Friday, September 16, 2016

போதும் "பாரா'முகம்!


DINAMANI

ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் தமிழகத்தைச் சேர்ந்த தங்கவேலுமாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று பதக்கப் பட்டியலைத் தொடங்கி வைக்க, தொடர்ந்து தற்போது ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா தங்கம் வென்றுள்ளார்.

இவர்களுடன் இந்திய வீரர்கள் தீபா மாலிக் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், வருண் சிங் பதி உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளனர்.
பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதமர், அமைச்சர்கள் என்று பலரும் வாழ்த்துகள் தெரிவித்தாலும்கூட, ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற சிந்துவுக்கும், வெண்கலம் வென்ற சாக்ஷிமாலிக்குக்கும் கிடைத்த பரிசு மழை போன்று பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்குக் குவியவில்லை. வாழ்த்துகளும்கூடக் குறைவுதான். நல்லவேளையாக, தங்கவேலு மாரியப்பன் தங்கம் வென்றவுடனேயே தமிழக முதல்வர் ரூ.2 கோடியைபரிசாக அறிவித்து இந்தக் குறையை ஈடு செய்தார்.
பதக்கம் வென்ற ஒலிம்பிக் வீரர்களுக்குக் கிடைக்கும் பரிசும் பாராட்டும் பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு இந்தியாவில் கிடைக்கவில்லை என்றால் அதற்குக் காரணம், ஒலிம்பிக் போட்டியுடன் நாம்விளையாட்டு மனநிலையிலிருந்து விலகி விடுவதும், பாரா ஒலிம்பிக் என்பது ஏதோ சிலரின் மனத்திருப்திக்காக நடத்தப்படும் விளையாட்டு என்று கருதுவதும்தான். இந்த எண்ணம் மாற வேண்டும்.

தாங்கள் உடல் ஊனமுற்றவர்கள் அல்ல, மாற்றுத்திறனாளிகள் என்பதை இதுபோன்று அவர்கள் பலமுறை நிரூபித்த பிறகும்கூட நமது மனநிலையில் மாற்றம் ஏற்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
தங்கவேலு மாரியப்பன் தனது ஐந்தாவது வயதில் பேருந்து விபத்தில் வலது முழங்காலை இழந்தவர். தீபா மாலிக், தனது தண்டுவடத்தில் வந்த கட்டியால் இடுப்புக்கு கீழ் பகுதிசெயல்பட முடியாதநிலைக்குத் தள்ளப்பட்டவர். தேவேந்திர ஜஜாரியா ஒரு விபத்தில் சிறுவயதிலேயே கைகளை அகற்ற வேண்டிய நிலைக்கு ஆளானவர். வருண் சிங் பதி போலியோ நோயால் ஒரு காலின் செயல்
குன்றிப் போனவர். ஆனால் இவர்கள் அனைவருமே மனம் தள
ராமல் தங்களை ஏதாவது ஒருவகையில் சாதனையாளராக நிலை
நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற வெறியுடன் போராடியவர்கள்.
இவர்களுக்குக் கிடைத்துள்ள வெற்றி வெறும் விளையாட்டுக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல. தளராத மன உறுதிக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றி. இவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்குமுன்மாதிரிகள். ஒலிம்பிக் வீரர்களுக்கு இணையாக இவர்களுக்கும் பாராட்டும் பரிசு மழையும் குவிய வேண்டும்.
இரண்டாம் உலகப்போரில் ஊனமடைந்தவர்களுக்கு வாழ்க்கையில் புது நம்பிக்கையை ஏற்படுத்த, 1948-இல் மிகச் சிறு அளவில் தொடங்கப்பட்டதுதான் பாரா ஒலிம்பிக். லுட்விக் கட்மேன் என்கிறநரம்பியல் மருத்துவர், தனது ஸ்டோக் மேண்டாவில்லே மருத்துவ
மனையில், இரண்டாம் உலகப்போரில் முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்ட 16 நோயாளிகளுக்காக, விளையாட்டுப் போட்டி ஒன்றை நடத்தினார். ஒலிம்பிக் பந்தயம் நடைபெறும் அதே நேரத்தில்இந்தப் பந்தயமும் நடத்தப்பட்டது. அப்படித் தொடங்கியதுதான் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் பந்தயம்.
அன்றைய தேதியில் பாரா ஒலிம்பிக் என்கிற பெயர் சூட்டப்படவில்லை. 1964-இல்தான் இந்தப் பெயர் அதிகாரபூர்வமாக பயன்
படுத்தப்பட்டது. 1988 "சியோல்' ஒலிம்பிக் பந்தயத்தின்போது, அதேபோல பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடத்தும் வழக்கம் தொடங்கியது. ஒலிம்பிக் பந்தயம் போலவே இதிலும் தொடக்க, நிறைவுவிழாக்கள் நடத்தும் வழக்கமும் ஆரம்பித்தது.
1989-இல் சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. 1992-இல் நடந்த "பார்சிலோனா' ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து இந்த கமிட்டி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் இணைந்து செயல்படத் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடே பாரா ஒலிம்பிக் போட்டியையும் நடத்த வேண்டும் என்ற புதிய

நடைமுறை 2008-க்கு பிறகே தீர்மானிக்கப்பட்டு, ஒலிம்பிக் போட்டி நடைபெறும் அதே வளாகத்தில், ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
ரியோ டி ஜெனீரோவில், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற அப்துல் லத்தீப் பாகா, ஒலிம்பிக்கில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற மாத்யூ சென்ட்ரோவிட்ஸ் எடுத்துக்கொண்டநேரத்தைக் காட்டிலும் 1.7 விநாடி குறைவாக, அதாவது 3 நிமிடம் 48.29 விநாடியில் ஓடி சாதனை நிகழ்த்தியிருப்பதைப் பார்க்கும்போது, இவர்களது சாதனையின் வீரியம் அளவிட முடியாதது என்பதை உணரமுடிகிறது.
ஒலிம்பிக் போட்டிக்கு 118 வீரர்களை அனுப்பி வைத்த நாம், பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வெறும் 19 வீரர்களை மட்டுமே அனுப்பினோம். அவர்கள் இரண்டு தங்கப் பதக்கங்களையும்,வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்திருக்கிறார்கள்.
பாரா ஒலிம்பிக் போட்டியிலும் அதிக எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகளை அனுப்பும் நிலை அடுத்த ஒலிம்பிக் போட்டியின்போது உருவாக வேண்டும். ஒவ்வொரு மாநிலமும்மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகளில் தனிப்பயிற்சி அளித்து, அகில இந்திய அளவில் போட்டியிடும் திறன் இருப்பின், அவர்களை ஊக்கப்படுத்தி, அந்த விளையாட்டில் அவர்கள் தனிக்கவனம்

செலுத்த அவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவினால், இந்தியாவுக்கு பாரா ஒலிம்பிக் போட்டிகளில் மேலும் அதிகமான பதக்கங்கள் கிடைக்கக் கூடும்.

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...