Wednesday, September 28, 2016

சட்டமே துணை: மனதைக் கொல்வதும் குற்றமே

பி.எஸ். அஜிதா

எல்லோருக்கும் பொறுமை அவசியம் தான். ஆனால், பல விதமான குடும்ப வன்முறைகளை ஏற்றுக் கொண்டும் பொறுத்துக்கொண்டும் போவது யாருக்குமே நல்லதல்ல என்பதைப் பெண்கள் உணர வேண்டும்.

நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த சித்ரா, சத்தம் கேட்டுக் கண் விழித்தார். பக்கத்தில் அருள் இல்லை. வெளியே வந்து பார்த்தால் அங்கேயும் இல்லை. இரவு வெகு நேரம் லேப்டாப்பில் வேலை செய்துவிட்டுப் படுத்தவர்தான். இப்போது லேப்டாப் மேஜையில் இல்லை. யோசித்தபடியே நடந்தவரின் காலில் ஏதோ தட்டுப்பட, இதயம் ஒரு கணம் நின்றேவிட்டது.

ஆணி போன்ற கூரான எதையோ வைத்து லேப்டாப் சிதைக்கப்பட்டிருந்தது. கீழ்ப்பகுதியும் மேல் மூடியும் தனித் தனியாக வந்துவிட்டன. அழுகை பீறிட்டு வந்தது.

மகன் விழித்துவிடப் போகிறான் என்று வாயைப் பொத்திக்கொண்டு அழுதார். அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. அலுவலகத்தில் கேட்டால் என்ன பதில் சொல்வது? அதிலிருக்கும் தகவல்களை எடுக்க முடியாதபடி லேப்டாப் முற்றிலும் சிதைந்துவிட்டிருந்தது. ஓட்டை விழுந்து கிடக்கும் லேப்டாப்பை, கைதவறி உடைந்துவிட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்?

சித்ராவுக்கு 12 வருட வாழ்க்கை மனக் கண் முன் ஓடியது. வலிகளை மறந்து மரியாதையாக, நிம்மதியாக, மதிப்புடன் உலாவுகிற ஒரே இடம் அலுவலகம்தான். இதைப் பற்றிச் சொன்னால் என் குடும்ப வாழ்க்கையின் அவல நிலை அலுவலகத்தில் தெரிந்துவிடுமே என்று அஞ்சினார். மூன்று மாதக் கால புராஜெக்டின் மொத்த வேலையும் அந்த லேப்டாப்பில் சிதைந்து கிடந்தது.

காதல் ஒருவனைக் கைப்பிடித்தே

அருளுக்கும் சித்ராவுக்கும் நடந்தது காதல் திருமணம். படிக்கும் காலத்தில் அறிமுகமான நட்பு, வேலைக்குச் சேர்ந்தபோதும் தொடர்ந்தது. மூன்று வருடங்களில் காதலாக மாறியது. அருள் காதலை வெளிப்படுத்தியபோது, வேலையிலும் பொருளாதாரத்திலும் சித்ராவைவிட ஒரு படி கீழே இருந்ததை இருவருமே பொருட்படுத்தவில்லை. எளிமையான மனிதனாக, அனைத்தையும் மென்மையாகச் செய்யும் அவன் சுபாவம் பிடித்திருந்தது.

படிப்பு ஒன்றாக இருந்தாலும், தரமான பொறியியல் கல்லூரிக்கும் கடைநிலை பொறியியல் கல்லூரிக்கும் இருந்த வேறுபாடு, இருவருக்கும் புரிதலையும், அறிவையும், பணியையும் வெவ்வேறு தரத்தில் கொடுத்திருந்தது. பணம் ஒரு பொருட்டே இல்லை சித்ராவுக்கு. அவர் விரும்பியது அமைதியான, எளிமையான வாழ்க்கையைத்தான். பெரியவர்கள் சம்மதத்துடன் திருமணமும் நடந்தது. அண்ணன் மட்டும், “அவனுக்கு உன்னுடைய தகுதியோ, அறிவோ கிடையாது. பின்னால் பிரச்சினை வரும்” என்றான்.

சித்ரா அதைப் பொருட்படுத்தவில்லை. அஸ்வின் பிறந்த பின், கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் படும் வேதனைகள் அதிகம். வார்த்தைக்கு வார்த்தை ஒழுக்கம் கெட்டவள் என்ற வசவு. வாரம் ஒருநாள் குடிக்கத் தொடங்கி, வாரம் முழுவதும் என்றானது. அதனால் வேலையும் பறிபோனது.

