Monday, September 12, 2016

விபரீத காதல்

தமிழகத்தில் ஒருதலைக் காதலால் இளம் பெண்கள் வெட்டிக்கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. நுங்கம்பாக்கம் இன்ஜினியர் சுவாதி பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள ரயில் நிலையத்திலே வெட்டிசாய்க்கப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவம் மக்கள் மனதைவிட்டு அகலாத நிலையில் ஒருதலைக் காதலுக்காக விழுப்புரம் நவீனா, கரூர் சோனாலி, தூத்துக்குடி பிரான்சினா, தற்போது விருத்தாசலம் புஷ்பலதா என கடந்த 3 மாதத்தில் மட்டும் 4 பெண்கள் விலை மதிக்க முடியாத தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.
தான் விரும்பிய பெண் தனக்கு கிடைக்காவிட்டால் ஆசிட் வீசி அவளது முக அழகை கெடுக்கும் கொடூர செயல்களில்தான் கடந்த காலங்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது ஒரு படி மேலே போய் தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் வெட்டி சாய்க்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அரிவாளால் கழுத்தை அறுத்தும், தீவைத்து எரித்தும், கட்டையால் அடித்தும் கொலை செய்யும் கலாசாரம் இளைஞர்களிடையே அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.

காதலுக்காக தாடி வைப்பதும் தற்கொலை செய்துகொண்டதும் பழங்கதையாகிவிட்டது. தற்போது பழி உணர்வுதான் மேலோங்கி வருகிறது. இளைஞர்களின் இந்த கொடூர போக்கிற்கு சினிமா மற்றும் சமூக ஊடகங்களும் ஒரு காரணமாகிவிட்டது. தங்களது காதலை பெண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இளைஞர்கள் இருக்கின்றனர். பெண்களுடைய ஆசாபாசங்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. ஒருதலைக் காதலில் ஈடுபடும் இளைஞர்கள் கண்டிப்பாக மாற வேண்டும். அதுதான் தமிழ் சமூகத்துக்கு பெருமையை தேடித்தரும். இதுவரை நடந்த நான்கு பலி சம்பவங்கள் மூலம் தாழ்ந்து போய்க்ெகாண்டிருக்கும் தமிழ்நாட்டின் பாரம்பரிய பெருமையை மீண்டும் நிலைநிறுத்துவது இளைஞர்களின் கையில்தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024