Wednesday, February 28, 2018

நாகூரில் சந்தனக்கூடு ஊர்வலம்

Added : பிப் 28, 2018 00:40



நாகப்பட்டினம்: நாகூர் தர்கா, கந்துாரி விழாவை முன்னிட்டு நடந்த, சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் வைபவத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர். நாகை அடுத்த, நாகூரில் உள்ள, ஷாஹுஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் தர்காவில், 461வது ஆண்டு கந்துாரி விழா, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக, சந்தனக்கூடு ஊர்வலம், நாகை அபிராமி அம்மன் திருவாசலில், நேற்று முன்தினம் இரவு துவங்கியது. சாம்பிராணி சட்டி, நகரா மேடை உட்பட, 25க்கும் மேற்பட்ட மின் அலங்கார ரதங்கள், சந்தனக்கூட்டின் முன்னும் பின்னுமாக சென்றன. மங்கள வாத்தியங்கள் முழங்க, நேற்று அதிகாலை, நாகூரை வந்தடைந்த சந்தனக்கூடு ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, அதிகாலை, 4:30 மணியளவில், தர்கா அலங்கார வாசலை அடைந்தது. பின், சந்தனக்கூடு ரதத்தில் இருந்து, சந்தனம் நிரப்பப்பட்ட குடங்கள், தர்காவிற்குள் கொண்டு செல்லப்பட்டன. தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப் துவா ஓதிய பின், சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான யாத்ரீகர்கள் பங்கேற்றனர்.
அண்ணா பல்கலை துணைவேந்தர் தேடல் குழு கூட்டம் முடிந்தது

Added : பிப் 28, 2018 02:52

அண்ணா பல்கலை துணை வேந்தருக்கான தேடல் குழு கூட்டம் முடிந்தது.அண்ணா பல்கலை துணை வேந்தர் பதவி, 2016 மே மாதம் காலியானது. புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய, இரண்டு தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டன. முதல் குழு சமர்ப்பித்த தேர்வு பட்டியலை, முன்னாள் கவர்னர், வித்யாசாகர் ராவ் நிராகரித்து, தேடல் குழுவையும் கலைத்து விட்டார். இரண்டாவது தேடல் குழு, அரசு வழங்கிய, நான்கு மாத அவகாசத்திற்குள் பணிகளை முடிக்கவில்லை. அதனால், அந்தக் குழுவும் காலாவதியானது.தொடர்ந்து, மூன்றாவது தேடல் குழு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த குழு, பிப்., 2 வரை, 80க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பெற்றது.இதையடுத்து, தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான, தேடல் குழு கூட்டம், நேற்று முன்தினம் துவங்கியது; நேற்று முடிந்தது. இதில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, வி.எஸ்.சிர்புர்கர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சுந்தரதேவன், ஐ.ஐ.டி., பேராசிரியர், ஞானமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், பல்கலை மானிய குழு ஒழுங்குமுறைகள் மற்றும் தமிழக அரசின் விதிகளின் படி, தகுதியானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல், விரைவில், கவர்னரிடம் தாக்கல் செய்யப்படும் என, தெரிகிறது. பட்டியலில் உள்ள ஒருவரை, கவர்னர் தேர்வு செய்து, அரசுக்கு அனுப்புவார்.

- நமது நிருபர் -

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் ஐந்து தேரோட்டம்

Added : பிப் 28, 2018 02:40




தஞ்சாவூர்: மாசிமக திருவிழாவை முன்னிட்டு, கும்பகோணம், ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நேற்று, ஐந்து தேரோட்டம் நடந்தது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமக குளத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மகாமகப் பெருவிழா நடைபெறுவதால், பாஸ்கர ஷேத்திரம் எனவும் போற்றப்படுகிறது. இங்கு, மகாமகம் தொடர்புடையதாக, 12 சிவன் கோவில்களும், ஐந்து வைணவ தலங்களும் உள்ளன.மங்களாம்பிகை உடனாய ஆதி கும்பேஸ்வர சுவாமி கோவிலை முதன்மையாக கொண்டே, ஆண்டுதோறும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தன்று, மாசி மகப் பெருவிழா நடக்கிறது.மாசி மகப்பெருவிழா, 20ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. எட்டாம் திருநாளான நேற்று காலை, தேரோட்டம் நடந்தது.