“ஏன், சம்பாதிக்கத் துப்பில்லாதவன் தின்கிறானே என்று நினைக்கிறீயா? இவனுக்குப் பெண்டாட்டியா இருக்கிறதைவிட நல்லா சம்பாதிக்கிற வேறொருத்தன் பரவாயில்லைன்னு தோணுதா? ஆபீஸில் நடக்கிறது யாருக்கும் தெரியாதா என்ன?” என்றெல்லாம் அருளிடமிருந்து அமில வார்த்தைகள் வந்துவிழும்.

கொட்டும் விஷ வார்த்தைகள்

காதலித்தபோது இருந்த மெல்லிய உணர்வுகள், பாசத்தோடு கழிந்த நாட்கள், குழந்தையைக் கொஞ்சி, அன்பைப் பகிர்ந்துகொண்ட நாட்கள் என்று பலவற்றை நினைத்து ஏங்கினார் சித்ரா. ஒருநாள், “கவுன்சலிங் போலாமா?” என்று அருளிடம் கேட்டபோது, “என்னைப் பைத்தியம் என்று முடிவே பண்ணிட்டியா சபாஷ்! என்னை டாக்டரிடம் கூட்டிப்போய், சர்டிபிகேட் வாங்கி டைவர்ஸ் பண்ணலாம்னு திட்டம் போட்டிருக்கிறாயா?” என்று சண்டை போட்டார்.

வேறு வழியில்லாமல், அண்ணனிடம் சொன்னார் சித்ரா. வருத்தப்பட்டாலும், “அவனுக்கு நல்ல வேலை கிடைத்தால் பொறுப்பு வந்துவிடும்” என்று சொல்லி நிறுத்திக்கொண்டார் அண்ணன்.

அப்பாவை அழைத்துவந்தால் அருளுக்கு நிதானம் வரும் என்று நினைத்தார் சித்ரா. அப்பா வீட்டில் இருந்த ஆறு மாதங்களும் சண்டை தொடர்ந்தது. அப்பா ஒருநாள் அருளிடம், “ஏம்பா, இப்படிப் பேசுற?” என்று கேட்டதற்காக, அவரையும் அநாகரிகமாகத் திட்டிவிட்டார்.

சித்ராவுக்கு நடப்பது ஓர் உளவியல் வன்முறை. நடக்காத ஒன்றை, நியாயமற்ற ஒன்றைப் பேசிப் பேசி மன வலியை, அச்சத்தை, தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்துவது. ஆனால் வன்முறையைச் செலுத்துகிறவர் பாவம் என்று கருதியும், வன்முறை செய்வதற்கான காரணத்தைக் கற்பித்துக்கொண்டும், சித்ரா பொறுத்துப்போனதால், வன்முறை அதிகரித்துக்கொண்டுபோனதே தவிரக்

குறையவில்லை. சித்ரா விடாமுயற்சியுடன் அருளின் மனப் பிரச்சினையைச் சரி செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் அருளுக்கு உணர்த்துவதற்காக வீட்டை விட்டு வெளியேறியிருக்கலாம். அல்லது அவரை வெளியேற்றியிருக்கலாம். எதுவும் செய்யாமல் வன்முறையைப் பொறுத்துக்கொண்டது இருவருக்கும் எவ்விதப் பயனையும் தரவில்லை.

குழந்தைகளையும் பாதிக்கும் வன்முறை

அஸ்வின் வந்து நின்றதைக் கூட சித்ரா கவனிக்கவில்லை. “ஐயோ, உன் லேப்டாப்பையும் உடைச்சிட்டாரா? அன்னிக்கு உன் செல்போனைக்கூட அவர்தான் தூக்கிப் போட்டு உடைச் சார்மா”என்றான் அஸ்வின். அவனை அணைத்துக்கொண்டு அழுதார்.

சித்ராவின் ‘பொறுமை’ குழந்தையையும் பாதிக்கிறது. இந்த லேப்டாப் உடைப்பு அவனுக்குப் புதிதாக இல்லை. சித்ராவால் அவள் அறியாமலே குழந்தைக்கு வன்முறை பழக்கப்படுத்தப் படுகிறது.

இப்படிபட்ட உளவியல் ரீதியான வன்முறைகளைப் பற்றி, குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் பேசுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதுகாக்கிறது. நிவாரணங்களைப் பெறவும் வழிசெய்கிறது. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இதற்காக ஒரு பாதுகாப்பு அலுவலர் உள்ளார். அவரையோ அல்லது தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீதிமன்ற நடுவர்களையோ அணுகலாம். ஒவ்வொரு நீதிமன்ற வளாகத்திலும் உள்ள வட்டார, மாவட்ட, சட்டப் பணிகள் ஆணைக் குழுக்களை அணுகி, பெண்கள் இலவசமாகச் சட்ட உதவி பெறுவதுடன் வழக்கறிஞரையும்கூட நியமித்துக்கொள்ளலாம். சித்ராக்கள் தயாரா?

கட்டுரையாளர், வழக்கறிஞர்.
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024