Sunday, September 25, 2016

காதல் வழிச் சாலை 02: பார்த்ததுமே பற்றிக்கொள்ளுமா?


தன்னுடன் படிக்கும் மாணவன் மீது நதியாவுக்கு ஏற்பட்டிருப்பது என்ன? நதியாவுக்கு மட்டுமல்ல, நதியாவின் வயதில் உள்ள இளைய சமூகத்தினருக்கு எதிர்பாலினத்தவர் மீது ஏற்படும் உணர்வுக்கு என்ன பெயர்? ஈர்ப்பு. ஆணிடம் பெண்ணுக்கும், பெண்ணிடம் ஆணுக்கும் பார்த்ததுமே ஏற்படுகிற அழகான உணர்வே இந்த ஈர்ப்பு. ஆங்கிலத்தில் இதை ‘இன்ஃபாச்சுவேஷன்’ என்று சொல்வோம்.

தயக்கமும் வெட்கமும் கலந்த ஒரு குறும்புப் புன்னகை முகத்தில் குடிகொள்ளும். அவர்களை நினைக்கும்போதே உடல் முழுக்கச் சிலிர்ப்பு பரவும். பசி மறந்துபோகும், தூக்கம் தொலைந்துபோகும். அவர்கள் வந்துபோகிற ஒவ்வொரு காலைப் பொழுதும் மிகவும் ரம்மியமாகக் காட்சிதரும். அவர்களைத் தவிர இந்த உலகில் வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அதனாலேயே வேறு எதையும் பார்க்கத் தோன்றாது. அவர்களது நடை, உடை, சின்னத் தவறு, செல்லக் கோபம் என்று எல்லாமே பிடித்துப்போகும்.

கண்டதுமே காதலா?

தன்னையே மறக்கிற அளவுக்கு ஒருவரைப் பிடிக்கிறதே, இது காதலா என்றால் நிச்சயம் இல்லை. கண்டதுமே காதல் சத்தியமாக வராது. திரைப்படங்களில் வரலாம், தொலைக்காட்சித் தொடர்களில் வரலாம். ஆனால் வாழ்க்கை என்னும் முழுநீளப் படத்தில் கண்டதுமே காதல் பெரும்பாலும் சாத்தியமில்லை. இங்கே ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’ இல்லை. கண்டதுமே ஈர்ப்பு மட்டும்தான் ஏற்படும்.

காதலுக்கும் ஈர்ப்புக்கும் நிறைய வேறுபாடு உண்டு. காதல் ஆழமானது. ஈர்ப்பு மேலோட்டமானது. காதல் புற அழகைத் தாண்டியும் ஆழமான நேசம் கொண்டது. பிடித்தவர்கள் மீது நிபந்தனையற்ற அன்பு வைப்பதும், அவர்களின் சுக துக்கங்களில் சரிபாதி பங்கெடுத்துக் கொள்வதும், அவர்களுக்காக விட்டுக்கொடுக்கத் தயங்காமல் இருப்பதுமே காதலாக அறியப்படுகிறது. ஆனால் ஈர்ப்பு புற அழகை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அகம் எப்படி இருக்கும் என்ற தேடலோ அக்கறையோ இல்லாதது.

ஈர்ப்பு என்பது கண நேரப் பரவசமும் மகிழ்ச்சியும் தருவது. அதைக் காதலுடன் போட்டுக் குழப்பிக்கொள்கிறவர்கள் இங்கே அதிகம். அப்படியொரு குழப்பம்தான் நதியாவுக்கும். அதனால்தான் சக மாணவர்மீது அவருக்கு ஏற்பட்ட ஈர்ப்பை என்னவென்றே இனம் காணமுடியாமல் குழம்பினார். பருவ வயதின் இனிய இம்சைகளில் இந்த ஈர்ப்பு முதன்மையானது.

தீபாவளியின்போது நாம் கொளுத்தும் புஸ்வாணம் போன்றது ஈர்ப்பு. நெருப்புப் பற்றியதுமே சடசடவென தீப்பூக்கள் உயர்ந்து சிதறும். அடுத்த நொடியே அடங்கிப் போகும். அப்படித்தான் ஈர்ப்பும். அந்த வயதில் பட்டென்று பற்றிக்கொண்டு உடல் முழுக்கப் பரவசத்தைத் தரும். ஆனால் அதற்கு நீடித்த ஆயுள் கிடையாது. இதைப் புரிந்துகொள்ளாமல் பலரும் அது மிகப் பெரிய உன்னத உணர்வு என்று நினைத்துப் புலம்புவார்கள்.

