Tuesday, September 27, 2016

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எப்போது தெரியுமா?


டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எப்போது வெளியாகும் என்ற தகவல் கசிந்துள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சுமார் 18 வருடங்கள் நடைபெற்று வந்த நிலையில், 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாக அவர்கள் பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து கர்நாடக ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்த ஜெயலலிதாவுக்கு, வழக்கில் இருந்து விடுதலை கிடைத்தது. விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக தாக்கல் செய்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு எப்போது வெளியாகும் என்ற தமிழக அரசியலில் பரபரப்பு நிலவிவரும் நிலையில், அதுகுறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தனது சுயசரிதையை ஆல் ஃபிரம் மெமரி என்ற தலைப்பில் எழுதியிருந்தார். அந்தப் புத்தகத்தில் ‘சொத்துக் குவிப்பு வழக்கில் எனக்குப் பல்வேறு தரப்பில் இருந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன' என சொல்லியிருந்தார்.

இதை சுட்டிக்காட்டி தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ரத்தினம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் ‘சொத்துக் குவிப்பு வழக்கில் நெருக்கடி இருந்ததாகக் ஆச்சார்யா சொல்லியிருப்பதால் அவரிடம் விசாரணைக்கு நடத்த வேண்டும்' என கூறியுள்ளார்.

இந்த வழக்கு கடந்த 8ம் தேதி விசாரணை வந்தபோது நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. ‘வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது' என நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த நீதிபதிகள்தான் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்தவர்கள்.

‘இத்தனை நாட்களுக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் காரணம் என்ன என ரத்தினத்தின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள் ‘ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த 4 வாரத்தில் தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப் படும்' என தெரிவித்தனர். செப்டம்பர் 8ம் தேதி இவ்வாறு நீதிபதிகள் குறிப்பிட்டனர். எனவே அக்டோபர் 7ம் தேதியோ அல்லது அதற்கு முன்போ சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

அப்போது தசரா திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும். எனவே, விஜயதசமி, ஜெயலலிதாவுக்கு வெற்றியை தருமா அல்லது கர்நாடக அரசு தரப்புக்கு வெற்றியை தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த வழக்கின் தீர்ப்பு 17 மற்றும் 19ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்பதால் அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...