மாடிப்படியும் பாடம் சொல்லும்
குள.சண்முகசுந்தரம்எப்படா மணியடிக்கும் புத்தகப் பையைத் தூக்கிக்கிட்டு வீட்டுக்கு ஓடலாம் என்றுதான் மாணவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஆசிரியர் பா.சத்தியவேலிடம் படிக்கும் மாணவர்களிடம், “நேரம் ஆகிருச்சு கிளம்புங்கப்பா” என்று சொல்லித்தான் வீட்டுக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது.
மைதானத்தில் மாவு கணக்கு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள பொன்பத்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் சத்தியவேல். இவர் தனது மாணவர்களுக்கு மூன்று விதமாகப் பாடம் கற்பிக்கிறார்.
முதலாவது - விளையாட்டு முறை கணிதம். பெரும்பாலும் இந்த வகுப்பு மைதானத்தில்தான் நடைபெறும். உதாரணமாக கிராஃப் போட வேண்டுமென்றால் கோல மாவைக் கொண்டு மாணவர்களே ‘ஒய்’ அச்சு, ‘எக்ஸ்’ அச்சு போடுவார்கள். அதன் பிறகு ஒவ்வொரு புள்ளிகளும் குறிக்கப்பட்டு மாணவர்கள் புள்ளிக்கு ஒருவராக நிற்பார்கள். அவர்கள் கையில் கயிறு, நூலைக் கொடுத்து பிடிக்கச் சொல்லி அதன்மூலம் அட்டகாசமாக கிராஃப்பை வடிவமைத்துக் காட்டுவார் சத்தியவேல்.
ஆடைகளை வைத்து ஆஃபர் கணக்கு
இதேபோல், எண் கோடு வரைதல் உள்ளிட்ட பாடங்களையும் எளிமையாக படிக்க வைக்கிறார். அடுத்தது - செயல்வழிக் கல்வி. மாணவர்கள் வீட்டிலிருந்து ஏதாவது புத்தாடைகளை எடுத்துவந்து வரிசையாக வைப்பார்கள். அதன் ஒவ்வொன்றின் விலையும் தனித்தனியாக எழுதி வைக்கப்படும். அதற்குக் கீழே 10 சதவீதம் 5 சதவீதம் தள்ளுபடி என எழுதப்பட்டிருக்கும். 5 சதவீதம் தள்ளுபடி என்றால் அது எவ்வளவு ரூபாய்? அதுபோக அந்தத் துணியின் விலை எவ்வளவு? இதுபோன்ற விஷயங்களை மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
வங்கிகளை வைத்து வட்டிக் கணக்கு
சிலநேரம், மாணவர்கள் வீட்டிலிருந்து எடுத்து வரும் காய் - கனிகளுக்கு ஒரு விலை நிர்ணயம் செய்து, ஒருவர் இன்னொருவருக்கு அதை விற்பனை செய்ய வைத்து கொள்முதல் விலை, விற்பனை விலை, லாபம், நட்டம் இவை அனைத்தையும் மிகச் சரியாக கணக்கிட வைக்கிறார். இதேபோல் மாணவர்களைப் பிரபல வங்கிகளின் மேலாளர்கள்போல் உட்கார வைத்து அவர்களிடம் வீட்டுக் கடன் உள்ளிட்டவற்றை மற்ற மாணவர்களைக் கேட்க வைக்கிறார். மேலாளர்கள் தங்கள் வங்கியின் வீட்டுக் கடனுக்கான வட்டிவிகிதம் கால நிர்ணயம் இதையெல்லாம் சொல்வார்கள். அதை வைத்து வட்டி கணக்கிட்டு எந்த வங்கியின் வட்டி விகிதம் சாதகமானது என்பதை மற்ற மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
மூன்றாவது - கணினி வழிக் கணிதம். கணினியில் கேம்ஸ் விளையாட்டை விரும்பாத பிள்ளைகள் அரிது. அந்த கேம்ஸ்களோடு எஜுகேஷன் சாஃப்ட்வேர்களைச் சேர்த்து கணக்கு, ஆங்கிலம், சமூக அறிவியல் பாடங்களை மாணவர்களை தன் விருப்பத்தில் படிக்க வைக்கிறார்.
மாடிப்படியும் பாடம் சொல்லும்
“எனது வகுப்பில் மாணவர்கள் படிப்பு பயமில்லாமல் சுதந்திரமாக இருக்கிறார்கள். அதனால்தான் வகுப்பு முடிந்தாலும் அவர்களுக்கு வீட்டுக்குப் போக மனம் வருவதில்லை. வாய்ப்பாடு, ஆங்கிலப் பாடல்கள், வெண்பாக்கள், உள்ளிட்டவைகளை மாணவர்களைக் கொண்டே பாடவைத்து வீடியோக்களாக்கி வைத்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட பாடம் நடத்தும்போதும் உணவு இடைவேளையின்போதும் அந்த வீடியோ காட்சிகள் பவர் பாயிண்ட் மூலம் ஒளிபரப்பப்படும்.
6,7,8 வகுப்புகள் மாடியில் உள்ளன. இவர்களுக்காக மாடி படிகளில் தினமும் சில சொற்களோ எண்களோ எழுதி வைக்கப்படும் 6,7,8 வகுப்பு மாணவர்கள் தினமும் கட்டாயம் 8 முறை மாடிப்படியில் ஏறி இறங்க வேண்டும். அப்படி இறங்கும்போது படிகளில் இருக்கும் வாசகங்களை படித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இறுதி வகுப்பில் அந்தச் சொற்களை சம்பந்தப்படுத்தி நடத்தப்படும் வினாடி வினாவுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதால் மாணவர்கள் மாடிப்படி பாடத்தைக் கட்டாயம் உள்வாங்கி வைத்திருப்பார்கள். இப்படித்தான் விளையாட்டுப் போக்காய் போய்க்கொண்டிருக்கிறது எங்களது பயிற்று முறை” என்று தன்னுடைய சுவாரசியமான கற்பிக்கும் முறையை மிக எளிமையாகச் சொல்கிறார் சத்தியவேல்.
தொடர்புக்கு: 86086 75422
No comments:
Post a Comment