Monday, October 1, 2018

'டாஸ்மாக்' கடைகளில் கரை வேட்டிகளால் நெரிசல்

Added : செப் 30, 2018 23:10

எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க, நேற்று சென்னை வந்த, எம்.ஜி.ஆர்., விசுவாசிகள் மற்றும், அ.தி.மு.க., தொண்டர்கள், மெரினா கடற்கரையில் உள்ள, தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட்டனர். மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். ஏராளமானோர், 'டாஸ்மாக்' கடைகளையும் முற்றுகையிட்டனர்

.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள, டாஸ்மாக் கடைகளில், பொதுவாகவே, ஞாயிற்றுக்கிழமைகளில், 'குடி'மகன்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று விழாவிற்கு வந்தவர்களும், கடைகளை முற்றுகையிட்டதால், பெரும்பாலான கடைகளில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பலர்,அ.தி.மு.க., கொடிகளை கைகளில் ஏந்தியபடியே, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கினர்.அனைத்து கடைகளிலும், சரக்கு விற்பனை அமோகமாக நடந்தது. இதனால், அ.தி.மு.க., தொண்டர்கள் மட்டுமின்றி, டாஸ்மாக் ஊழியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல, ஓட்டல்கள், சாலையோர கடைகளிலும், நேற்று விற்பனை அமோகமாக இருந்தது

விழாவில், திரையுலகில், எம்.ஜி.ஆருடன் பணிபுரிந்த, நடிகையர், லதா, வெண்ணிற ஆடை நிர்மலா, காஞ்சனா, குமாரி சச்சு உட்பட, பலர்கவுரவிக்கப்பட்டனர். நடிகர் பாக்யராஜ்,பின்னணி பாடகியர், சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி,வசனகர்த்தா ஆரூர் தாஸ், பாடலாசிரியர்கள்கவிஞர் முத்துலிங்கம், செங்குட்டுவன், சண்டை பயிற்சியாளர் ராமகிருஷ்ணன், ஒப்பனை கலைஞர்ராமமூர்த்தி ஆகியோருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.தமிழ்நாடு பொன் விழாவையொட்டி, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. தென் மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் வந்தவர்கள், விமான நிலையம் அருகே, சாலையோரம் வாகனங்களை நிறுத்தினர். வாகனங்கள் மீதேறி, விமான நிலைய ஓடுதளத்தில், விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை, ஆவலோடு பார்த்தனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், ஏராளமானோர், 'மெட்ரோ' ரயிலில் பயணித்தனர். பிற மாவட்டங்களில் இருந்து வந்தோரும், மெட்ரோ ரயிலில், 'ஜாலி'யாக பயணம் செய்து ரசித்தனர். இதனால், வழக்கத்தை விட, மெட்ரோ ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்துங்க!
சபரிமலை கோவில் நிர்வாகத்துக்கு முதல்வர் உத்தரவு


dinamalar 01.10.2018

திருவனந்தபுரம்:சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்வதற்கு, பெண்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்பை, உடனடியாக நிறைவேற்றும் படி, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டு உள்ளார்.




கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. மாநிலத்தின் பத்திணம்திட்டா மாவட்டத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்வதற்கு, 10 - 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்குகளை விசாரித்த, உச்ச நீதிமன்றம், 'அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்' என, சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.இதையடுத்து, கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வாகிகளை, முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து பேசினார்.

அப்போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தாமதம்

இல்லாமல் உடனடியாக நிறைவேற்றும்படி, அவர் உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து, திருவாங் கூர் தேவஸ்வம் போர்டு தலைவர், ஏ.பத்மகுமார் கூறியதாவது: சபரி மலை கோவிலுக்குள் பெண்க ளையும் அனுமதிப்பதால், பக்தர்களின் எண்ணிக்கை, 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்கு சற்று அவகாசம் வேண்டும்.

