Friday, September 23, 2016

தேவை ராஜதந்திரம், சூத்திரமல்ல!

By ஆசிரியர்  |   Last Updated on : 23rd September 2016 05:52 AM  |

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்டிருக்கும் உரி ராணுவத் தலைமை முகாம் மீதான பயங்கரவாதத் தாக்குதலால் ஒட்டுமொத்த இந்தியாவே கொதித்துப் போய் இருக்கிறது. இந்திய எல்லைக்குள் நுழைந்து கடந்த ஞாயிறன்று அதிகாலையில் ராணுவ வீரர்களை பலி வாங்கிய பயங்கரவாதத் தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்குக் காரணமான நான்கு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பது ஆறுதலல்ல. அவர்களால் தாக்குதல் நடத்த முடிந்திருக்கிறதே என்பது அவமானம்.
கடந்த ஒன்பது மாதங்களில் ஜம்மு - காஷ்மீரத்திலுள்ள இந்திய ராணுவ முகாம்களில் நடத்தப்பட்டிருக்கும் ஆறாவது பெரிய பயங்கரவாதத் தாக்குதல் இந்த உரி ராணுவ முகாம் சம்பவம். அந்த அளவுக்கு நாம் விழிப்புடன் இல்லாமல் இருக்கிறோம். இதற்கு முந்தைய தாக்குதல்களிலிருந்து நாம் எந்தவிதப் பாடமும் படிக்கவில்லை என்பதையும், நமது பாதுகாப்பு ஏற்பாடுகள் அந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதையும், நமது ராணுவ முகாம்களின் அமைப்பும், செயல்பாடுகளும் எதிரிகளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது என்பதையும் உரி தாக்குதல் மீண்டும் வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதான்கோட் விமானதளத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பின்பற்றப்பட்ட அதே வழிமுறையைத்தான் பயங்கரவாதிகள், இப்போது வடக்கு காஷ்மீரத்தில் உள்ள உரி ராணுவத் தளத் தாக்குதலிலும் பின்பற்றியிருக்கிறார்கள் என்பது முந்தைய தாக்குதலுக்குப் பிறகும்கூட நமது ராணுவ தளங்களின் பாதுகாப்பைத் தாக்குதல் நடத்த முடியாத அளவுக்கு நாம் பலப்படுத்தவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
இந்தத் தாக்குதலிலும் இரண்டு இடங்களில், நமது பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பையும் மீறி ஊடுருவல் நடந்திருக்கிறது. முதலாவதாக, பயங்கரவாதிகள் நான்கு பேரும் எல்லையைக் கடந்திருக்கிறார்கள். அடுத்தபடியாக, ராணுவத் தளத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள். தொடர்ந்து பயங்கரவாதிகள் நமது பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துகிறார்கள் என்று தெரிந்தும்கூட, அவர்கள் ஊடுருவ முடியாத அளவுக்கு நமதுபாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்பதும், அப்படியே இருந்தாலும் அது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் தெளிவாகிறது.
கொஞ்சம்கூட தயக்கம் இல்லாமல், "இந்தத் தாக்குதலைக் காரணம் காட்டிக் காஷ்மீர் விவகாரத்தை இந்தியா திசை திருப்பப் பார்க்கிறது' என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளியுறவு ஆலோசகத் துறை செயலர் அறிக்கை வெளியிடுகிறார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 18 ராணுவ வீரர்களின் உயிரைப் பலிவாங்கிய உரி ராணுவ தலைமை முகாம் மீதான பயங்கரவாதத் தாக்குதல், பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் நடத்தப்பட்டிருப்பதை பயங்கரவாதிகள் நான்கு பேரும் வைத்திருந்த ஆயுதங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், தாக்குதல் நடத்திய தற்கொலைப்படையினர் நான்கு பேரும் ஜெய்ஷ் - ஏ - முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியாகியுள்ளது.
அதிக அளவு புரதச் சத்துள்ள சாக்லேட்களின் 26 உறைகள், ஆறு ரெட்புல் பானத்தின் கேன்கள், பாகிஸ்தான் தயாரிப்பு முத்திரையுடன் கூடிய மருந்துகள் அடங்கிய மூன்று பொட்டலங்கள் ஆகியவை பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், எல்லையிலிருந்து ஆறு கி.மீ. தொலைவிலுள்ள முசாபர்பாத் நகரத்திலிருந்து ராணுவ முகாமுக்கு வழிகாட்டுகின்ற "ஜி.பி.எஸ்.' வழிகாட்டியும் கிடைத்திருக்கிறது. ஜி.பி.எஸ். இயந்திரம் மிகத்தெளிவாக இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்துதான் வந்திருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும் என்பதற்காக ராணுவம் தனது நடைமுறைகளைத் தளர்த்திக் கொண்டதால் ஏற்பட்ட இடைவெளியும்கூட இத்தாக்குதலுக்குக் காரணம். ராணுவம் தனது தாக்குதலை மீண்டும் கடுமையாக்கி அதனால் காஷ்மீர் மக்கள் பாதிக்கப்பட்டதாக மேலும் இந்திய ஊடகங்களையும், எதிர்க்கட்சிகளையும் வைத்தே இந்தியாவைப் பரிகாசத்துக்கு ஆளாக்க வேண்டும் என்பதுகூட இந்தத் தாக்குதலின் நோக்கமாக இருந்தாலும் வியப்படையத் தேவையில்லை.
தனது அரசின் தோல்விகளையும், பலவீனங்களையும் மறைப்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு காஷ்மீர் பிரச்னையும், அதன் தொடர்பாக இந்தியாவுடன் போர் மூளும் சூழலும் தேவைப்படுகிறது. சீனா தனக்குத் துணை நிற்கும் என்கிற பாகிஸ்தானின் தைரியத்தை, இந்தியா அமெரிக்காவுடன் செய்து கொண்ட ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் தகர்த்திருக்கிறது என்றாலும்கூட, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம், இந்தியாவின் பொறுமையை சோதித்து எரிச்சலடைய வைப்பதில் பாகிஸ்தான் முனைப்புக்காட்டுகிறது. காஷ்மீரில் அமைதி திரும்பாமல் பார்த்துக் கொள்வது என்பதுதான் பாகிஸ்தானின் குறிக்கோளாக இருக்கிறது.
இந்தத் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இருப்பது உறுதியாகி விட்டிருக்கும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானை "பயங்கரவாத நாடு' என்று அறிவிக்க வேண்டும் என்கிற இந்தியாவின் கோரிக்கை வலுப்பெறுகிறது.
இது போருக்கு உகந்த நேரம் அல்ல. அதே நேரத்தில், சர்வதேச அளவில் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தத் தகுந்த தருணம். இந்த பிரச்னையை நிதானமாகவும் அரசியல் ராஜதந்திரத்தின் அடிப்படையிலும் அணுகுவது என்று பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அந்த அணுகுமுறை பாராட்டுக்குரியது!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024