தொலையாத இளமையின் வசீகரம்
ந.வினோத்குமார்
இன்று போய் நாளை வா!- 35 ஆண்டுகள்
உங்களுக்கு ‘பெல்ஸ்' பேன்ட் ஏன் பிடிக்கும்?
இதுபோன்ற பல கேள்விகளை நீங்கள் கடந்து வந்திருக்கலாம். நமக்குப் பிடிக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்குப் பின்னாலும் யாரேனும் ஒரு இரண்டாம் நபர் அல்லது மூன்றாம் நபர் நேரடியாகவோ, முறைமுகமாகவோ காரணமாக இருக்கலாம்.
இந்தக் கேள்விக்கு உங்களில் பலர் பலவிதமான பதில்களைச் சொல்லக் கூடும். நான் கூறும் ஒரே பதில்... நடிகர் பாக்கியராஜ்!
சமீபத்தில் எல்விஸ் ப்ரெஸ்லியின் ‘கான்ட் ஹெல்ப் ஃபாலிங் இன் லவ்' பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அது அவர் அணிந்திருந்த பெல்ஸ் பேன்ட்டின் மீது நினைவை நிறுத்தியது. அந்த பெல்ஸ் பேன்ட் என்னை பாக்கியராஜைப் பற்றிச் சிந்திக்க வைத்தது. பாக்கியராஜ் என்னை ‘இன்று போய் நாளை வா' படத்தை அசைபோட வைத்தார். அந்தப் படத்துக்கு இந்த ஆண்டு 35 வயது!
அது 2000களின் ஆரம்பம். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடித்துவிட்டு ஊரைச் சுற்றிக்கொண்டிருந்த காலம். அன்றைய நாட்களில் எனக்கும் என் நண்பர்களுக்கும் இருந்த ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சிதான்.
எஸ்.ராமகிருஷ்ணன் தன் கட்டுரை ஒன்றில் சொல்வதுபோல 'வேலையற்றவனின் பகல்' சுட்டெரித்துக்கொண்டிருந்த ஒரு நாள். ஏதோ ஒரு சேனலில் பாக்கியராஜின் ‘இன்று போய் நாளை வா' படம் ஒளிபரப்பாகியிருந்தது.
சினிமாக் கனவுகளும், கவிதை கிறுக்கும் ஆசைகளும் அப்போதுதான் முளைவிட்டிருந்தன. எனக்கு நினைவு தெரிந்து நான் ஒவ்வொரு காட்சியையும் கூர்ந்து கவனித்த முதல் படம் அது.
கருப்புச் சட்டை, வெள்ளை பேன்ட் அணிந்து கொண்டு தன் வீட்டின் முன் ராதிகாவுக்காகக் காத்திருக்கும் அந்த பழனிச்சாமி கதாபாத்திரம் மனதில் நின்றது. அதைக் காட்டிலும் அந்தக் கதாபாத்திரம் அணிந்திருந்த பெல்ஸ் பேன்ட் மீது இனம் புரியாத ஆசை உண்டானது.
இடுப்பில் இருந்து தொடை வரை ‘ப்ளீட்' வைக்காமல் இறுக்கமாகவும் பிறகு கணுக்கால்கள் வரை ஒரே சீராக வளர்ந்து, கணுக்கால் முடிகின்ற இடத்துக்குச் சற்றும் மேலிருந்து பாதம் வரை அகலமாக விரிந்து ‘எம்மிங்' செய்யப்பட்டிருக்கும்.
அப்படியான பேன்ட்டையும், கழுதைக் காது வைத்த கலர் சட்டைகளையும் அணிந்து திரிந்த 80களின் ‘யூத் ஃபீவரை' முழுமையாக ‘எக்ஸ்ப்ளாய்ட்' செய்த முக்கியமான படங்களில் ஒன்று... ‘இன்று போய் நாளை வா!'
ஒரு பெண். மூன்று இளைஞர்கள். அந்தப் பெண்ணின் மனதை வெல்வது யார் என்பது போட்டி. அதற்கு அவர்கள் மேற்கொள்ளும் பிரயத்தனங்கள். இடையில் ஒரு வில்லன். கடைசியில் சுபம்.
