Monday, October 1, 2018

மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கவில்லை சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்





மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பதிவு: அக்டோபர் 01, 2018 04:00 AM

மதுரை,

மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உரிமை சட்டம்

தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தமிழகத்தில் எங்கு அதனை அமைப்பது என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இறுதியாக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மத்திய மந்திரிசபை இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தெரிவித்துள்ளது.

ஒதுக்கீடு

மதுரை கீழவெளி வீதியை சேர்ந்த ஹக்கீம் காசிம் என்பவர், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 8 கேள்விகளை கேட்டு இருந்தார். அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு முதல் இதுவரை நாடு முழுவதும் எத்தனை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திறக்கப்பட்டுள்ளது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவது குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் அமைவது குறித்து அரசாணை எதுவும் வெளியிடப்பட்டுள்ளதா?. மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடக்க விழா எப்போது நடைபெறும். மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணியை எந்த நிறுவனம் மேற்கொள்கிறது. இதுவரை மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவதற்கு எவ்வளவு தொகை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. தொகை ஒதுக்கீடு செய்தது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதா? போன்ற கேள்விகளை கேட்டு இருந்தார்.

அதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு நாடு முழுவதும் 14 இடங்களில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மந்திரிசபை ஒப்புதல்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பது குறித்து மத்திய மந்திரிசபை மற்றும் மத்திய செலவினங்களுக்கான நிதி குழு இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. அதன் காரணமாக மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தும், எந்த நிறுவனம் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளும் என்பது குறித்தும் எங்களிடம் தகவல்கள் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024