பொய்களும் அழகே

இன்னொரு விஷயம் தெரியுமா? காதல் உண்மையானது. அதற்குப் போலித்தனம் எதுவும் தேவையில்லை. ஆனால் ஈர்ப்புக்குச் சின்னச் சின்னப் பொய்களும் நடிப்பும் தேவைப்படும். எதிர்பாலினத்தவரைக் கவர வேண்டும், அவர்கள் முன்னால் ஹீரோ அல்லது ஹீரோயின் போலத் தெரிய வேண்டும் என்பதற்காக இல்லாத வித்தையை எல்லாம் செய்யச் சொல்லும். நம்முடைய இயல்பைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டு நடிக்கச் சொல்லும். நம் சுயத்தை இழந்து அல்லது மறைத்து நடிக்கிறோம் என்ற குற்றவுணர்வு அங்கே தோன்றாது. காரணம் ஈர்ப்பு என்பது மேலோட்டமானது. அந்த நேரத்து மகிழ்ச்சியை மட்டுமே வேண்டுவது.

ஈர்ப்பில் எல்லாமே உடனுக்குடன் தேவைப்படும். ஒரு நாள் பார்க்கவில்லை என்றால், பேசிக்கொள்ளவில்லை என்றால் அந்த நாளே நரகமாகத் தெரியும். பெரிதாக ஏதோவொன்றை இழந்தது போல சோகம் சூழும். பிரியும்போது பதற்றம் ஏற்படும். மீண்டும் எப்போது சந்திப்போம் என்ற பரிதவிப்பு தொடரும். இதெல்லாம் ஈர்ப்பின் விளைவுகள். ஆனால் காதல் அப்படியல்ல. விலகிச் சென்றாலும் நெருங்கி வருவதே காதல்.

எதிர்பாலினக் கவர்ச்சிதான் காதலுக்கும் ஆரம்பப் புள்ளி என்றாலும் அது பயணிக்கும் பாதை வேறு.

ஈர்ப்பில் எதற்கெடுத்தாலும் சந்தேகமும் பயமும் இருக்கும். அவன்/அவள் நம்முடையவராக நீடிப்பாரோ என்ற கவலை இருந்துகொண்டே இருக்கும். ஆனால் இதையெல்லாம் கடந்த நிலையே காதல்.

மலர்வதும் உதிர்வதும்

ஈர்ப்பு மேலோட்டமானது என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன். வாசுவும் கீதாவும் கல்லூரி நண்பர்கள். இருவரும் உயிருக்கு உயிராகக் காதலித்தார்கள் அல்லது அப்படி நம்பினார்கள். கீதா அணிந்துவரும் ஆடைகள் வாசுவுக்கு மிகப் பிடிக்கும். வாசுவின் தெளிவான பேச்சுக்கு கீதா ரசிகை.

கீதா அணிந்துவரும் ஆடைகளில் மயங்கிய வாசுவுக்கு, கீதா ஒரு முன்கோபக்காரி என்பதும் அலட்சிய மனோபாவம் கொண்டவள் என்பதும் தெரியாது. வாசுவின் பேச்சில் மயங்கிய கீதா, அவன் தன் நண்பர்களுடன் இருக்கும்போது உதிர்க்கிற மட்டரகமான வார்த்தைகளை அறிந்துகொள்ளவில்லை. இருவருமே இருவரின் பாசிட்டிவ் பக்கங்களை மட்டுமே அறிந்துவைத்திருந்தார்கள். காரணம் ஈர்ப்புக்கு அது மட்டும் போதும். நெகட்டிவ் சங்கதிகளைத் தெரிந்துகொள்ள விரும்பாதது பெரிய குற்றமல்ல. அதைத் தெரிந்துகொள்ளாமலேயே காலத்தை ஓட்டிவிடலாம். காரணம் ஈர்ப்புக்கு ஆயுள் குறைவு. இருவரின் நெகட்டிவ் குணங்கள் தெரிந்த பிறகும் இருவருக்குள்ளும் புரிதல் தொடர்ந்தால்தான் அந்த ஈர்ப்பு காதலின் சாலையில் பயணிக்கும்.

அதனால் காதலையும் ஈர்ப்பையும் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். ஈர்ப்பு வருவது ஒரு பூ மலர்வதுபோல மிக இயல்பானது. சில நாட்களில் அந்தப் பூ வாடிப்போய், புல்வெளியில் அழகாக உதிர்ந்தும் போகலாம். அதுவும் இயல்புதான். அதைப் புரிந்துகொண்டால் ஈர்ப்பு நல்லது!

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024