Sunday, September 11, 2016

இப்போ நல்லா இருக்கீங்களா?- 108-ன் அக்கறை


ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டதால் மனைவியின் சடலத்தை இறுதிச் சடங்குக்கு 10 கி.மீ., தூரத்துக்குத் தோளில் சுமந்து சென்றார் கணவர். சிகிச்சைக்காக மகனைத் தோளில் சுமந்து சென்றார் தந்தை.

- இந்த இரண்டு சம்பவங்களும் ஆந்திரத்தைத் தாண்டியுள்ள ஒடிசாவில் நடைபெற்றவைதான்.

இதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்த போது, “ஹலோ நாங்க 108-ல இருந்து பேசுறோம். எங்களோட ஆம்புலன்ஸ் சேவையை நீங்க பயன்படுத்தியிருந்தீங்க. இப்போ உங்க உடம்பு நல்லாயிருக்கா” என அக்கறையுடன் கேட்டது அந்தக் குரல். திடீர் அழைப்பு தந்த ஆச்சரியத்துடன், “நான் நலமா இருக்கேன், நன்றி” என்று சொன்னேன். 108 ஆம்புலன்ஸ் அமைப்பிடம் இருந்து எனக்கு வந்த அழைப்பு அது.

நாட்டின் ஒரு பகுதியில் ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்படுகிறது. இன்னொரு பகுதியில் இப்படி விசாரிப்புகள். இதுதான் இந்தியா.

ஒரு பெரிய ஹால். நூற்றுக்கும் மேற்பட் டோர் தொலைபேசி அழைப்பு களுக்குப் பதில் தந்தபடி பரபரப்பாக இருக்கிறது அந்த இடம். இவர்கள் ஒவ்வொருவரும் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் அலுவலர்கள் (இ.ஆர்.ஓ.). தமிழகம் முழுவதும் இருந்து ஒரு நாளுக் குச் சராசரியாக இவர்களுக்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை 25,000.

பதற்றமும் நெகிழ்ச்சியும்

“ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகளை அட்டெண்ட் பண்ணுவோம். எதிர்முனையில் பேசும் நபர் பெரும்பாலும் அழுகையும் பதற்றமுமாகவே பேசுவார். அவர்களைப் புரிந்துகொண்டு, ஆசுவாசப்படுத்தித்தான் தகவல்களைப் பெற வேண்டும். பிறகு அருகில் இருக்கும் ஆம்புலன்ஸை அனுப்பி வைப்போம். இங்கு வேலைக்குச் சேர்ந்து ஐந்தரை ஆண்டுகள் ஆகின்றன. ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்திக்கொண்ட பலரும் தங்கள் உறவினரைக் காப்பாற்ற, உரிய நேரத்தில் வாகனம் அனுப்பியதற்காகத் திரும்ப அழைத்து நன்றி சொல்லும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணையில்லை” என்கிறார் ஒரு இ.ஆர்.ஓ.

பலன்பெறும் கர்ப்பிணிகள்

தமிழகத்தில் அரசு - தனியார் பங்களிப்பில் 108 சேவை ஆரம்பித்து இந்த 15-ம் தேதியுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை, சுகாதாரத் துறையின் ஆதரவுடன் இந்தச் சேவை இயங்கிவருகிறது. தமிழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற நிலை இருக்கிறது. இதுவரை 5 கோடியே 30 லட்சத்துக்கும் மேலான அழைப்புகள் இந்தச் சேவைக்கு வந்திருக்கின்றன.

108 சேவையால் அதிகம் பயனடைந்தவர்கள் யாரென்று பார்த்தால், கர்ப்பிணிகளே முதலிடம் பெறுகிறார்கள். 108 சேவைப் பயனாளிகளில் 26 % கர்ப்பிணி பெண்கள், 22 % சாலை விபத்தில் சிக்கியவர்கள், 6 % இதயப் பாதிப்பு ஏற்பட்டவர்கள். இதுதவிர நீரிழிவு நோய், விஷம் அருந்தியவர்கள், தற்கொலைக்கு முயற்சித்தவர்கள், பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களும் காக்கப்பட்டுள்ளன.

“குறுகலான பாதையில் ஆம்புலன்ஸ் செல்ல வசதி இல்லாததால், உடனடி முதலுதவி வழங்குவதற்காகப் பைக் ஆம்புலன்ஸ் சேவையைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. சென்னையில் சில இடங்களில் மிகக் குறுகலான தெருக்கள் இருக்கின்றன. இப்பகுதிகளுக்குப் பைக் ஆம்புலன்ஸ் சேவை பெரிதும் பயன்படுகிறது” என்கிறார் 108 விழிப்புணர்வு சேவைத் துறை மேலாளர் பிரபுதாஸ்.



பிரபுதாஸ்

அத்துடன் 48 மணி நேர ‘ஃபாலோ-அப்’ என்ற சேவையும் இருக்கிறது. நோயாளியின் தற்போதைய நிலையை அறிந்துகொள்வதே இந்தச் சேவையின் நோக்கம். இது மக்களுடன் அணுக்கமான உறவை ஏற்படுத்துகிறது.