பக்தர்களுக்கு, குறிப்பாக பெண் பக்தர்களுக்கு வசதி கள் செய்து தருவதற்காக, கூடுதலாக, 100 ஏக்கர் நிலம் வேண்டும் என கேட்டுள்ளோம். நிலக்கலில் நிலத்தை ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாக, முதல்வர் உறுதி அளித்து உள்ளார். உண்மை யான பெண் பக்தர்கள் எவரும், சபரிமலைக்கு வரமாட்டார் கள் என்றே கருதுகிறோம். பெண் உரிமை ஆர்வலர் கள் மட்டுமே சபரிமலைக்கு வருவர்.இவ்வாறு அவர் கூறினார்.

சட்டப்பூர்வமாக சென்ற முதல் பெண் வரவேற்பு

பெண்களுக்கு தடை இருந்தபோது, கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, 1994ல், அப்போதைய கலெக்டராக இருந்த, கே.பி., வல்சலா குமாரி, சபரிமலைக்கு சென்றார். அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தவழக்கில், கலெக்டராக சென்று ஆய்வு செய்ய, வல்சலா குமாரிக்கு, உயர் நீதி மன்றம் அனுமதி அளித்திருந்தது.

''அப்போது எனக்கு, 41 வயது; ஆனால், 18 படி ஏறவில்லை. 50 வயதுக்குப் பின் சபரிமலைக்கு சென்றுள்ளேன். தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்,'' என, வல்சலா குமாரி கூறினார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, பெண் பக்தர் கள் அதிக அளவில் குவிவர் என, எதிர்பார்க்கப் படும் நிலையில், சபரிமலையில், பெண்களுக் கான கழிப்பறைகள் கட்டுவதே, தற்போது உடனடி தேவையாக உள்ளது. சன்னிதானத் துக்கு செல்லும், 6.5 கி.மீ., பாதை யில், தற்போது ஆண்களுக்காக, 20 கழிப்பிடங்களும், பெண் களுக்காக, ஏழு கழிப்பறைகளும் உள்ளன. பெண்களுக்கான கழிப்பறைகளை அதிக அளவில் கட்டுவதற்கான நடவடிக்கை களில், தேவஸ்வம் போர்டு ஈடுபட்டுள்ளது.

மேலும், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால், வாகனங்களை நிறுத்த கூடுதல் வசதிகள் செய்ய வேண்டும். மலை ஏறுவதற்கு, பெண்களுக்கு வசதிகள் செய்யப் பட வேண்டும். அவர்களது பாதுகாப்புக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

தாம்பரம்-கொல்லம் ரயில் நீட்டிப்பு

Added : அக் 01, 2018 04:10

சென்னை : தாம்பரம்- கொல்லம் ரயில் சேவை மேலும் இரு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து திங்கள், புதன், வெள்ளி மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு திருச்சி, மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், செங்கோட்டை, தென்மலை, புனலுார், கொட்டாரக்கரா வழி மறுநாள் காலை 10:00 மணிக்கு கொல்லம் செல்லும். கொல்லத்தில் இருந்து செவ்வாய், வியாழன், சனி காலை 11:30 மணிக்கு புறப்பட்டு இரவு 3:30 மணிக்கு தாம்பரம் செல்லும்.நேற்று முன்தினத்துடன் முடிந்த இந்த ரயில் சேவை, மேலும் இருமாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து அக்., 1, 3, 5, 8, 10, 15, 22, 24, 26, 29, 31, நவ., 5, 7, 9, 12, 14, 16, 19, 21, 23, 26, 28, 30 ஆகிய நாட்களில் புறப்படும். கொல்லத்தில் இருந்து அக்., 2, 4, 6, 9, 11, 13, 16, 18, 23, 25, 27, 30, நவ., 1, 3,10, 13, 15, 17, 20, 22, 24, 27, 29, டிச., 1ம் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது.சென்னை எழும்பூரில் இருந்து திங்கள் அன்றும், மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து செவ்வாய் அன்றும் புறப்படும் சென்னை- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் டிசம்பர் வரை இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கண் டாக்டருக்கு கூகுள் கவுரவம்

