Friday, June 30, 2017

"18 வயசு ஆகிருச்சா?" - ஃபேஸ்புக் கேட்கப்போகும் கேள்விக்குத் தயாராகுங்கள்! 

கருப்பு

உலகின் முன்னணி சோஷியல் மீடியாவான ஃபேஸ்புக்கில், வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் அப்டேட் செய்வதுதான் பெரும்பாலானவர்களின் வழக்கம். 'சிங்கிள்' சின்னத்தம்பியாய் இருக்கும் ஜென்Z தலைமுறை இளைஞர் ஒருவர், கமிட்டட் கைப்பிள்ளையாக மாறினால், அந்த விஷயத்தை முதல் வேலையாக ஸ்டேட்டஸ் போடுவதுதான் வழக்கம். அந்த அளவுக்கு இளம்தலைமுறையினர் பலரின் வாழ்வோடு ஃபேஸ்புக் ஒன்றிப்போய்விட்டது. ஃபேஸ்புக்கை திறந்தாலே "What's on your mind" என ஸ்டேட்டஸ் பாரில் கேள்வி கேட்பதைப் பார்த்திருப்போம். இனி 18 வயது நிரம்பிய இந்திய வாக்காளர்கள் அனைவரிடமும் புதிதாக கேள்வியொன்றைக் கேட்கப்போகிறது ஃபேஸ்புக்.



இந்தியத் தேர்தல் ஆணையமும், ஃபேஸ்புக் நிறுவனமும் இணைந்து 18 வயது நிரம்பிய வாக்குரிமை பெற்றவர்களிடம், வாக்காளர் அடையாள அட்டை பெறுவது குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தவிருக்கின்றன. இதன்படி, 18 வயது நிரம்பிய இந்திய வாக்காளர்களிடம் "வாக்காளர் அடையாள அட்டைக்கு இன்னும் விண்ணப்பிக்கவில்லையா?" என ஃபேஸ்புக் கேள்வி கேட்கும். வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 'Register Now' பட்டனைக் கிளிக் செய்தால், தேர்தல் ஆணையத்தின் National Voters’ Services Portal (http://www.nvsp.in/) தளத்திற்கு அவர்கள் ரீ-டேரக்ட் செய்யப்படுவார்கள். ஏற்கெனவே வாக்காளர் அடையாள அட்டைக்குப் பதிவு செய்திருப்பவர்கள், 'Share You're Registered' பட்டனைக் கிளிக் செய்தால், அது ஸ்டேட்டஸாக இடப்படும். ஒருவர் இப்படிப் பகிர்வதால், அவரின் ஃபேஸ்புக் நண்பர்களுக்கும் இத்தகவல் பரவத்தொடங்கும். இதனால் வாக்காளர் அடையாள அட்டைக்குப் பதிவு செய்வது பற்றிய விழிப்புஉணர்வு ஏற்படும்.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்துமுடிந்தது நினைவிருக்கலாம். வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக, அம்மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு, வாக்குப்பதிவு குறித்து ஃபேஸ்புக் இதேபோல நினைவூட்டியது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 1-ம் தேதியிலிருந்து 4-ம் தேதி வரை இந்தியப் பயனாளர்கள் அனைவருக்கும் இந்த ரிமைண்ட்டர் ஃபேஸ்புக்கில் காண்பிக்கப்படும். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், பஞ்சாபி, குஜராத்தி, உருது, அஸ்ஸாமீஸ், மராத்தி, ஒரியா, ஹிந்தி போன்ற 13 மொழிகளில் இந்த ரிமைண்ட்டர் காண்பிக்கப்படும். உதாரணமாக, தமிழகத்தில் இருக்கும் ஒரு நபர் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார் என்றால், அவருக்கு இந்த ரிமைண்ட்டர் தமிழில் காண்பிக்கப்படும்.

இது குறித்து இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, "விடுபட்ட வாக்காளர்கள்... குறிப்பாக முதல்முறையாக வாக்குப்பதிவு செய்யவிருப்பவர்கள் பதிவு செய்ய வசதியாக, இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாட்டைச் செய்யவிருக்கிறது. 'எந்த வாக்காளரும் விடுபடக்கூடாது' என்ற தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் முக்கிய முன்னெடுப்பாக இது இருக்கும்" எனத்தெரிவித்துள்ளார்.

