Monday, October 29, 2018

'96' படம்; ஒரு காதல்... பிரிவின் துயரம்.. நிஜவாழ்க்கையைத் தாக்கும் விட்டு அகலா நினைவுகள்

Published : 27 Oct 2018 17:53 IST



|’96’ படத்தைப் பார்த்த அனைவருமே தங்களுடைய காதல் அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார்கள். அந்தளவுக்கு இப்படம் ஒவ்வொருவரையும் பாதித்திருந்தது. அவ்வாறு ‘96’ திரைப்படம் தன் காதல் வாழ்க்கையை எப்படி நினைவுக் கூர்ந்தது என்ற ஒரு நபரின் பகிர்வே இது|

பலருக்குமே அவர்களுடைய வாழ்க்கையில் ஏதேனும் ஒரு பெரிய அடி தாங்கி கடந்து வந்திருப்போம். அப்படி எனக்கு நடந்தது தான் காதல் தோல்வி. அவ்வப்போது ஞாபகங்கள் வரும் போகும். ஆனால், பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்துவிடுவேன்.

காதல் தோல்வியடைந்தவர்கள் மறுபடியும் சந்திப்பது போன்ற படங்கள் வந்தால் பார்க்காமல் கடந்துவிடுவேன். ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பிரகாஷ்ராஜிடம் ஜெயம் ரவி பேசும் காட்சியில் லேசாக கலங்கினேன். ஏனென்றால், இப்படிப் பேசினால் எங்கப்பாவும் கரைந்திருப்பாரோ என்ற எண்ணம் தான். அடுத்து ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் லேசாக வருந்தினேன். ஆனால், மீண்டும் பழைய நிலைக்கு நாம் திரும்பி விடுவோமோ என்று பயந்தது ‘96’ படத்திற்குப் பிறகு தான். அதற்கு நிறையக் காரணங்கள்.

என்னுடைய ஃபேஸ்புக்கில் இருக்கும் நண்பர்கள் பலரும் ‘96’ படத்தின் மூலம் என் காதலியை நினைத்தேன் என்று பார்த்தவுடன், இப்படத்தை நாம் பார்க்கக்கூடாது என முடிவு செய்தேன். ஆனால், ஒரு படத்தின் பாடல்கள் என்னை இந்தளவுக்கு படம் பார்க்க தூண்டியதில்லை. குருட்டு தைரியத்தில் என்ன தான் நடந்துவிடும் பார்ப்போம் என்று பார்த்தேன். அது தான் நான் செய்த மிகப்பெரிய தவறாக உணர்கிறேன். இயக்குநர் பிரேம்குமாருக்கு என் கதை எப்படித் தெரியும் என்று பல காட்சிகளில் யோசித்தேன்.

ஏன் இவன் இப்படி என்பதற்கு முன்னால் ஒரு சின்ன ப்ளாஷ்பேக்:

சென்னையில் பணிபுரிந்துக் கொண்டிருக்கும் போது, ஆகஸ்ட் 18-ம் தேதி காலையில் ஒரு போன் வந்தது. ‘நான் ...... பேசுறேன். ரொம்ப நாளாகவே சொல்லணும் சொல்லணும் என நான் நினைத்தது. ஐ லவ் யூ. உன் முடிவு என்னவென்று யோசித்து சொல்’ என்றாள். எனக்கோ என்னடா இது என்று வேலை ஓடவில்லை. இரவு நான் அழைத்தேன். ‘இது தான் உன் எண்ணா... ஏன் இப்படியொரு எண்ணம்’ என்று பேச்சு தொடர்ந்தது. ஆகஸ்ட் 19 அதிகாலை 2 மணியளவில் நானும் காதலிக்கிறேன் என்று சொன்னேன்.

அவளோ கல்லூரியில் பயிற்சி நிலையில் உள்ள பேராசிரியராக இருந்தாள். வீட்டில் ஒரே பெண் என்பதால், அவளுடைய வீட்டில் எதுவுமே சொல்லவில்லை. நேரில் பார்க்கலாம் என்று செப்டம்பரில் சென்றேன். 6 நாள் விடுமுறை என்பதால், போன முதல் நாளே அவளுடைய வீட்டிற்குச் சென்றேன். பெரிய வீட்டில் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு போர்ஷனில் இருப்பார்கள். அம்மாவின் சொந்தக்காரர்கள் என்பதால் வீட்டிற்குச் சென்று மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்தோம். அடுத்த நாள் முதல் என் வீட்டின் வாசல் வழியாக தான் அவளது கல்லூரிக்கு செல்வாள் என்பதால் பார்ப்பேன். நான் மறுபடியும் சென்னைக்கு வரும் போது, பேருந்து நிலையம் வந்தாள். இருவரும் ஒரு பேக்கரியில் ஜூஸ் குடித்தோம். பின்பு ‘பார்த்து போடா’ என்று கிப்ட் கொடுத்தாள். அது தான் அவளை நான் கடைசியாகப் பார்த்தது.


