Friday, September 16, 2016


காற்றினிலே வரும் கீதம்... - எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு!


இசையைச் சுவாசித்தவர். இசையில் தியானித்தவர். இசையொடு இரண்டற இணைந்தவர். தன் இசையைக் கேட்கும் ஒவ்வொருவரையும் புனிதப் பயணம் அழைத்துச்சென்று ஆலயங்களைத் தரிசிக்கவைத்தவர். காஞ்சி காமாட்சியையும், மதுரை மீனாட்சியையும் கண்முன் கொண்டுவரும் திறன், எம்.எஸ். அவர்களின் பாடல்களுக்கு உள்ளது. இத்தகைய பெருமைமிக்க இசை அரசி எம்.எஸ்.அம்மாவிற்கு, இன்றோடு(செப்.16) 100 வயது ஆகிறது. இந்த ஆண்டு, எம்.எஸ்.ஸின் நூற்றாண்டு ஆகும். இந்த இசை அரசியை பற்றி சில செய்திகள் இங்கே……..

17 வயதில் இருந்தே:

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் மதுரையில் சங்கீத உலகின் அதிசயங்களில் ஒருவராகப் பிறந்தார். செம்மங்குடி சீனிவாச ஐயரிடம் கர்நாடக இசையையும், பண்டிதர் நாராயண ராவ் வியாஸிடம் இந்துஸ்தானியையும் கற்றுக்கொண்ட இவர், தனது 17வது வயதிலேயே இசைத் துறையில் இனிய குரலைப் பதிய வைத்தார்.

தரணி ஆண்ட எம்.எஸ்.:

கல்யாணக் கச்சேரி என்றால் ஒரு மாதிரி, கோயில் கச்சேரி என்றால் ஒரு மாதிரி, சபா கச்சேரி என்றால் வேறு மாதிரி என்ற பாகுபடுகளை தன் வாழ்நாளில் என்றுமே வைத்துக் கொண்டதில்லை எம்.எஸ்.அவர்கள். ‘பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்’ என்று சொல்வார்கள். அவ்வகையில், பரணியில் பிறந்த இந்த இசையரசி தரணியை ஆளத்தான் செய்தார். சங்கீத உலகின் முடிசூடா மகாராணியாக திகழ்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும், திரைப்படத்துக்குமான உறவு இன்றைய இளைய சமுதாயம் அதிகம் அறிந்திராத ஒன்று. திரைப்படங்களில் ஆயிரம் பேர் பாடியிருக்கலாம். ஆனால் திரையில் ஒலித்த தெய்வீகக் குரல் எம்.எஸ்.சுப்புலட்சுமியினுடையது. சங்கீத சாம்ராஜ்யத்துக்கு திரையுலகம் விட்டுக் கொடுத்த பொக்கிஷம் எம்.எஸ்.சுப்புலட்சுமி. திரையுலகில் அவரது பங்கு மிக குறைவானதாக இருக்கலாம். ஆனால் நிறைவானது. இன்று வரை எம்.எஸ்.சின் உயரம் யாராலும் தொட முடியாத உயரமாகவே உள்ளது.





உறுதுணையாக இருந்த கணவர்:

ஒருமுறை மும்பைக்கு கச்சேரி செய்ய சென்றபோது ரெயிலில் அறிமுகமானார் இளைஞர் சதாசிவம். எம்.எஸ்.ஸின் தீவிர ரசிகர். அவரின் திறமைகளை மேலும் வெளிக்கொண்டுவர வேண்டும், அவ்வாறு செய்து அவரது புகழை உச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என விரும்பினார். பின்னாளில் இசை அரசியை திருமணம் செய்துகொண்டார். சங்கீதத்திலும், சமூகத்திலும் தன் மனைவி சிறப்பு எய்த வேண்டும் என்ற ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர். தனது இசை பயணத்தை மேலும் செப்பனிட தன் கணவரும் வரப்போகிறார் என்பதை எண்ணிப் பூரித்துவிட்டார் எம்.எஸ். அதன் பின் அவர் பாடாத பாட்டும் இல்லை, செல்லாத நாடும் இல்லை, வாங்காத விருதும் இல்லை எனுமளவு புகழ்க்கொடி நாட்டினார். தான் பாடிச் சம்பாதித்த பணத்தின் பெரும் பகுதியை சமூக காரியங்களுக்கு அள்ளிக் கொடுத்தார். தெய்வீக பணிகளுக்கு வாரிக் கொடுத்தார்.

மீரா ஏற்படுத்திய அழகிய தாக்கம்:

திரு.கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள், கிருஷ்ணனை நினைத்து நினைத்து உருகும் பக்த மீராவின் கதையை எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கத்தில் உருவாக்கினார். இசை அரசியை திரையுலகம் வியந்து போற்றியது. எஸ்.வி.வெங்கட்ராமனின் இசையில் எம்.எஸ். பாடிய பாடல்களோடு மீராவாக எம்.எஸ்.அம்மாவை பார்க்கும் போது இது படமா அல்லது மீராவே உயிர்த்தெழுந்து வந்தாரா என நினைக்கும் அளவுக்கு இருக்கும். எம்.எஸ். அவர்களின் வாழ்வில், இந்த பக்த மீரா ஒரு மைல்கல்லாக இருந்துள்ளாள். சரோஜினி நாயுடு அவர்கள் படத்தை பார்த்து விட்டு, ‘இந்தியாவின் இசைக்குயில்’ என்ற பட்டத்தை வழங்கினார். அன்றைய பிரதமர் நேரு அவர்கள் கூறும் போது, “இந்த இசை அரசிக்கு முன்னால் நான் சாதாரண பிரதம மந்திரியே” என்றார்.

இசை சமூகத்துக்கு ரொம்பவே அவசியம்:

இன்றைய இளைஞர் சமுதாயம் நல்ல சங்கீதத்தால் மேன்மை அடைய வேண்டும் என்று எண்ணிய அம்மா அவர்கள், “தாய்மார்கள் அடுத்த தலைமுறையினருக்கு நல்ல ரசனை உணர்வை ஊட்டினால், நாட்டில் சங்கீதம் பெருகும், அதாவது பக்தி பெருகும், நாட்டு மக்களுக்கும் நல்வாழ்வு கிடைக்கும்” என்றார். இசை பெருகுவதன் மூலம் மக்களின் நலமும் நாட்டின் நலமும் பெருகும் என்பதை உளமார நம்பியவர். சுமார் 40வருடங்களுக்கு முன்னர் எம்.எஸ். அவர்கள் கூறிய கருத்துக்கள் யாவும் இன்றளவும் ஏற்புடையதாகவே இருக்கின்றது.

‘இது நூற்றாண்டல்ல, இசை ஆண்டு’ :

இசையும், இறை பணியும், வள்ளல் குணமுமாய், இந்திய பெண்களின் அடையாளமாய் வாழ்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004ம் ஆண்டு டிசம்பர் 12ந் தேதி மறைந்தார். உலகையே தன் இசையால் வென்ற இவரின் இன்று தொடங்கும் அவரது நூற்றாண்டை இசை ஆண்டாக தமிழகம் கொண்டாடட்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024