200 கோடி மாதாந்திரப் பயனாளர்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி மார்க் சக்கர்பெர்க் சமீபத்தில் தெரிவித்தார். அந்நிறுவனத்தைப் பொறுத்தவரை, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியச் சந்தைதான் மிகப்பெரியது. இந்தியாவில் மட்டும் சுமார் 18 கோடிப்பேர் ஃபேஸ்புக் பயன்படுத்துகின்றனர். ஃபேஸ்புக் மூலம் விழிப்புஉணர்வு ஏற்படுத்தும்போது அதன் ரீச் அதிகமாக இருக்கும் என்பதால், இந்தியத் தேர்தல் ஆணையம் அந்நிறுவனத்துடன் இணைந்து தொடர்ந்து செயல்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஃபேஸ்புக் கேட்கப்போகும் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா பாஸ்!
‘ஆந்திராவிடமிருந்து தமிழகம் கற்றுக்கொள்ளட்டும்!’ கொதிக்கும் மருத்துவர்கள் 

இரா. குருபிரசாத்

மருத்துவப் படிப்புகள் என்றாலே, சர்ச்சைகளுக்கும் பிரச்னைகளுக்கும் பஞ்சமில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 'எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம்' என்ற அறிவிப்பு ஒருபுறம் இருக்க, ' டிஎம், எம்சிஹெச் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தும் நுழைவுத் தேர்வில், வெளி மாநிலத்தவர்களும் கலந்துகொள்ளலாம்' என்ற அறிவிப்பு, மருத்துவர்களிடையே கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



முதுநிலை மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள 1,066 இடங்களில் 50 சதவிகிதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் 50 சதவிகிதம் மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்பட்டுவருகிறது. இதில், மாநில அரசுக்கு வழங்கப்பட்ட 50 சதவிகித ஒதுக்கீட்டில், 25 சதவிகிதத்தை அரசு மருத்துவர்களுக்கும், மீதமுள்ள 25 சதவிகிதத்தை தனியார் மருத்துவர்களுக்கும் ஒதுக்கப்படுவது நடைமுறையாக இருந்துவந்தது. இந்த இடங்களும் நுழைவுத்தேர்வு மூலமே நிரப்பப்பட்டுவந்தன. முக்கியமாக, தேர்வு எழுதும் மருத்துவர்களுக்குப் பணி அனுபவ அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுவந்தன.

இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில், பணி அடிப்படையில் வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண் வழங்கும் முறையில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, ' பழங்குடியினர் வாழும் பகுதிகள், மலைப்பகுதி மற்றும் போக்குவரத்து வசதியில்லாத தொலைதூரப் பகுதி (Remote area) ஆகிய மூன்று பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மட்டுமே கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்' என வரையறுத்துள்ளனர். தவிர, எந்தப் பிரிவினருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது என்பதற்கான பட்டியலையும் வெளியிட்டனர். அதில், 'மாநிலம் முழுவதும் உள்ள 2,223 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 114 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரிபவர்களுக்கு மட்டுமே கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், 'கிராமப்புறங்களில் வசிக்கும் மருத்துவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும்' என்று கூறி, அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.



இதன் விளைவாக, 1,747 டாக்டர்களுக்கு கூடுதல் மதிப்பெண்களை வழங்கியது தமிழக அரசு. இதையடுத்து, கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இந்த விவகாரத்தில், தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக, தனியார் மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், அரசாணையை ரத்துசெய்த நீதிமன்றம், இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதனால், 'இந்த ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை நடக்குமா? தர வரிசைப் பட்டியல் வெளியிடுவார்களா?' என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.


அரசாணைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த ஜனநாயக மருத்துவர்கள் சங்கத்தின் கார்த்திகேயனிடம் பேசினோம். "தமிழக அரசின் அரசாணையின்படி, அரசு மருத்துவர்களுக்குத் தலா 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் முதல் 1000 இடங்களில் 800 பேர் அரசு மருத்துவர்களாக உள்ளனர். தேசிய அளவில் ஒரு பெண் 48 ஆவது ரேங்க் எடுத்தார். ஆனால், மாநில அரசின் நடவடிக்கையால் தமிழக அளவில் அவர் 186 ஆவது ரேங்கில் வருகிறார். இந்த அடிப்படையில் கலந்தாய்வு நடத்தியதால், மொத்தம் உள்ள 1,066 இடங்களில் 999 இடங்கள் அரசு மருத்துவர்களுக்குச் சென்றுவிட்டது. வெறும் 67 இடங்கள்தான் மற்றவர்களுக்குக் கிடைத்துள்ளன. எனவேதான், நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலை ஏற்பட்டது. புதிய விதிமுறைகளின் படியும் அரசு டாக்டர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்ததால் தொடர் மிரட்டல்கள் வருகின்றன. தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களில் பலர், சேவை மனப்பான்மையுடன் உள்ளனர்.