104 சேவை எதற்காக?

உயிர் காக்கும் சேவை 108 என்றால், முழுக்க முழுக்க மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்காகவும், புகார்கள் தெரிவிப்பதற்காகவும் 104 என்ற இலவச எண் ஒதுக்கப்பட்டுள்ளது.

“மக்களின் நம்பிக்கையை உறுதிசெய்வதற்கான முயற்சி இது. இரவு நேரத்தில் திடீரென ஓர் உபாதை ஏற்படலாம். அது எத்தகைய உபாதை எனத் தெரிந்துகொள்வது அவசியம். உதாரணத்துக்கு, ஸ்ட்ரோக் ஏற்பட்ட 60 நிமிடங்களுக்குள் மருத்துவமனைக்கு நோயாளியைக் கொண்டு சென்றுவிட்டால் நிரந்தர உடல் ஊனத்திலிருந்து நோயாளியைக் காப்பாற்ற முடியும். 104 சேவையை ஒருவர் தொடர்புகொண்டு எங்கள் மையத்தில் இருக்கும் மருத்துவர் களிடம் தகவல்களை அளிக்கும்போது, நோயின் அறிகுறிகளைப் பற்றி புரிந்துகொண்டு அதற்கு அவசரசிகிச்சை தேவையென நினைத்தால் மருத்துவர்களே அழைப்பை 108-க்கு மாற்றிவிடுவார்கள்.

பரீட்சை நேரங்களில் நிறைய மாணவர்கள் 104 சேவையைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறுகிறார்கள். மனநல ஆலோசனையும் வழங்கப்படுகிறது. ஆனால் ஒருபோதும் மருந்துகளைச் சிபாரிசு செய்வதில்லை.

ஏதேனும் ஒரு பகுதியில் பலருக்கும் திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் இந்த எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவித்தால் போதும். அரசு நிர்வாகத்துடன் இணைந்து மருத்துவ முகாம் அமைக்கவும் ஏற்பாடு செய்வோம்.

அவசர நிலையில் 108-ஐ அழைக்க வேண்டும் என்பது மக்கள் மனதில் ஆணித்தரமாகப் பதிந்துவிட்டது. அதேபோல் மருத்துவ ஆலோசனைகளுக்கு 104-யைத் தொடர்புகொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இப்போதைக்கு நாள் ஒன்றுக்கு 3000 அழைப்புகள் வருகின்றன” என்கிறார் 108 சேவையின் செயல்பாடுகள் பிரிவு மாநிலத் தலைவர் ரவீந்திரா.



ரவீந்திரா

விபத்துப் பகுதிகளில் போலீஸ் எப்.ஐ.ஆர்., நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 1,200 இடங்கள் விபத்து அதிகமாக நடைபெறும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே பிளாக் ஸ்பாட் அல்லது ஹாட் ஸ்பாட்களைக் கண்டறிந்து அப்பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை விபத்துகளில் உயிர் சேதம் அதிகமாக இருக்கும் என்பதால், அப்பகுதிகளில் அதிகமானோர் இறப்பதைத் தவிர்க்க 108 துணையாக இருக்கிறது.

தயக்கம் இல்லாமல் உதவுங்கள்

108 ஆம்புலன்ஸ் சேவை ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் கூறும்போது, “உயிர் காக்க நல்ல சமாரியர்கள் தேவை. அப்படிப்பட்ட நல்ல சமாரியர்கள் இன்றும் இருக்கின்றனர். விபத்துகள் குறித்தும் கொலைவெறி தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் தகவல் அளிப்பவர்களின் விவரங்களை, நாங்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறோம். சட்டச் சிக்கல்கள், போலீஸ் வழக்குகள் என அச்சப்படாமல், தயங்காமல் உதவுங்கள். நல்ல சமாரியர்களை அங்கீகரித்து அவ்வப்போதுச் சான்றிதழ்களும் வழங்குகிறோம்” என்று முடிக்கிறார் பிரபுதாஸ்.

தேவை ஏர் ஆம்புலன்ஸ் சேவை

சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் 108 சேவை குறித்துத் தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்:

108 ஆம்புலன்ஸ் சேவை வரவேற்கத்தக்கது. இதன் மூலம் மக்கள் நிச்சயமாகப் பயன்பெறுகின்றனர். அதேவேளையில் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் 108 ஆம்புலன்ஸ் சேவை, பல நேரங்களில் கிடைப்பதில்லை. தனியார் நிறுவனங்களுடன் டை-அப் வைத்துக்கொண்டு நோயாளிகளைத் தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பதும் நடக்கிறது. அரசு - தனியார் பங்களிப்பில் 108 சேவை இயங்கினாலும், இந்தச் சேவைக்கான 95% நிதி ஆதாரம் அரசாலேயே வழங்கப்படுகிறது. நிலைமை இப்படி இருக்கும்போது இச்சேவையை அவுட் சோர்சிங் முறையில் செயல்படுத்தாமல், அரசே முழுமையாக ஏற்று நடத்துவது சிறப்பானதாக அமையும்.