அதிகாலை, 5:30 மணிக்கு விநாயகர் தேரோட்டமும், காலை, 7:30 மணிக்கு சுவாமி, அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து சுவாமிகளின் தேரோட்டமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள், வடம் பிடித்தனர்.
94 தபால் அலுவலகங்களில் 'பாஸ்போர்ட்' சேவை மையம்

Added : பிப் 28, 2018 02:10

சென்னை: தமிழகத்தில், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில் வசிப்போர், 'பாஸ்போர்ட் ' சேவையை பெறுவதில் சிரமம் இருந்தது. இதை, பாஸ்போர்ட் துறை அதிகாரிகள், மத்திய அரசுக்கு தெரிவித்ததால், மாவட்ட தலைமை தபால் அலுவலகங்களில், பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதன்படி, வேலுார் மற்றும் காரைக்காலில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இன்று, கடலுார், விருதுநகர்; நாளை, திருவண்ணாமலை, விழுப்புரம் தலைமை தபால் அலுவலகங்களில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட உள்ளன.இவற்றில், வழக்கமான விண்ணப்பங்களும், புதுப்பிக்க கோரும் விண்ணப்பங்களும் மட்டும் ஏற்கப்படும். தத்கல் விண்ணப்பம், தடையின்மை சான்று ஆகிய வற்றுக்கு, பாஸ் போர்ட் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். தொடர்ந்து, தமிழகத்தில், 94 தபால் அலுவலகங்களில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கும் வகையில், தபால் துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இந்த சேவை மையங்களின் சேவையை பெற, www.passportindia.gov.in என்ற இணையதளத்தில், பயணியர் கணக்கு துவக்க வேண்டும். பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, ஆன்லைனில் விண்ணப்பித்து, கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு, அசல் சான்றுகளுடன் நேரில் சென்று, கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுதமி புகார்: கமல் பதிலடி!

Added : பிப் 28, 2018 00:59




சென்னை: கமல் பட நிறுவனம், தனக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக கூறிய, நடிகை கவுதமிக்கு, 'அந்த விவகாரத்தை பட நிறுவனம் பார்த்துக் கொள்ளும்' என, நடிகர் கமல் பதில் அளித்துள்ளார்.

கமலை பிரிந்து வாழும் நடிகை கவுதமி, புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், கமல் நடித்த, 'தசாவதாரம், விஸ்வரூபம்' படங்களில், ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய வகையில், தனக்கு சம்பள பாக்கி இருப்பதாக, கவுதமி புகார் தெரிவித்திருந்தார். மேலும், கமலுடன் தற்போது, தனிப்பட்ட முறையிலோ, தொழில் ரீதியாகவோ, எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர் கூறியிருந்தார். அரசியலில், கமலுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் நோக்கில், கவுதமி செயல்படுவதாக, கமல் தரப்பில் விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து, கவுதமி, மீண்டும், 'டுவிட்டர்' பக்கத்தில், நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது: எனக்கும், கமலுக்கும், எந்த தொடர்பும் இல்லை. யாரிடமும், நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. அதே சமயம், நான் உழைத்த படங்களுக்கு, உரிய சம்பளத்தை எதிர்பார்ப்பதில் தவறில்லை. இது தெரியாமல், என்னைப் பற்றி தவறாக பேசுகின்றனர்.இது, எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நான், தற்போது என் சொந்த முயற்சியில், எனக்காகவும், என் மகளுக்காகவும் உழைக்கிறேன். காரணம் இல்லாமல், நான் எதுவும் பேசமாட்டேன். தகுந்த ஆதாரத்தோடு தான், பேசுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, செய்தியாளர்கள், கமலிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''கவுதமி புகார் விவகாரத்தை, சம்பந்தப்பட்ட பட நிறுவனம் பார்த்துக் கொள்ளும்; அதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள், அந்த நிறுவனத்தில் உள்ளனர்,'' என்றார்.

உயர்மட்டக் குழு : நடிகர் கமல் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் நீதி மையம் கட்சியின் நடவடிக்கைகளை உறுதி செய்யவும், செய்ய வைக்கவும் உருவாக்கப்பட்டுள்ள, உயர் நிலைக் குழு உறுப்பினர்களின், ஒரு பகுதியினரின் பட்டியலை வெளியிட்டுள்ளோம். அதில், வழக்கறிஞர்கள் அருணாசலம், ராஜசேகரன், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஆர்.ரங்கராஜன், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி, ஏ.ஜி.மவுரியா, எழுத்தாளர்கள், ப.ராஜநாராயணன், பாரதி கிருஷ்ணகுமார். தொழிலதிபர்கள், சி.கே. குமரவேல், சிவராம், சவுரிராஜன், திரைப்பட தயாரிப்பாளர், கமீலா நாசர், பேராசிரியர், கு.ஞானசம்பந்தன், ராஜ்கமல் தயாரிப்பு நிர்வாகி, மூர்த்தி. நடிகை ஸ்ரீபிரியா, நற்பணி இயக்க அகில இந்திய பொறுப்பாளர், ஆர்.தங்கவேலு மற்றும் திரைப்பட இயக்குனர், சுகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு பாதிப்பு : சென்னை விமான நிலையத்தில், கமல் கூறியதாவது:சென்னை, ஐ.ஐ.டி., நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது கண்டனத்திற்கு உரியது. ஆந்திராவில், தமிழர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு, விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்.விழுப்புரம் மாவட்டத்தில், 14 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்முறை, அவரது தம்பி கொலை சம்பவத்தை பார்க்கும் போது, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளதையே காட்டுகிறது. மொழி பிரச்னை காரணமாக, தமிழக மாணவர்கள், வெளி மாநிலங்களில் தற்கொலை செய்யக் கூடாது. வெளிமாநில மாணவர்கள், தமிழகத்தில் சவுகரியமாக படிப்பதை போல், தமிழக மாணவர்கள், இந்தியாவில் எந்த மூலையில் படித்தாலும், பாதுகாப்பு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மார்ச் 25ல் டில்லியில் டாக்டர்கள் மாநாடு : இந்திய மருத்துவ சங்கம் முடிவு

