Tuesday, September 27, 2016



வெள்ளிக்கு 50 கோடி டீல்... தங்கத்துக்கு தகரடப்பா!


ரியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்றது 6 வீரர்கள். அவர்களால் எந்த பதக்கமும் வெல்ல முடியவில்லை. ஆனால், பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் தங்கம் வென்று சாதனை படைத்தார் மாரியப்பன். ஆங்கில ஊடகங்கள் முதற் கொண்டு அந்த நேரத்தில் மாரியப்பன் மாரியப்பன் என ஓயாமல் நீட்டி முழங்கிக் கொண்டிருந்தன. ரியோ ஒலிம்பிக்கில் குட்டி குட்டி நாடுகள் கூட பீல்டு அண்டு டிராக் ஈவன்ட்டுகளில் அதாவது உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம் போன்றவற்றில் தங்கப் பதக்கம் வெல்வதை காண முடிந்தது. குட்டி நாடு பிஜீ, காலம் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த பிரிட்டனைச் சாத்து சாத்தென்று சாத்தி ரக்பி செவன்சில் தங்கத்தைக் கைப்பற்றி ஆர்ப்பரித்தது.

இந்த ஒலிம்பிக் சீசனை பொறுத்தவரை மாரியப்பன் அடைந்த வெற்றி ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதற்கு சமமான ஒன்றுதான். பாராலிம்பிக்கர் என்ற வகையில் மாரியப்பனுக்கு கிடைத்தது வெறும் இரண்டே முக்கால் கோடிதான். சிந்துவைப் பொறுத்த வரை, இரு மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டு கோடிக் கணக்கில் பரிசுகளை அள்ளி வழங்கின. தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பரிசுகளை கொடுத்தன. சச்சின் தலைமையில் சிந்து, சாக் ஷி, தீபா, சிந்துவின் பயிற்சியாளர் கோபிச்சந்த் ஆகியோருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசாக வழங்கபப்பட்டது. இதில் எதுவும் தவறில்லை.

இதுவெல்லாம் ஒரு பக்கம் என்றால், இப்போது சிந்துவுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் விளம்பர ஒப்பந்தங்கள் குவிந்துள்ளன. இதனால், சிந்துவின் விளம்பர விவகாரங்களை பேஸ்லைன் வென்ச்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் கவனிக்க உள்ளது. சிந்துவின் புகைப்படங்கள் உரிமம் முதற்கொண்டு , இந்த நிறுவனத்திடம்தான் 3 ஆண்டுகளுக்கு இருக்கும். முதற்கட்டமாக 9 நிறுவனங்கள் சிந்துவை ஒப்பந்தம் செய்துள்ளன. மேலும், 7 நிறுவனங்கள் சிந்துவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. முதன்முறையாக இந்தியாவில் கிரிக்கெட் சாராத ஒரு விளையாட்டு வீராங்கனை இவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது இப்போதுதான். சிந்துவின் திறமைக்கு கொடுக்கப்பட வேண்டியதுதான் மறுக்கவில்லை. அதே வேளையில், கிட்டத்தட்ட அதற்கு ஈடான முயற்சிகள் செய்துதானே மாரியப்பன் போன்றவர்கள் தங்கம் வென்றிருக்கின்றனர்.



மாரியப்பன் பின்னணி தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்த உலகத்துக்கே தெரியும். மாரியப்பனை விடுங்கள். அழகிகளை ஒப்பந்தம் செய்ய வாரி வழங்கும் இந்திய நிறுவனங்களுக்கு பெரும்பாலான தடகள வீராங்கனைகளின் வாழ்க்கைப் பற்றித் தெரியுமா?. தீவிர பயிற்சி காரணமாக தடகள வீராங்கனைகள் பெண்மைக்குரிய அடையாளங்களையே இழக்கிறார்கள். அவர்களது முகத்தைப் பார்த்தால் தெரியும். உடலைப் பார்த்தால் தெரியும். நரம்பு முறுக்கேறிய கைகளைப் பார்த்தாலும் புரியும். சில சமயங்களில் குழந்தை பெற்றுக் கொள்வது கூட சிரமம்தான்.ஜெயிக்கிறார்களோ தோற்கிறார்களோ அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை ஈடு செய்ய முடியாத விஷயம்.

