறு பேரில், ஒருவர் கூட, ஏழு பரோட்டாவை தாண்டவில்லை. மூன்றாவது சுற்றில், யாரும் பங்கேற்காததால், 20 பரோட்டா சாப்பிட்டாலே, பரிசுத் தொகை வழங்கப்படும் என, ஓட்டல் உரிமையாளர் தெரிவித்தும், ஒருவரும் அசைந்து கொடுக்கவில்லை.

 பரோட்டாவை சாப்பிட்டவர்கள், அதற்குரிய பணத்தை கொடுத்து, பரிசு வாங்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் திரும்பினர். சாப்பிட வந்தவர்களை விட, பார்க்க வந்த கூட்டமே அதிகம். பத்து பரோட்டா சாப்பிட்ட பசும்பொன் அழகு கூறுகையில், ''செல்வபுரத்தில் பரோட்டா மாஸ்டராக உள்ளேன். சாதாரணமாக, காலையில், 20 பரோட்டா சாப்பிடுவேன். இங்கு, 10க்கு மேல் சாப்பிட முடியவில்லை. பரோட்டாவின் எடை மற்றும் எண்ணெய் அதிகமாக இருந்தது, இதற்கு காரணம்,'' என்றார். பரிசுத் தொகை வாங்க முடியவில்லை என்ற ஏக்கமும், யாருக்கு கிடைக்கும் என்ற பொதுமக்களின் ஆர்வமும், கடைசி வரை நிறைவேறாமலே போனது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...