Added : அக் 01, 2018 06:28 |

புதுடில்லி : இந்தியாவின் முன்னணி கண் டாக்டரும் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனருமான கோவிந்தப்பா வெங்கடசாமியின் பிறந்தநாளையொட்டி, கூகுள் டூடில் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது. 1918 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி, விருதுநகர் மாவட்டம் வடமாலபுரத்தில், கோவிந்தப்பா வெங்கடசாமி பிறந்தார். தேவையில்லாத குருட்டுத்தன்மையை அகற்றுவதற்காக, தம் வாழ்நாளையே அர்ப்பணித்தார். அரவிந்த் கண் மருத்துவமனை மூலம் இதுவரை 6.8 மில்லியன் கண் ஆபரேசன்கள் நடைபெற்று 55 மில்லியன் பேர் கண்பார்வை திறன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கவில்லை சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்





மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பதிவு: அக்டோபர் 01, 2018 04:00 AM

மதுரை,

மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உரிமை சட்டம்

தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தமிழகத்தில் எங்கு அதனை அமைப்பது என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இறுதியாக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மத்திய மந்திரிசபை இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தெரிவித்துள்ளது.

ஒதுக்கீடு

மதுரை கீழவெளி வீதியை சேர்ந்த ஹக்கீம் காசிம் என்பவர், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 8 கேள்விகளை கேட்டு இருந்தார். அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு முதல் இதுவரை நாடு முழுவதும் எத்தனை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திறக்கப்பட்டுள்ளது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவது குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் அமைவது குறித்து அரசாணை எதுவும் வெளியிடப்பட்டுள்ளதா?. மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடக்க விழா எப்போது நடைபெறும். மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணியை எந்த நிறுவனம் மேற்கொள்கிறது. இதுவரை மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவதற்கு எவ்வளவு தொகை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. தொகை ஒதுக்கீடு செய்தது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதா? போன்ற கேள்விகளை கேட்டு இருந்தார்.

அதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு நாடு முழுவதும் 14 இடங்களில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மந்திரிசபை ஒப்புதல்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பது குறித்து மத்திய மந்திரிசபை மற்றும் மத்திய செலவினங்களுக்கான நிதி குழு இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. அதன் காரணமாக மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தும், எந்த நிறுவனம் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளும் என்பது குறித்தும் எங்களிடம் தகவல்கள் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மாநில செய்திகள்

கணவன் மட்டுமே மனைவியின் வாரிசு: சான்றிதழ் அளித்த தாசில்தாரும், தீர்ப்பு அளித்த நீதிபதியும் ஆஜராக வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு




கணவனுக்கு மட்டுமே இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்த நீதிபதியும், வருகிற 3–ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 01, 2018 04:10 AM

சென்னை,

விபத்தில் பலியான பெண்ணுக்கு கணவன் மட்டுமே வாரிசு என்று சான்றிதழ் கொடுத்த நாமக்கல் தாசில்தாரும், அதனடிப்படையில் கணவனுக்கு மட்டுமே இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்த நீதிபதியும், வருகிற 3–ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.கணவனுக்கு இழப்பீடு

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பரிமளா என்ற பாப்பாத்தி. இவர் வாகன விபத்தில் பலியானார். இதையடுத்து அவரது கணவர் முருகேசன், பெற்றோர் சின்னம்மாள், நடேசன் ஆகியோர் இழப்பீடு கேட்டு நாமக்கல் மோட்டார் வாகன விபத்துக்களை விசாரிக்கும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி வி.சம்பத்குமார் விசாரித்து, கடந்த 2015–ம் ஆண்டு ஜனவரி 4–ந்தேதி தீர்ப்பு அளித்தார்.

அந்த தீர்ப்பில், ‘இறந்துபோன பரிமளா திருமணம் ஆனவர். அவரை நம்பி அவரது பெற்றோரும், கணவரும் உள்ளனர். இருந்தாலும், நாமக்கல் தாசில்தார் கொடுத்துள்ள வாரிசு சான்றிதழில், கணவர் முருகேசன் மட்டுமே வாரிசு என்று கூறப்பட்டுள்ளது. அதனால், விபத்துக்குள்ளான வாகனம் காப்பீடு செய்திருந்த ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம், முருகேசனுக்கு ரூ.13 லட்சத்து 71 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.கடும் கண்டனம்

