Sunday, September 11, 2016

நன்றி குங்குமம் டாக்டர்

மது... மயக்கம் என்ன? டாக்டர் ஷாம்




எளிதாகக் கிடைப்பதே எல்லோரையும் குடிக்கத் தூண்டுகிறது!


தற்கொலை செய்து கொள்ள தைரியம் அற்றவர்கள் மரணமடைய தேர்ந்தெடுக்கும் எளிய வழி மது அடிமையாக மாறுவதே! எப்படித் தொடங்குகிறார்கள்? இன்றைய குடிமக்களில் பலர் வேடிக்கையாகக் குடிக்கத் தொடங்கியவர்களே. இந்தத் தொடக்கத்துக்கு முதல் முக்கியமான காரணம் என்ன? எளிதாகக் கிடைப்பதே பலரையும் குடிக்கத் தூண்டுகிறது. உலக அளவில் செய்யப்பட்ட பல ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தெளிவாகத் தெரிய வரும் உண்மை இது. ஆம்... தமிழ்நாட்டில் வசிக்கிற ஒவ்வொருவருக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளாமலே இந்த உண்மை பளிச்சென விளங்கும். தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகள் இருப்பதாலேயே, குடிக்கிற பழக்கத்துக்கு ஆட்படுகிற ஏராளமானோரை நாள்தோறும் சந்தித்துக்கொண்டே இருக்கிறோம். 


குடிநோயாளி ஆவதற்கு முன்போ, குடிப்பழக்கம் இல்லாத வரையோ, யாரும் குடிப்பதற்காக ஏழு கடல் ஏழு மலை தாண்டுவது போன்ற பிரயத்தனங்கள் எதையும் செய்வதில்லை. அந்தப் பழக்கம் ‘விடாது கருப்பு’ போலத் தொற்றிய பின்புதான், அவர்கள் குடிக்காக எந்த ரிஸ்க்கையும் எடுக்கத் துணிவார்கள். பூட்டிய கடையை திறக்க வைப்பார்கள்... அண்டை மாநிலத்துக்குப் படை எடுப்பார்கள்... ‘அந்தச் சரக்கு இல்லாவிட்டாலும், எந்தச் சரக்காவது ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று இறைஞ்சுவார்கள்... பணம் இல்லையெனில் அதற்காக எதையேனும் விற்கவும், அடமானம் வைக்கவும் அல்லது கடன் வாங்கவும் தயங்க மாட்டார்கள். குழந்தையின் உண்டியல் சேமிப்பை எடுத்து வருவது கூட குடியின் பொருட்டு அவர்களுக்குத் தவறாகாது. இதற்கு அடுத்த செயல்தான் மதுவுக்காக மானம் கருதாது கை ஏந்துவது.

இதற்கு வலு சேர்க்கும்  சமூக அரசியல் காரணங்களும் உண்டு. தேவைக்கேற்ப சப்ளை என்கிற வணிக இயல்பு மாற்றப்பட்டு, சப்ளைக்கேற்ப குடிப்பவர்களை அதிகப்படுத்தும் பணியாகி விட்டது இங்கு. இதுவும் ஒருவித தேவைதான். குடிக்கிறவர்களுக்கான  தேவை அல்ல... குடிக்க வைக்கிறவர்களுக்கான தேவை. வணிக, அரசியல் ரீதியான தேவை. ஆனால், இதற்குப் பலியாகிறவர்கள் யார்? எளிதாகக் கிடைப்பது என்கிற விஷயத்தைத் தாண்டி, ஒருவரை மதுவின் பால் ஈர்ப்பது எது? நண்பர்கள், உறவினர்களின் தூண்டு தல். சில நேரம் வீட்டில் மற்றவர்கள் குடிப்பதைப் பார்க்கும் சிறுவர்கள் கூட, மறைமுகமாக மதுவின் பக்கம் 
தூண்டப்படுவது உண்டு. இதுவும் சமீபகாலமாக அதிகமாகி இருக்கிறது. இப்போதெல்லாம் டீன் ஏஜ் காலகட்டத்தில் சோதனை முயற்சியாக மது அருந்தி பார்ப்போரில் பாதிக்கும் அதிகமானோர் தொடர்ந்து குடிக்கத் தொடங்கி விடுகிறார்கள். அதனால்தான் அபாயத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 

அடுத்த காரணி?

