மாற்றம் ஏற்படுத்தும் தீர்ப்பு!
By ஆசிரியர் | Last Updated on : 09th September 2016 01:30 AM | அ+அ அ- |
காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த 24 மணி நேரத்தில், அது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஏற்கெனவே 2013-இல், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கொலை, வன்புணர்வுக் குற்றங்கள் போன்றவற்றிற்கு எந்தவித விசாரணையும் இல்லாமல் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதைக் கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்திருந்தது.
சாமானிய மக்கள் நலன் கருதும், வெளிப்படைத்தன்மை
யுடைய நீதி மற்றும் சட்ட நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதுதான், அரசு ஊழியர்கள் தங்களது பணிகளை எந்தவித விருப்பு வெறுப்பின்றியும், உள்நோக்கமோ லாபமோ கருதாமலும் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தும். மக்களின் கோரிக்கையோ, குறையோஉடனடியாக சட்டப்படி தீர்வு காணப்படும்போது மட்டும்தான்,மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதும், அரசு நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கை ஏற்படும்.
எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும், பதிவான 24 மணி நேரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்போது, பாதிக்கப்பட்ட நபர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களும், உடனடியாக முதல் தகவல் அறிக்கையின் நகலைப் பெற முடியும். சாதாரணமாக, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வது எவ்வளவு சிரமமோ, அதே அளவு சிரமத்தை சாமானிய மக்கள் அதன் நகலைப் பெறுவதற்கும் அனுபவித்தாக வேண்டும். காவல் நிலையங்களில் பணம் கையூட்டுக் கொடுக்கப்படாமல் முதல் தகவல் அறிக்கையின் நகலைப் பெறுவது என்பது எளிதானதல்ல.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி முதல் தகவல் அறிக்கை இணையதளத்தில் உடனடியாகப் பதிவேற்றம் செய்யப்படுமானால், குற்றம் சாட்டப்பட்டவர் அதன் நகலைப் பெற்று வழக்குரைஞரின் உதவியுடன் பிணையில் வெளியில் வர முடியும். பாதிக்கப்பட்டவர்களும், தங்களது குற்றச்சாட்டு பதிவாகி இருக்கிறது என்று ஆறுதல் அடைய முடியும்.
உச்சநீதிமன்றம், இணையதளப் பதிவேற்றம் செய்வதற்கு சில விதிமுறைகளையும், விதிவிலக்குகளையும் அளித்திருக்கிறது. பயங்கரவாதம், ஊடுருவல், தீவிரவாதச் செயல்கள், பாலியல்
குற்றங்கள், தனிநபர் உரிமையையோ, சுதந்திரத்தையோ பாதிக்கும் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும் அவை இணையதளத்தில் பதிவேற்றம்
செய்யப்பட வேண்டியதில்லை என்று விதிவிலக்கு அளித்திருக்கிறது. அதேநேரத்தில், பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று தீர்மானிக்கும் முடிவை, காவல் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) நிலையிலுள்ள அதிகாரிகளுக்குக் கீழே உள்ளவர்கள் எடுக்கமுடியாது. அதாவது, காவல் நிலைய அதிகாரிகள், எந்தவொரு முதல் தகவல் அறிக்கையையும் பதிவேற்றம் செய்யாமல் தவிர்த்துவிட முடியாது.
பெரும்பாலான வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையைக் காவல் துறையினர் தாக்கல் செய்யாமல் காலத்தைக் கடத்துவதற்குப் பல தரப்புகளிலிருந்தும் அழுத்தம் தரப்படுவது வழக்கமாகவே இருந்து வருகிறது. ஆட்சியில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள், காவல் துறை மேலதிகாரிகள், செல்வாக்கான தலைவர்கள் என்று முக்கியமான வழக்குகளில், சாமானியர்கள் புகார் அளித்தாலும் அதை சட்டை செய்யாமலும், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யாமலும் காவல் துறையினர் தவிர்ப்பது இன்றும்கூட தொடரத்தான் செய்கிறது.
2006-ஆம் ஆண்டு தில்லியை அடுத்த நொய்டாவிலுள்ள நிதாரி என்கிற இடத்தில் பல ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகள் காணாமல் போவது வழக்கமாக இருந்தது. அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் அளித்த புகார்களைக் காவல் துறையினர் சட்டையே செய்யவில்லை. தனது மகள் பிங்கி மாயமாய் மறைந்ததைத் தொடர்ந்து ஜதின் சர்க்கார் என்பவர் நிதாரி கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளியான மோனிந்தர் சிங் பாந்தர் மீது குற்றப்புகார் அளித்தார். அதையும் காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டது.
குற்றவாளியான மோனிந்தர் சிங் பாந்தருக்கு சாதகமாக வாக்குமூலம் அளிக்கத் தன்னை மத்தியப் புலனாய்வுத் துறை வற்புறுத்துவதாகவும் தனக்குப் பாதுகாப்புத் தரும்படியும் காவல் துறையிடம் முறையிட்ட ஜதின் சர்க்கார், மேற்கு வங்காளத்திலுள்ள குர்ஷிதா
பாதில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அவரது மனைவி வந்தனா சர்க்கார் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டபோதுதான் "ஏன் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை' என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதைத் தொடர்ந்துதான் 2013-இல் ஐந்து பேர் கொண்ட உச்ச
நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதைக் கட்டாயமாக்கியதுடன், அப்படிப் பதிவு செய்யாமல் தவிர்க்கும் காவல் துறை அதிகாரிகள்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டவும் வழிகோலியது. இப்போது நீதிபதிகள் தீபக் மிஸ்ராவும், சி. நாகப்பனும் இன்னும் ஒருபடி மேலே போய், முதல் தகவல் அறிக்கைகள் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதற்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.
வருகிற நவம்பர் 15-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் இந்த உத்தரவு, காவல் நிலைய செயல்பாடுகளில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரக்கூடும் என்று எதிர்பார்க்கலாம். அதற்கு, மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தியாக வேண்டும். கையூட்டு வாங்காத காவல் நிலையங்கள் உருவாகும்போது மட்டும்தான், இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியும், அனைவருக்கும் நீதியும் உறுதிப்படுத்தப்படும்!
No comments:
Post a Comment