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், இன்சூரன்ஸ் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார். அப்போது நாமக்கல் (தாலுகா) தாசில்தாருக்கும், தீர்ப்பு வழங்கிய கீழ்கோர்ட்டு நீதிபதி சம்பத்குமாருக்கும், நீதிபதி எம்.வி.முரளிதரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

இந்து வாரிசு உரிமை சட்டத்தின்படி, திருமணமான ஒருவர் இறந்து விட்டால், அவரது வாழ்க்கை துணையும், குழந்தைகளும் முதல்நிலை வாரிசுகள் ஆவர், அவரது பெற்றோர் உயிரோடு இருந்தால், அவர்கள் 2–ம் நிலை வாரிசு ஆவர். வாரிசு சான்றிதழ் கொடுக்கும்போது, இவர்கள் அனைவரையும் வாரிசுகளாக தாசில்தார் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.ஒரே வாரிசு

ஆனால், இந்த வழக்கில், கணவன் மட்டுமே வாரிசு என்று நாமக்கல் தாசில்தார் சான்றிதழ் கொடுத்துள்ளார். இதை கீழ்கோர்ட்டும் ஏற்றுக்கொண்டு, கணவனுக்கு மட்டுமே மொத்த இழப்பீடு தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளது. இறந்தவரின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க மறுத்துள்ளது.

தாசில்தார் இந்த வாரிசு சான்றிதழ் கொடுப்பதற்கு முன்பு, முறையான விசாரணை எதுவும் செய்யவில்லை என்பது தெரிகிறது. அதேபோல, நீதிபதி சம்பத்குமாரும், இந்த சான்றிதழை முழுமையாக பரிசீலிக்காமல், அதன் அடிப்படையில், முழு இழப்பீடு தொகையை கணவனுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளார்.விளக்கம் வேண்டும்

எனவே, இந்த வழக்கில் நாமக்கல் தாசில்தாரை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன். அவர் வருகிற 3–ந்தேதி நேரில் ஆஜராகி, எவ்வாறு இந்த வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது? என்பதை விளக்கி கூற வேண்டும்.

அதேபோல, நீதிபதி வி.சம்பத்குமாரும், வருகிற 3–ந்தேதி நேரில் ஆஜராகி, எந்த அடிப்படையில் கணவனுக்கு மட்டும் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட செய்திகள்

சிதம்பரத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் பஸ் மாறி ஏறிச்சென்ற கண்டக்டர் நடிகர் வடிவேலு பட நகைச்சுவை காட்சி போல் ருசிகரம்






சிதம்பரத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் ஆத்தூரில் பஸ் மாறி ஏறிச்சென்ற அரசு பஸ் கண்டக்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: அக்டோபர் 01, 2018 04:45 AM

ஆத்தூர்,

சிதம்பரத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் ஆத்தூரில் பஸ் மாறி ஏறிச்சென்ற அரசு பஸ் கண்டக்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் வடிவேலு நகைச்சுவை காட்சி

ஏ.பி.சி.டி. என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலு பஸ் கண்டக்டராக நடித்த ஒரு நகைச்சுவை காட்சி வரும். அதில், ஒரே மாதிரியாக இருக்கும் 2 அரசு பஸ்களில் ஒன்றில் ஏறி பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும்போது, மற்றொரு நகைச்சுவை நடிகரான சிங்கமுத்துவிடம் தகராறு ஏற்பட்டு வடிவேலுவை அவர் விரட்டுவது போன்ற காட்சி இருக்கும். சினிமா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த நகைச்சுவை காட்சி போன்ற ருசிகர சம்பவம் சேலம் மாவட்டம், ஆத்தூரில் நேற்று நடந்தது. இது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து தினமும் காலை 6.25 மற்றும் 6.40 மணிக்கு 2 அரசு பஸ்கள் சேலத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட இந்த இரு அரசு பஸ்களும், சேலம் வரும் வழியில் ஆத்தூருக்கு காலை 9.15 மற்றும் 9.25 மணிக்கு வந்து அங்கிருந்து புறப்பட்டு செல்லும்.