அதேபோல் 108 மையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்குக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. பணிப் பாதுகாப்பும் இல்லை. உயிர் காக்கும் சேவையில் இருக்கும் இத்தொழிலாளர்களுக்கு அரசு உரிய ஊதியத்தையும் சலுகையையும் வழங்க வேண்டும். அதேபோல் ஆம்புலன்ஸில் இருக்கும் ஊழியர்கள் இன்னமும் சிறப்பான மருத்துவப் பயிற்சி பெற்றவர்களாக இருப்பது அவசியம். பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்களால், உயிர் சேதங்களைக் கூடுதலாகத் தவிர்க்க முடியும்.

இவற்றைத் தவிரத் தமிழகத்தில் ‘ஏர் ஆம்புலன்ஸ் சேவை‘ மிகவும் அவசியம். குறிப்பாகச் சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களிலும் இச்சேவை மிக மிக அவசியம். உதாரணத்துக்குச் சென்னை தாம்பரத்தில் ஒரு சாலை விபத்து நடந்தால், ஆம்புலன்ஸில் உரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன் உயிர் பிரிந்துவிடுகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் ‘ஏர் ஆம்புலன்ஸ் சேவை’ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதைப் பைலட் சேவையாகத் தமிழக அரசு அறிமுகப்படுத்த வேண்டும்” என்றார்.



ஜி.ஆர். ரவீந்திரநாத்

புகார்களுக்கு என்ன பதில்?

108-ல் அழைத்துச் செல்லப்படும் நோயாளிகளைத் தனியார் மருத்துவமனையில் சேர்க்க ஓட்டுநர்கள் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், துணைக்கு ஆள் இல்லை என்றால் ஆம்புலன்ஸில் நோயாளியை அழைத்துச் செல்லத் தயங்குவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

“நோய் பாதிப்பின் அளவை பொறுத்து அருகில் இருக்கும், உரிய சிகிச்சை வழங்கும் வசதிகள் கொண்ட மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும் என்பதே ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பொதுவான அறிவுரை. நோயாளியின் உறவினர்களின் விருப்பத்துக்கு ஏற்பவே ஊழியர்கள் செயல்படுகிறார்கள். சிலர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கச் சொல்கிறார்கள், பிறகு கட்டணம் கட்டும்போது 108 மீது புகார் தெரிவிப்பதும் நடக்கிறது.

அதேபோல், அட்டெண்டர் (ஆள் துணை) இல்லை என்றால் நோயாளியை ஆம்புலன்ஸில் ஏற்க மறுக்கக் கூடாது. அட்டெண்டர் இருந்தால் நோயாளிக்கு மனதளவில் துணையாக இருக்கும் என்பதாலேயே அட்டெண்டர் தேவை என்று வலியுறுத்துகிறோம். மற்றபடி இது கட்டாயமில்லை” என்கிறார் பிரபுதாஸ்.

தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படியோ அல்லது அட்டெண்டர் இல்லாததால் வாகனத்தில் ஏற்ற மறுத்தாலோ 104 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். இதுதவிர அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வரவில்லை, சிகிச்சைக்கு லஞ்சம் கேட்கப்படுகிறது, ஆம்புலன்ஸ் ஓட்டுநரோ அல்லது உள்ளே இருக்கும் மருத்துவ உதவியாளரோ பெண் நோயாளியிடம் கண்ணியமாக நடந்துகொள்ளாவிட்டாலும் மேற்கண்ட எண்ணில் புகார் செய்யலாம்.



கர்ப்பிணிகளுக்கு 102

108, 104 சேவைகளைத் தொடர்ந்து விரைவில் 102 சேவையும் நடைமுறைக்கு வரவுள்ளது. இது கர்ப்பிணி பெண்களுக்கான சேவை. ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பதிவுசெய்யும் கர்ப்பிணிப் பெண்களுக்குக் கர்ப்பக் காலம் முழுவதும் இதன் கீழ் ஆலோசனை வழங்கப்படும். தாய்மார்களுக்கான பிரசவம் முதல் பிரசவம் முடிந்து வீடு திரும்புவதுவரை இலவசச் சேவை இதன் கீழ் கிடைக்கும்.

இப்போதைக்கு அந்தந்த மண்டல, பிராந்திய அலுவலர் அறிவுறுத்தலின் பேரில் இந்தச் சேவை இயங்கிவருகிறது. விரைவில் 102 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு நேரடியாக இச்சேவையைப் பெற முடியும். ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்களுக்குத் தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகளும் இச்சேவையின் கீழ் வழங்கப்படும்.

இந்தியச் செஞ்சிலுவை சங்கத்துடன் தமிழ்நாடு சுகாதாரத் துறை இயக்குநரகம் ஏற்படுத்தியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 155377 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு இலவச அமரர் ஊர்தி சேவையைப் பெறலாம். அரசு மருத்துவமனைகளில் இருந்து சடலத்தை எடுத்துச் செல்லவும், பிணவறையில் இருந்து சடலத்தை எடுத்துச் செல்லவும் இச்சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024