டீன் ஏஜில் மதுவைத் தொடாமல் தாண்டி வந்தவர்கள் கூட, பின்னாளில் அதற்கு அடிமையாவதும் உண்டு. நடுத்தர வயதில் ஏற்படும் மன அழுத்தம் இதற்கு ஒரு காரணம். குடும்பக் குழப்பம், வேலையில் கஷ்டம், பொருளாதாரச் சிக்கல் போன்றவை காரணமாக, தங்கள் கவலையை மறக்கடிக்கலாம் என்று எண்ணி மதுவுக்குள் வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களில் பலர் கூடுதல் கஷ்டமாக மதுவுக்கு அடிமையாகி விடுகிறார்கள். ஒருகட்டத்தில் உடல் மற்றும் மனம் இரண்டுமே அவர்களை குடிக்க வைப்பதாகி விடுகிறது. குடித்தே தீர வேண்டும் என்கிற நிலைக்குள் வந்து விழுகிறார்கள். குடிக்க இயலாமல் போனாலோ, உடல்நலம் குன்றியதாக உணர்கிறார்கள். மது அருந்தினாலோ, தற்காலிகமாக அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் மீண்டதாக எண்ணுவார்கள். போதை ஓரளவு தெளிந்ததும் மீண்டும் பிரச்னைகள்... மீண்டும் குடி... எங்கே போகும் இந்தப் பாதை? மருத்துவரும் அறிய மாட்டார்!

உடல்நிலை மோசமாகும் வரையோ, பணம் இல்லாத நிலை வரும் வரையோ, மது அருந்துவோர் யாரிடமும் உதவி வேண்டுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரை மதுவே சர்வரோக நிவாரணி! உடல்நலமற்ற பொழுதில் மருத்துவரைச் சந்திக்கையிலும், அவர்கள் மது அருந்தும் விஷயத்தையும், மதுவினால்தான் உடல்நலம் குன்றிய உண்மையையும் வெளிப்படுத்துவதில்லை. மருத்துவரே அறிந்தால்தான் உண்டு. இதனால், அவர்களுக்கு முறையான சிகிச்சையும் கிட்டாமல் போகிறது. பிரச்னையும் நீண்டு கொண்டே செல்கிறது. இனி எந்தப் பிரச்னைக்காக நோயாளி வந்தாலும், அவருக்கு குடிப்பழக்கம் உள்ளதா என மருத்துவர்களே ஆய்ந்து அறியும் நிலைமை இப்போது உருவாகிவிட்டது.

அறிவது எப்படி?

நம் குடும்ப உறுப்பினர் அல்லது உறவினர் அல்லது நண்பருக்கு தீவிரமான குடிப்பழக்கம் இருப்பதை நாம் அறியாமலே கூட இருக்கலாம். இருப்பினும் சிலபல அறிகுறிகளைக் கொண்டு, நாம் அதன் தீவிரத்தை அறிந்து உதவ முடியும். உதாரணமாக... 

குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடம் உறவுச் சிக்கல்கள்

அடிக்கடி அல்லது தொடர்ச்சியான உடல்நலப் பிரச்னைகள் 

கை கால் நடுக்கம், வாய் குழறுதல், காலையில் கூட ஆல்கஹால் வாசனை

சோர்வு, பதற்றம் உள்பட பலவித மனவியல் சிக்கல்கள்

அலுவலகம் அல்லது தொழிலில் ஈடுபாடின்மை... அளவுக்கு மீறிய விடுப்புகள்

வயிற்றுக்கோளாறுகள் (சில நேரங்களில் ரத்த வாந்தி)

தூக்கம் இன்மை

பாலியல் சார்ந்த பிரச்னைகள்

விபத்துகளில் சிக்குதல் அல்லது காரணம் அறியாமலே காயம் அடைதல். 

இதுபோன்ற அறிகுறிகளில் ஒன்றோ, பலவோ ஒருவரிடம் அடிக்கடி உணர முடிந்தால், அவர் மது அடிமை ஆகிக்கொண்டிருக்கிறார் என்றே பொருள். 
அப்படியானால், அவர் சமீபகாலமாகத்தான் மதுவின் பிடிக்குள் அகப்பட்டிருக்கிறாரா? அவர் குடிப்பது உங்களுக்கோ, குடும்பத்துக்கோ கவலைக்கு உரிய செயலாகத் தோன்றுகிறதா? இரவில் மட்டுமல்லாது காலையிலும் குடிக்கிறாரா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை அறியுங்கள். விடைகள் இல்லை என்று தெரிந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், ‘ஆம்’ என்று நீங்கள் சொல்வீர்களானால், உங்கள் உதவியே அவருக்கு உடனே தேவை. அவரை மீட்க முடியுமா?
ஆம்... உங்களால் முடியும்! 

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...