அதுபோல் நேற்று முன்தினம் காலையில் சிதம்பரத்தில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்ட அரசு பஸ் ஆத்தூருக்கு காலை 9.15 மணிக்கு வந்தது. அப்போது பஸ்சில் 28 பயணிகள் இருந்தனர். பஸ்சில் இருந்து இறங்கிய கண்டக்டர், அருகில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தார்.

தனியார் பஸ்சில் ஏறினார்

சிறிது நேரத்தில் ஆத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சிதம்பரம்-சேலம் என்று போர்டு வைத்திருந்த அரசு பஸ் வெளியே வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த கண்டக்டர், தான் இல்லாமல் பஸ்சை டிரைவர் ஓட்டிச்செல்வதாக கருதி அந்த பஸ்சை பிடிக்க ஓடினார். அதற்குள் அந்த பஸ் அங்கிருந்து சென்று விட்டது. இதையடுத்து சேலம் செல்லும் தனியார் பஸ்சில் ஏறிய அந்த கண்டக்டர், முன்பு செல்லும் அரசு பஸ்சின் கண்டக்டர் தான் என்றும், அந்த பஸ்சை பிடிக்குமாறும் கூறி உள்ளார். தனியார் பஸ் டிரைவரும் வேகமாக சென்று பெத்தநாயக்கன்பாளையத்தில் அரசு பஸ்சை முந்திச்சென்று நிறுத்தினார்.

அதிர்ச்சி அடைந்த கண்டக்டர்

அந்த பஸ்சில் இருந்து இறங்கிய கண்டக்டர் உடனடியாக சேலம் செல்லும் அரசு பஸ்சில் ஏறி டிரைவரிடம் பஸ்சை நிறுத்தாமல் சென்றது குறித்து கேட்க முயன்றார். அப்போது அதில் இருந்த டிரைவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் அந்த கண்டக்டர்.

அவர் பணியில் இருந்தது 9.15 மணிக்கு ஆத்தூர் வந்த பஸ். அவர் விரட்டிப்பிடித்து ஏறிய பஸ் சிதம்பரத்தில் இருந்து புறப்பட்டு 9.25 மணிக்கு வந்த பஸ். தன் தவறை உணர்ந்த அந்த கண்டக்டர் செய்வதறியாது விழித்தார்.

சிதம்பரத்தில் இருந்து 2-வதாக புறப்பட்ட பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்ததால் அந்த பஸ் ஆத்தூரில் அதிக நேரம் நிற்காமல் 9.15 மணிக்கு பஸ் புறப்படுவதற்கு முன்பாக புறப்பட்டதால் அவருக்கு இந்த குழப்பம் ஏற்பட்டது பின்னர் தெரியவந்தது. அதன்பிறகு அந்த கண்டக்டர், தான் வந்த பஸ் ஆத்தூரில் நிற்கும் விவரம் தெரிந்து அங்கிருந்து வேறு ஒரு பஸ்சில் மீண்டும் ஆத்தூருக்கு புறப்பட்டு வந்தார்.

வேறு பஸ்சில் பயணிகள்

இதற்கிடையே ஆத்தூர் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் 9.15 மணி பஸ் நின்றதால், அதில் இருந்த 28 பயணிகளும் பரிதவிப்புக்குள்ளானார்கள். மேலும் அவர்கள் ஆத்தூர் பயணிகள் நேர காப்பாளரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அந்த பஸ் டிரைவரும், கண்டக்டர் வேலைக்கு வந்து ஓராண்டே ஆகும் புதியவர் என்பதால் அவரின் செல்போன் எண் கையில் இல்லை என்றதுடன், அவர் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடையில் சாப்பிட்டு கொண்டு இருக்கலாம் என்றும் கூறி தேடிச்சென்றார்.

பயணிகளின் கோரிக்கை காரணமாக, அவர்கள் ஆத்தூரில் இருந்து சேலம் செல்லும் மற்றொரு அரசு பஸ்சில் 28 பயணிகளும் ஏற்றி சேலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு அரை மணி நேரம் கழித்து வந்து சேர்ந்த பஸ் கண்டக்டரிடம் சம்பவம் தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


NEWS TODAY 2.5.2024