விமானத்தில் தனியே உலகம் சுற்றிய இளைஞர்
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த அந்த 18 வயது இளைஞரின் பெயர், லக்லான் ஸ்மார்ட். இவர், தனியாக விமானத்தை ஓட்டிக்கொண்டு உலகின் பல்வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என விரும்பினார்.
அதன்படி, ஆஸ்திரேலியாவின் மருச்சிடோர் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜூலை 24–ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கினார் ஸ்மார்ட்.
15 நாடுகளைச் சேர்ந்த 24 இடங்களுக்கு தனது சிறிய விமானத்தில் பறந்து சென்ற அவர், சமீபத்தில் தனது தாய்நாடு திரும்பினார். அப்போது ஸ்மார்ட்டுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்மார்ட், 18 வயது, 7 மாதம், 21 நாட்களில் விமானத்தைத் தனியாக ஓட்டி இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த மாத் குத் மில்லர், உலகின் குறைந்த வயதில் தனியாக அதிக நாடுகளுக்கு விமானத்தில் பறந்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரராக இருந்தார். அவரை ஸ்மார்ட் முந்திவிட்டார்.
இவர், 45 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 2 மாதங்களில் கடந்து இச்சாதனையைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி லக்லான் ஸ்மார்ட், தான் சாதனை படைப்பதற்கு உறுதுணையாக இருந்த தமது பெற்றோர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். மேலும், இந்தத் தருணம் தமது வாழ்வில் மிகவும் மறக்க முடியாதது ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
விமானத்தில் பறந்தபோது தனது ‘திரில்லிங்’ அனுபவம் பற்றி ஸ்மார்ட் கூறும்போது, இந்தோனேசியா அருகே சென்று கொண்டிருந்தபோது தொலைத்தொடர்பு தகவல் சரியாகக் கிடைக்காததால் விமானம் மலை மீது மோதவிருந்தது, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன் என்றார்.
சோதனைகளைக் கடந்துதானே சாதனை படைக்கணும்!
No comments:
Post a Comment