நில், கவனி, செல்!
By என்.எஸ். சுகுமார்
ரயில் பாதையில் நடந்து செல்வோர், ரயில் பாதையைக் கடக்க முயல்வோர், ஆளில்லா கடவுப் பாதையைக் கடப்போர் உள்ளிட்ட தரப்பினர் ரயில் மோதி விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே ரயில் பாதையைக் கடப்பதாலும் பலர் உயிரிழந்துள்ளனர்.
ரயில் நிலையங்களிலேயே ஒரு நடைமேடையிலிருந்து மற்றொரு நடைமேடைக்கு நடைமேம்பாலம் மூலமாக செல்லாமல், தண்டவாளத்தின் வழியாகச் செல்வோர் அதிகம்.
அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதால் சிலர் தண்டவாளத்தைக் கடக்க அதற்குரிய மேம்பாலத்தையோ, சுரங்கப்பாதையையோ பயன்படுத்தாமல் நேரடியாகவே தண்டவாளங்களைக் கடப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதுபோன்ற கவனக் குறைவால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள், அருகில் உள்ள தங்கள் பகுதியைச் சென்றடைய தண்டவாளப் பாதைகளையே பயன்படுத்துகின்றனர்.
இதற்குக் காரணம் சாலை வழியாகச் சுற்றிச் செல்வதைக் காட்டிலும், விரைந்து சென்று நடை பயணத்தைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம்தான்.
மேலும், ரயில் வரும்போது ஒலி எழுப்பப்படும். அதனை உணர்ந்து எச்சரிக்கையாகி விடலாம் என்ற நம்பிக்கையிலும் அவர்கள் இவ்வாறு செல்கின்றனர். ஆனால் அதுவே அவர்களுக்கு ஆபத்தை விளைவித்து விடுகிறது.
ரயில் வரும் நேரத்தில் பேருந்து பாதையின் கேட் மூடப்படுவது வழக்கம். ஆனால் கேட் மூடப்பட்ட பின்னரும், இரு சக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கேட்டில் குனிந்து தண்டவாளங்களைக் கடந்து செல்கின்றனர். இது ஆபத்தான முறை என்பதை தெரிந்தே பலர் இவ்வாறு கடந்து செல்கின்றனர்.
பலர் செல்லிடப்பேசியில் பேசியபடியே கடந்து செல்கின்றனர். அப்போது ரயில் வருவதை கவனிக்காமல் விபத்தில் சிக்குகின்றனர். இதன் காரணமாக கேட்களை திறந்து மூடும் பணியில் ஈடுபடும் கேட் கீப்பர்கள் நாள்தோறும் பெரும் சவால்களை சந்திக்கும் நிலை உள்ளது.
தண்டவாளங்கள் ரயில்களுக்கான பாதை, பொதுமக்களுக்கான பாதையல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். இதுகுறித்து ரயில் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே துறை விழிப்புணர்வு அறிவிப்புப் பலகைகள், விழிப்புணர்வு பதாகைகள் உள்ளிட்டவற்றை வைப்பது, விளம்பரங்கள் மூலம் அறிவுறுத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.
தன்னார்வ நிறுவனங்களும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்வதைப்போல் ரயில் பாதைகளில் செல்ல வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
அதேசமயம் ரயில் வரும் நேரங்களில் கடவுப் பாதையைக் கடக்க வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அதிக நேரத்திற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு காலவிரயமும் ஏற்படுகிறது.
சில சமயங்களில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில்வே கேட் பகுதியிலேயே ரயில்கள் நிறுத்தப்பட்டு விடுகிறது.
இதனால் கேட் திறக்கப்படும் நிலை இருந்தாலும் வாகனங்கள் கடந்து செல்ல
முடியாமல் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதற்கு ஒரே தீர்வு, போக்குவரத்து அதிகளவில் உள்ள ரயில் கடவுப் பாதைகளில் மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகளை அமைப்பது தான்.
அதுபோல் ஆளில்லா கடவுப் பாதைகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு ரயில் வருவதை அறியச் செய்யும் வகையில், பச்சை, சிவப்பு விளக்குகள் கொண்ட சிக்னல்களை அமைக்கவும் முயற்சிக்கலாம்.
பல ரயில் நிலையங்களில் நடைமேம்பாலங்கள் இல்லாததால் பயணிகள் ஆபத்தான முறையில் இருப்புப் பாதையைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தண்டவாளங்களில் நடந்து செல்வதை குற்றமாகக் கூறி அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், உரிய முறையில் நடைமேம்பாலங்களை அமைக்க வேண்டியதும் ரயில்வே நிர்வாகத்தின் கடமை.
பல சிறிய ரயில் நிலையங்கள் நடைமேடை இல்லாமலே உள்ளன. இதனால் ரயிலில் ஏறுவோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும் நடைமேடை இல்லாத ரயில் நிலையங்களில் ரயிலில் ஏறும் போது தவறி கீழே விழும் நிலையும்உள்ளது.
ரயில் நிலையங்களில் சில நேரங்களில் ரயில் வருவது குறித்தும், அது வரும் நடைமேடை குறித்தும் ரயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே அறிவிப்பு செய்யப்படுகிறது. இதனால் ஒரு நடைமேடையிலிருந்து பிற நடைமேடைக்கு பயணிகள் முண்டியடித்துச் செல்கின்றனர்.
அப்போது பலர் ரயில் தண்டவாளங்களில் இறங்கியும் செல்கின்றனர். இதனைத் தவிர்க்க ரயில் வருவது குறித்து முன்கூட்டியே பயணிகள் அறியும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஏற்ற முறைகளை ரயில்வே நிதிநிலை அறிக்கையில் வெளியிடவும், செயல்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம்.
No comments:
Post a Comment