குறைந்த கட்டணத்தில் ஏராளமான க்ளீனிக்குகள் இயங்கிவருகின்றன. தமிழக அரசின் உத்தரவால், மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுவது இல்லை. இதனால், அரசு மருத்துவர்களில் ஒரு பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் எங்கள் முடிவை வரவேற்றுள்ளனர். அரசின் நடைமுறையால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கோடிக்கணக்கில் பணம் கட்டி படிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என்றார் ஆதங்கத்துடன்.

“இந்தப் பிரச்னை உருவாவதற்கு முக்கியக் காரணமே, இந்திய மருத்துவ கவுன்சில்தான். 'அரசு மருத்துவர்களுக்கு அதிக இடங்கள் கொடுக்கக்கூடாது' என்ற உள்நோக்கத்தில் இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறையை நீக்க வேண்டும். இட ஒதுக்கீடு முறையை மாநில அரசிடமே ஒப்படைத்து, பழைய முறைப்படி கலந்தாய்வு நடத்தியிருந்தால், பிரச்னையே இல்லை. அப்படி நடந்தால், ஒரே நாளில் பிரச்னை தீர்ந்துவிடும். இதுகுறித்து, மத்திய அரசிடம் பேச தமிழக அரசு பயப்படுகிறது. நீட் தேர்வு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதுகுறித்து, மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் முன்பு இருந்த நடைமுறையால் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. ஆந்திர அரசைப் போல, அரசு டாக்டர்களுக்கான இடங்களில், அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களே சேரும் வகையில் சட்டம் கொண்டுவருவதே சிறந்ததாக இருக்க முடியும்" என்கிறார், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத்.

அரசு மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் பாலகிருஷ்ணனிடம் பேசினோம். "இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகள் தமிழகத்துக்கு
பொருந்தாது. இங்கு ஏற்கெனவே வேறு ஒரு விதிமுறை பின்பற்றப்பட்டுவருகிறது. மலைப்பகுதி மற்றும் பின் தங்கிய மாநிலங்களுக்குதான் இந்த விதிமுறைகள் பொருந்தும். நாங்கள், நீட் தேர்வை வரவேற்கிறோம். ஆனால், மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளில் மாற்றம்செய்ய வேண்டும். மொத்தம் உள்ள 1,500 மதிப்பெண்களை 100 என்ற அளவில் மாற்ற வேண்டும். அவற்றில், 90 மதிப்பெண்ணுக்குத் தேர்வும் மீதமுள்ள 10 மதிப்பெண்களுக்குப் பணி அடிப்படையிலும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் என இருவருக்கும் இந்த முறைப்படி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். இதுதான் பொதுவான நீதியாக இருக்க முடியும். இந்திய மருத்துவ கவுன்சிலின் புதிய விதிகளினால்தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், நமது ஒட்டுமொத்த நடைமுறையும் பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, இந்த முறையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்திடம் எடுத்துக்கூறி தீர்வு காண வேண்டும்" என்றார் உறுதியாக.


இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரத்தில் விசாரித்தோம். “முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், வழக்கமாகப் பின்பற்றப்படும் நடைமுறையைத்தான் கடைபிடித்தோம். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம். வரும் ஜூலை 4 -ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வருகிறது. 'அதுவரை எங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும்' என்று கேட்டுள்ளோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம்" என்கின்றனர்.
ஆதாருடன் பான் எண்ணை இணைக்க ஜூலை 1 தான் கடைசித் தேதியா..? 

ராகினி ஆத்ம வெண்டி மு.

பான் எண்ணை ஜூலை 1-ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், மக்களுள் பலர் ஜூலை 1-ம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செல்லாதா என்ற குழப்பமான மனநிலையிலேயே தவித்து வருகின்றனர்.