இந்த ஒலிம்பிக்கில் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் லலிதா பாபர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அவருக்கு 10 லட்சம் கூட கொடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. தண்ணீர் கூட தரவில்லை என்று ஜெய்சா கதறினார். இப்போது எப்படி இருக்கிறார் என்ற நினைப்பே இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த வீரர் கணபதி. ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மொத்தச் சம்பளமே 20 ஆயிரம் ரூபாய்தான். அதில்தான் தனது குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு தனது பயிற்சிக்கான செலவுகளையும் பார்த்துக் கொண்டார். பயிற்சிக்காக இவர் வாங்கிய வங்கிக்கடன் 3 லட்சம். இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. இவரும் ஒரு ஒலிம்பியன்தான். ஒலிம்பியன் என்ற பெயரோடு ஒளிந்து கிடக்கிறார். அடுத்த ஒலிம்பிக்கிற்கு இன்னும் கடன் வாங்குவார். கடைசியில் வட்டி கட்ட முடியாமல் போகும்.

இந்தியாவின் சமச்சீரற்ற பொருளாதாரம் போலத்தான் சமச்சீரற்ற விளையாட்டுத்துறையும். ஒரே பக்கம் பணம் சேர்வது போல... ஜெயித்தால் ஒரே அடியாக அவர்கள் கால்களில் பணத்தைக் கொண்டு கொட்டுவார்கள். விளம்பரம் விளம்பரம் என்று பின்னாலேயே அலைவது. ஜெயிப்பவர்கள் மட்டும் கண்ணுக்கு தெரிவதால், தோற்பவர்கள் காணாமலேயே போய் விடுகிறார்கள். அந்த வீராங்கனையை வைத்து அடுத்த தலைமுறையும் அந்த விளையாட்டுகளில் மட்டுமே கவனம் செலுத்தும். அதில் மட்டும் கொஞ்சம் வீரர்- வீராங்கனைகள் உருவாகி வருவார்கள். மற்ற விளையாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துப் போய்க் கொண்டிருக்கும். கிரிக்கெட்டுக்கு அள்ளிக் கொடுத்தார்கள் இந்தியாவில் கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து போன்ற விளையாட்டுகள் காணாமலேயே போய் விட்டன.

இதனால்தான் குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங், ''நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் சமயத்துலத்தான் எங்களையெல்லாம் உங்களுக்கு நினைவுக்கு வருமோ? மத்த சமயத்துல நாங்க இருக்கோமா செத்தோமானுகூட பார்க்க மாட்டீங்கனு.'' காட்டமாகக் கேட்டார். ஆப்ரிக்காவில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதால், தனது கிராமத்துக்கே மின்சாரம் பெற்றுத் தந்தார் ஒரு தடகள வீராங்கனை. அந்த நாட்டை விட பல மடங்கு பொருளாதார பலமும் வசதியும் திறமையும் உள்ள நாடு இது. ஆனால், இங்கே என்ன நடக்கிறது. ஒவ்வொரு விஷயத்திலும் அரசியல். விளையாட்டுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத விளையாட்டு அமைப்புத் தலைவர்கள். இதையெல்லாம் விட ஜெயித்தால் ஸ்பான்சர்ஷிப் என்ற பெயரில் பணத்தைக் கொட்டிக் கொடுப்பது. இதனால், சில பேட்மின்டன் வீரர்கள் உருவாகி வரலாம். சிந்துவும் பணத்தில் கொழித்து விடலாம். ஆனால், லலிதா பாபர் போன்ற தடகள வீராங்கனைகள்?

எல்லாரையும் சமமாக நடத்துங்கள். வெற்றியோ தோல்வியோ... பங்குபெற்றவர்களைக் கொண்டாடுங்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை.. மதிப்பிடமுடியாதது என உணருங்கள். இருக்கும் கொஞ்ச நஞ்ச தடகள வீரர் -வீராங்கனைகளை அடையாளம் தெரியாமலேயே செய்து விடாதீர்கள்!

-எம். குமரேசன்

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...