Thursday, September 22, 2016

உங்களுக்கு தலைவனாகும் ஆசை இருக்கிறதா...?



உங்களுக்கு தலைவனாகும் ஆசை இருக்கிறதா...?

நிதானமாக யோசியுங்கள். யோசித்தீர்களா?

இப்பொழுது இன்னொரு கேள்வி 'எல்லோரையும் விட கடுமையாகத்தான் உழைக்கிறோம். ஆனால் எங்கே தவறு செய்கிறோம்.. எது நம்மிடம் இல்லை?' என்பது போன்ற கேள்விகள் உங்களைத் துரத்தி இருக்கிறதா இதோ இந்த குறிப்புகள் உங்களுக்காகத் தான்.

1. ஒரு தலைவனின் அடிப்படைக் குணமே ஒரு குழுவை எப்போதும் நல்ல முறையில் வழிநடத்திச் செல்வதுதான். அப்படியான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் பொழுது அதை சரியான முறையில் செய்திருக்கிறீர்களா? செய்திருந்தால், ஒரு தலைவன் அங்கேயே வெளிப்பட்டிருப்பான்.

2. உங்கள் அலுவலகத்திலோ அல்லது நண்பர்களில் ஒருவருக்கோ ஏதேனும் அவசரத் தருணத்தில் அவர் திட்டமிட்ட வேலையை சரியாக செய்ய முடியாமல் போகிறது. அந்த வேலையை நீங்களாகவே கேட்டு செய்து கொடுத்து இருக்கிறீர்களா? தலைவனின் பண்பு தலைமை தாங்குவது மட்டும்தான் என்றில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு அவ்வப்போது உதவி, அவர்களை நல்ல நிலையில் வைத்துக்கொள்வதும் தான். அதே நேரத்தில் அவர்களாகவே செய்து முடியக்கூடிய வேலைகளை, அவர்களைக் கொண்டே செய்ய வைக்க வேண்டும்.

3. உங்கள் குழுவுக்கு தொடர்ந்து தோல்விகள். உங்களிடம் அதற்கான காரணம் கேட்கப்படுகிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்? காரணங்களைச் அடுக்குவீர்களா, அல்லது அதற்கான தீர்வுகளோடும் செல்வீர்களா? தீர்வுகளோடும் செல்பவராக இருந்தால் நிர்வாகத்தின் முதல் சாய்ஸ் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.

4. நீங்கள் அதிகமாக கோபப்படுபவரா? யாரேனும் சிறு தவறு செய்து விட்டால் கூட, அவர்களை கடுமையாகத் திட்டி நல்வழிப்படுத்த வேண்டும் என நினைப்பவரா. அப்படி ஒரு குணம் உங்களிடம் இருந்தால் அதை இப்பொழுதிலிருந்தே மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

5. ஒரு தலைவனுக்கு தன் குழுவை வழிநடத்திச் செல்வதைப்பற்றி தெரிந்திருப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல உங்கள் இலக்குகளைப் பற்றி தெரிந்து கொண்டிருப்பதும் ரொம்ப முக்கியம். இலக்கில்லாமல் பயணிப்பது தலைவனுக்கு அழகல்ல!

6. "எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கியே செல்லும்" என்பதைப்போல எப்படியும் வெற்றி கிடைத்து விடும்.. இவ்வளவு பேர் கடினமாக உழைக்கிறோமே என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் ஒரு தலைவன் சரியாகத் திட்டமிட்டு வேலைகளை பிரித்துக் கொடுப்பவனாக இருக்க வேண்டும்.

7. எப்பொழுதும் தனியாக முடிவெடுப்பவராக அல்லாமல். தன் குழுவினரின் கருத்துகளையும் கேட்டறிந்து நல்ல தீர்வுகளை முன்னெடுப்பவரே நல்ல தலைவனாக உருவெடுக்கிறான். ‘

நீங்கள் தொண்டனா, தலைவனா?’ என்ற கேள்வி உங்களிடம் கேட்கப்படுகிறது. இரண்டு சாய்ஸ்கள் , முடிவு உங்கள் கையில். இந்த இறுதி வரிகளை படிக்கும் முன்பு நீங்கள் முடிவெடுத்திருந்தால்..

யெஸ் பாஸ்...! உங்களுக்குள்ளும் ஒரு தலைவன் இருக்கிறான்!

- க. பாலாஜி

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024