Added : பிப் 28, 2018 00:44


திண்டுக்கல் : தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் மார்ச் 25ல் டாக்டர்கள் மாநாடு நடக்கிறது, என இந்திய மருத்துவ கழக தேசிய முன்னாள் தலைவர் வினய் அகர்வால் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: இந்திய மருத்துவ கழகத்தில் டாக்டர்கள் மட்டும் தான் உள்ளனர். இதை அழித்துவிட்டு, 5 டாக்டர்கள், மீதியுள்ளோர் டாக்டர் அல்லாதோரை இணைத்து தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த ஆணையம் ஓமியோபதி, சித்தா, யுனானி, ஆயுர்வேதம் படித்தவர்கள், எம்.பி.பி.எஸ்., படிக்காமல் மருத்துவம் பார்க்கலாம் என்ற முறையைவலியுறுத்துகிறது. இதனால் போலி டாக்டர்கள் உருவாவர். எம்.பி.பி.எஸ்.படித்த வர்கள் பயிற்று மருத்துவருக்கு மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்றால்தான் தேசிய கமிஷனில் பதிவு செய்ய முடியும் என்பது தேவையற்றது. இதனால் தனியார் கல்லுாரிகள், தாங்களாகவே எம்.பி.பி.எஸ்., பி.ஜி., படிப்பை அதிகரித்து கொள்வர்.இதை எதிர்த்து டில்லியில் மார்ச் 25ல் டாக்டர்கள் மாநாடு நடக்கிறது, என்றார்.
 நாளை!   பிளஸ் 2வுக்கு பொதுத்தேர்வு துவக்கம்

தமிழகம் மற்றும், புதுச்சேரியில், பிளஸ் 2 பொது தேர்வுகள், நாளை துவங்குகின்றன. 2,794 மையங்களில், 8.67 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வில் பங்கேற்கின்றனர். முறைகேடுகளை தடுக்க, காப்பி அடித்தால், ஐந்து ஆண்டுகள் வரை, தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என, கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, பிளஸ் 2 பொது தேர்வு, தமிழகம் மற்றும், புதுச்சேரியில், நாளை துவங்குகிறது; ஏப்., 6ல், முடிகிறது. தேர்வின் முடிவுகள், மே, 16ல் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2,756; புதுச்சேரியில், 38 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, 278 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில், 6,754 மற்றும் புதுச்சேரியில், 147 என, மொத்தம், 6,901 பள்ளிகளை சேர்ந்த, 4.63 லட்சம் மாணவியர் உட்பட, 8.67 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். புதுச்சேரியில் மட்டும், 8,215 மாணவியர் உட்பட, 15 ஆயிரத்து, 140 பேர் தேர்வு எழுதுகின்றனர். கணிதம், இயற்பியல், வேதியியல் அடங்கிய பாட பிரிவில், 4.28 லட்சம்; உயிரியல் பிரிவில், 2.97 லட்சம்; வணிகவியலில், 2.42 லட்சம்; தொழிற்கல்வியில், 62 ஆயிரம்; வரலாறு பிரிவில், 14 ஆயிரம் பேர், தேர்வில் பங்கேற்கின்றனர்.