உணர்வு பூர்வமான காதல் திரைப்படமாகவோ அல்லது ஆக் ஷன் படமாகவோ வந்திருப்பதற்கான அனைத்துச் சாத்தியங்களும் உள்ள கதை. ஆனால் அப்படியான திரைப்படமாக வந்திருந்தால் அது நிச்சயம் தோற்றுத்தான் போயிருக்கும். முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே பிரதானமாக வைத்துக்கொண்டு திரைக்கதையைப் பின்னியதால்தான் இந்தப் படம் இன்றளவும் ‘எவர்க்ரீன்' படமாக இருப்பதற்குக் காரணமாகிறது.
படத்தைத் தாங்குவது பாக்கியராஜ் மட்டுமே அல்ல, அவருடன் சேர்ந்து அவரின் நண்பர்களாக வரும் பழனிச்சாமி, ஜி.ராம்லி ஆகியோரும்தான். இந்தி தெரியாத நிலையில் நம்மில் பலரும் காமெடியாகச் சொல்லும் ‘ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா' என்ற ஒரு வரியே போதும். இந்தப் படம் இந்தி தெரியாதவர்கள் இருக்கும் வரை வாழும் என்பதில் சந்தேகமில்லை. ‘காமா பயில்வானின் ஒரே சிஷ்யன் சோமா பயில்வான்' கதாபாத்திரத்தில் வாழ்ந்த கல்லாப்பெட்டி சிங்காரத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.
அன்றைய நாட்களில் கோவை மாவட்டத்தில், இப்படத்தில் இடம்பெற்ற ‘மேரி ப்யாரி தில்கே ராணி' பாடல் ஒலிக்காத காலேஜ் கல்ச்சுரல்ஸ் எதுவுமே இல்லை என்ற ஒரு தகவலுண்டு. அந்தப் பாடல் காட்சியேகூட பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி.கல்லூரியின் ஆண்டு விழாவின்போது பாடப்படுவதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
இந்தப் படம் கோவையில் சக்கை போடு போட்டதற்குக் காரணம், இதில், முழுக்க முழுக்க பாப்பநாயக்கன்பாளையம், பீளமேடு, காந்திபுரம், நிர்மலா காலேஜ், விமன்ஸ் பாலிடெக்னிக், எனக் கோவை மாவட்டத்தின் அடையாளங்கள் பலவற்றை வசனங்களில் பயன்படுத்தியிருப்பார்கள். கோவையில் நடப்பது போன்ற கதை அமைந்திருந்தாலும், அந்த மாவட்டத்துக்குரிய விஷயங்கள் எதுவும் அவ்வளவாகக் காட்டப்படாதது ஒரு குறை.
நண்பர்கள் மூன்று பேரும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் காதலை வெளிப்படுத்துவது, ராதிகாவிடம் லெட்டர் கொடுக்கும்போது வெங்கட் கதாபாத்திரம் பேசும் ஜெயகாந்தனின் நாவல் வரிகளைக் கொண்ட வசனம், சிகரெட் துண்டுகளை 'ஜெயா' என்ற பெயரின்
வடிவில் அடுக்கிவைத்து பாக்கியராஜ் சோகத்தில் திளைப்பது எனக் காட்சிகளில் பல சுவாரஸ்யங்கள் அழகாகக் கோர்க்கப்பட்டிருப்பது, நம்மைத் திரைக்கு வெளியே இருந்துகொண்டு வேடிக்கை பார்க்கும் இன்னொரு கதா பாத்திரமாக மாற்றிவிடுகிறது.
எதிர்வீடுகளின் இளம்பெண்கள் வாலிபர்களுக்குத் தேவதைகளாகத் தெரிவதும், அதே எதிர்வீடுகளின் ஆண்கள் இளம்பெண்களுக்கு ராஜகுமாரர்களாகத் தெரிவதும் இளமையின் வசீகரங்களில் ஒன்று.
அந்த வசீகரத்தை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்ட படம் இது. நீங்கள் இளைஞராகவோ அல்லது முதுமையின் வாசலில் இருப்பவராகவோ இருக்கலாம். இந்தப் படத்தைப் பார்க்கும்போது உங்களால் மனம் விட்டுச் சிரிக்க முடிந்தால், கதையின் ஓட்டத்தில் உங்களால் லயிக்க முடிந்தால் உங்களுக்குள் அந்த வசீகரம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதாக அர்த்தம்!
No comments:
Post a Comment