அடிப்படைச் சேவைகள் பெற ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பான் கார்டு பெறுவதற்கு மற்றும் வருமான வரி தாக்கல்செய்வதற்கு, ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் நடைமுறையை முன்மொழிந்துள்ளது மத்திய அரசு. வரும் ஜூலை 1-ம் தேதி முதல், மேற்குறிப்பிட்ட இரண்டுக்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைப்பதற்காக, புதிய இணையதள வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது வருமானவரித்துறை. அதன்படி, இனி இணையதளத்தின் மூலமே எளிமையான முறையில் ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம். https://incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில், ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணைக் கொடுத்து. பின் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களில் பலர் இதுவரை ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காமலே உள்ளனர். இன்னும் பலர் இன்னும் ஒரு நாள் தான் அவகாசம் உள்ளதெனப் பதிவு செய்ய மொத்தமாகக் குவிய வருமான வரித்துறையின் இணையதளம் தற்போது முடங்கியுள்ளது. ஜூலை 1-ம் தேதிக்குப் பின்னர் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாதது ஆகிவிடும் என மக்களுள் ஒரு கருத்து தற்போது நிலவி வருகிறது.

 மத்திய அரசின் உத்தரவின்படி ஜூலை 1-ம் தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது அவசியமாகிறது. ஆனால், இணைக்க முடியாவிட்டால் பான் கார்டு செல்லாதது ஆகிவிடும் என்ற நிலை கிடையவே கிடையாது. மத்திய அரசின் அறிவிப்பின்படி பின்னதொரு தேதி அறிவிக்கப்பட்டு அதன் பின்னரே பான் கார்டு செல்லாது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். வருமான வரி அரசாணை விதி 139AA-ன் அடிப்படையில் இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைபாடுள்ள கருவைக் கலைக்கலாமா?: முடிவு செய்யும்படி கர்ப்பிணிக்கு கோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
02:20




புதுடில்லி: 'பல்வேறு குறைபாடுகள் உள்ள கருவைக் கலைப்பதால், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்' என, மருத்துவக் குழு கூறியுள்ளதால், இது குறித்து, தன் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி, கர்ப்பிணிக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன், 24 வார கருவுக்கு, பல்வேறு இதயக் கோளாறுகள் இருப்பதால், அதை கலைக்க அனுமதிக்க வேண்டுமென, அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், 20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவைக் கலைப்பதற்கு அனுமதி மறுக்கும் சட்டத்தை எதிர்த்தும், அவர் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த, நீதிபதிகள், ஏ.எம்.சப்ரே, எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், மேற்கு வங்க அரசுக்கும் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, ஏழு டாக்டர்கள் அடங்கிய குழு, மருத்துவப் பரிசோதனை செய்யவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.டாக்டர்கள் குழு அளித்துள்ள அறிக்கையில், கருவைக் கலைத்தால், அது, தாயின் உயிருக்கும் ஆபத்தாக அமைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ அறிக்கையின் நகலை, வழக்கு தொடர்ந்துள்ள, கர்ப்பிணிக்கு அளிக்க உத்தரவிட்டுள்ள கோர்ட், கருவை கலைப்பது குறித்த தன் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி கூறியுள்ளது. வழக்கின் விசாரணை, ஜூலை, 3க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செய்யது பீடி நிறுவனங்களில் ரூ.100 கோடிக்கு வரி ஏய்ப்பு

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
00:11

செய்யது பீடி குழும நிறுவனங்களில் நேற்று, இரண்டாவது நாளாக சோதனை நடந்தது. ஐந்து மாநிலங்களில் நடந்த சோதனையில், 100 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டையில், செய்யது பீடி அலுவலகத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. செய்யது பீடி குழுமத்தில், செய்யது ஷரியத் பைனான்ஸ், செய்யது டிரேடிங் கம்பெனி போன்ற நிறுவனங்களும் அடக்கம். அந்த நிறுவனங்களில், நேற்று முன்தினம், வருமான வரித்துறையினர் திடீர் சோதனையை துவங்கினர். தமிழகத்தில், சென்னை, திருநெல்வேலி, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் என, மொத்தம், 63 இடங்களில் நடந்தது. இதில், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்தது தெரிய வந்துள்ளது.

இது குறித்து, தமிழக வருமான வரி புலனாய்வு துறை அதிகாரிகள் கூறியதாவது: செய்யது பீடி குழுமத்தில், சோதனை இரண்டாவது நாளாக தொடர்ந்தது. முதல் நாளில், நான்கு கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டாவது நாள் நடந்த சோதனையிலும், வரி ஏய்ப்பு தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் சிக்கின. அதை மதிப்பிடும் பணி நடந்து வருகிறது. 100 கோடி ரூபாய்க்கு மேல், வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம். வரி ஏய்ப்பு தொடர்பான முழு விபரங்கள், ஓரிரு நாட்களில் தெரியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -
திருமண பதிவு: புதிய சட்ட முன்வடிவு அறிமுகம்

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
01:22




சென்னை: தமிழ்நாடு திருமணங்களை பதிவு செய்தல் சட்டத்தில், திருத்தம் கொண்டு வருவதற்காக, புதிய சட்ட முன்வடிவு, நேற்று சட்டசபையில், அறிமுகம் செய்யப்பட்டது.