சிறப்பு கண்காணிப்பு

தேர்வை முறைகேடு இன்றி, அமைதியாக நடத்தி முடிக்க, 30 சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், அந்தந்த மாவட்டங்களில், மேற்பார்வை பணிகளில் ஈடுபடுத்தப் படுகின்றனர். தேர்வை சுமூகமாக நடத்த, 6,402 முதன்மை கண்காணிப்பாளர்களும், 937 கூடுதல் கண்காணிப்பாளர்களும், 94 ஆயிரத்து, 880 ஆசிரியர்களும், தேர்வு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் முறைகேடுகளை கண்டுபிடிக்க, 1,700 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன; இவற்றில் இடம் பெற்றுள்ள, 8,500 ஆசிரியர்கள், தேர்வு அறைகளில் திடீர் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
தேர்வில் முறைகேடுகளை தடுக்க, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஆள் மாறாட்டம் செய்வது, காப்பி அடிப்பது, வினாத்தாளை, 'லீக்' செய்வது போன்றமுறைகேடுகளில் ஈடுபட்டால், அந்த மாணவருக்கு, 5 ஆண்டுகள் வரை, தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என, கடுமையாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

3 மணி நேரம் தேர்வு

பிளஸ் 2 தேர்வு, காலை, 10:00 மணிக்கு துவங்க உள்ளது. முதல், 10 நிமிடங்கள், வினாத்தாளை வாசித்து பார்க்கலாம். அடுத்த, ஐந்து நிமிடங்கள், மாணவர்களின், சுயவிபரங்கள் மற்றும் ஹால் டிக்கெட் விபரங்கள் சரிபார்க்கப்படும். ஹால் டிக்கெட்டில், புகைப்படம் மாறியிருந்தால், அவர்கள், தங்களுடன் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை எடுத்து செல்வது நல்லது.

இதுகுறித்து, தலைமை ஆசிரியரிடம், முன்கூட்டியே ஆலோசனை பெற வேண்டும். காலை, 10:15 முதல், மதியம், 1:15 மணி வரை, மூன்று மணி நேரம், தேர்வு எழுதலாம். அதன்பின், விடைத்தாள்கள் பெறப்பட்டு, மாணவர்கள் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்படுவர்.

'காப்பி' , பிட் வேண்டாம்

'பொது தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால், அதிக பட்சம், ஐந்தாண்டுகள் வரை, தேர்வு எழுத தடை விதிக்கப்படும்' என, அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.* தேர்வறையில், 'பிட்' வைத்திருந்து, அதை பயன்படுத்தாமல், கண்காணிப்பாளர் சோதனை செய்யும் முன்பே கொடுத்து விட்டால், தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். ஆனால், அதே தவறை மீண்டும் செய்தால், தேர்வறையிலிருந்து வெளியேற்றப்படுவர்; அந்த மாணவர், இரண்டு தேர்வுகளை எழுத தடை விதிக்கப்படும்* மற்ற மாணவரை பார்த்து எழுதியது
கண்டுபிடிக்கப்பட்டால், ஒரு ஆண்டு தேர்வு எழுத முடியாது. 'காப்பி' அடிக்க, கண்காணிப்பாளரிடம் பேரம் பேசினால், அந்த மாணவர், இந்த பொது தேர்வு முழுவதும் எழுத முடியாது

* ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதினால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்த மாணவர் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். அதிக மதிப்பெண் தரும்படி, விடைத்தாளில் எழுதுவது, வேண்டுகோள் விடுப்பது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், விடைத்தாள்கள் ரத்து செய்யப்படும்

* கண்காணிப்பாளரை மிரட்டுவது, தாக்குவது, கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால், நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். விடைத்தாள்களை திருப்பி தராமல் எடுத்து செல்வது, கிழித்து சேதப்படுத்துவது போன்றவை கண்டுபிடிக்கப்பட்டால், அந்த மாணவரின் தேர்வு, ரத்து செய்யப்படும்

* வினாத்தாளை, 'லீக்' செய்தால், மூன்று ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படும். முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர், விளக்கம் எழுதி தர மறுத்தால், அந்த தேர்வு மட்டுமின்றி, எதிர்காலத்தில் தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும்

* விடைத்தாள்களை மற்ற மாணவர்களிடம் மாற்றி, எழுதி வாங்கினால், ஐந்து ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது. விடைத்தாள்களில் பெயர், 'இனிஷியல்' அல்லது சிறப்பு குறியீடுகள் கண்டறியப்பட்டால், அந்த விடைத்தாள்களின் மதிப்பீடு நிறுத்தப்படும்.

கட்டுப்பாட்டு அறை அமைப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வு, நாளை துவங்கும் நிலையில், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க, தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இது, சென்னையில், தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் செயல்படும் என, இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்து உள்ளார்.

காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, கட்டுப்பாட்டு அறையை, தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள், பெற்றோர், தங்கள் சந்தேகம் மற்றும் குறைகளை, கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கலாம். அதற்காக, 80125 94105, 80125 94115, 80125 94120 மற்றும் 80125 94125 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -

NEWS TODAY 2.5.2024