சட்டத்துறை அமைச்சர், சி.வி.சண்முகம், சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார். இதன் விபரம்: இப்புதிய சட்டம், '2017 தமிழ்நாடு திருமணங்களை பதிவு செய்தல் திருத்த சட்டம்' என அழைக்கப்படும். தமிழகத்தில், அனைத்து திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, 2009ல், தமிழ்நாடு திருமணங்களை பதிவு செய்தல் சட்டம் இயற்றப்பட்டது.

இதன்படி, திருமணம் நடந்த தேதியில் இருந்து, 90 நாட்களுக்குள், திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். இல்லையேல், கூடுதலாக, 60 நாட்களுக்குள், அதற்கான கட்டணத்துடன், பதிவு செய்ய வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றம், 2015 பிப்., 9ல் அளித்த தீர்ப்பில், கூடுதலாக கட்டணம் செலுத்தி, 150 நாட்களுக்கும் மேலாக, திருமணங்களை பதிவு செய்யும் வழிமுறையை தயார் செய்ய அறிவுறுத்தியது. இது தொடர்பாக, திருத்தம் கொண்டு வருவதற்காக, புதிய சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருமணம் நடத்தும் நபர், மத குரு என்று அழைக்கப்படுகிறார். இந்த சொல், அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சொல் என்பதற்கான திருத்தமும், இந்த சட்ட திருத்தத்தில் இடம் பெற்றுள்ளது.
வீடுகளில் இலவச மின்சாரம் : ஏளனம் செய்யும் பொறியாளர்கள்

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
00:24

மின் வாரிய அலுவலகங்களுக்கு புகார் தெரிவிக்க செல்லும் மக்களை, இலவச மின்சாரத்தை கூறி, உதவி பொறியாளர்கள் ஏளனம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில், 100 யூனிட் வரை இலவசம்; 500 யூனிட் கீழ் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, குறைந்த விலையில் மின் கட்டணம் வசூலிக்கிறது. அதற்காக, மின் வாரியத்துக்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு, மானியமாக வழங்குகிறது. தற்போது, வீடுகளில், 'ஸ்டேடிக்' என்ற நவீன மீட்டர் பொருத்தப்படுகிறது. அதில், மின் பயன்பாடு அளவு துல்லியமாக பதிவாவதால், பலருக்கு, அதிக மின் கட்டணம் வருகிறது.
புதிய மின் இணைப்பு கோரும்போது குறிப்பிட்டிருந்த அளவை விட, தற்போது, அதிக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில், கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கப்படுகிறது. அந்த விபரத்தை, மின் கணக்கீட்டு அட்டையில், ஊழியர்கள் தனித்தனியே எழுதுவதில்லை. மொத்தமாக எழுதுவதால், வழக்கத்தை விட, அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக கருதி, பலர், பிரிவு அலுவலகங்களுக்கு புகார் தெரிவிக்க செல்கின்றனர். அவர்களை, உதவி பொறியாளர்கள், இலவச மின்சாரத்தை கூறி, ஏளனம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, மின் நுகர்வோர் ஒருவர் கூறியதாவது: கூடுதல் மின் கட்டணம் தொடர்பாக, பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவிக்க சென்றேன். அங்குள்ள பொறியாளர், '100 யூனிட் இலவச மின்சாரம் வரும் போது, யாரும் வருவதில்லை; இப்ப மட்டும் வந்துடுறீங்க... உங்களுக்கு எல்லாம் இலவச மின்சாரம் ஒரு கேடு...' என, தரக்குறைவாக பேசுகிறார். இதேபோல், அனைத்து பகுதிகளிலும் நடக்கிறது. இதனால், மின் ஊழியர்கள் மீது தவறு இருந்தாலும், புகார் தெரிவிக்க அலுவலகத்துக்கு செல்ல தயக்கமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மரியாதை கொடுக்காமல் ஏளனமாக நடக்கும் ஊழியர்கள், பொறியாளர்கள் மீது, எழுத்து பூர்வமாக புகார் அளித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

- நமது நிருபர் -

NEWS TODAY 2.5.2024