என்னுடைய காதலைப் பற்றி என் வீட்டில் என்ன சொல்வார்கள் என்ற பயம் எனக்கு எப்போதுமே உண்டு. ஒரு நாள் ‘எப்படியும் என் வீட்டில் பிரச்சினை வரும்டா.. இப்பவே வீட்டில் சொல்லி பிரச்சினையை ஃபேஸ் பண்ணுவோம். அது நல்லது’ என்றேன். அது தான் நான் எடுத்த மிகத்தவறான முடிவு என்பது பின்னால் தெரியவந்தது. வீட்டில் சொன்னவுடன் பயங்கர பிரச்சினை. என்னுடன் துணை நிற்பார்கள் என்று யாரெல்லாம் எதிர்பார்த்தேனோ, அவர்கள் அனைவருமே எட்டப்பர்கள் வேலை பார்த்தது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

என்னுடன் பிறந்தவர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தேன். அவரோ காதல் திருமணம் செய்தவர். அவர் நமக்கு பக்கபலமாக இருப்பார் என நம்பினேன். அவர் கூட ‘உனக்கு வந்திருப்பது காதல் அல்ல. இன்பேக்ஸுவேசன்’ என்றார். ஒரு காதல் மூலமாக பல பேருடைய சுயரூபங்கள் தெரியவந்தது. நமக்குத் தான் பிரச்சினை வரும், அவளுக்கென்றும் ஆகாது என்று எண்ணியதற்கு மாறாக ஒரு சம்பவம் நடந்தது. என் குடும்பத்திலிருந்தவர்கள் அவளது வீட்டிற்கு சென்று தெருவில் நின்றுக் கொண்டு ‘பணம் அதிகமாக இருப்பதால்..............................................................’ என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள். இதை அவள் என்னிடம் சொன்ன போது அப்படியே உடைந்து போய்விட்டேன்.

தொடர்ச்சியாக பிரச்சினை, வேலையில்லாமல் போனது என அடி மேல் அடி. ஆனால், அவளும் நானும் உறுதியாக இருந்தோம். அப்போது தான் மேலும் ஒரு அடியாக என் அப்பாவுக்கு ரத்தத்தில் மஞ்சள் காமாலை வந்தது. அவரும் படுத்த படுக்கையானார். அதை வைத்து காதலைப் பிரிக்க ஒரு விளையாட்டைத் தொடங்கினார்கள். ஆனால், என் அப்பாவுக்கு என் காதல் இப்போது வரைக்கும் தெரியாது. அப்பாவிடம் சொல்லிவிடுவேன், அவர் உயிருக்கு ஆபத்தாக இருக்கிறார் என்றெல்லாம் பேசியவுடன், நம்மால் வேண்டாம் என்று அவளிடம் பேசினேன்.

அவளுடைய வீட்டிலும் பிரச்சினையாகி ஒரு நாள் “நாம் பிரியலாம்” என்றாள். அன்றிரவு இருவரும் பேசினோம். “இனிமேல் நாம் சந்திக்கவே கூடாது. எந்தவொரு குடும்ப விழாவில் கூட சந்திக்க வேண்டாம். அவர்கள் ஜெயித்ததாகவே இருக்கட்டும். நான் செத்துவிட்டால் என்னைப் பார்க்க வா... நீ போய்விட்டால் நான் பார்க்க வருகிறேன்... அது வரை நம் வாழ்க்கையில் இருவரும் போனில் கூட பேச வேண்டாம்” என்று அழுதுக் கொண்டே பேசினோம். அன்று முதலே அவளுடைய நம்பரை, என்னுடைய நம்பரை அவளும் ப்ளாக் செய்துவிட்டோம்.



’96’ படத்தால் உனக்கு என்ன என்று நீங்கள் கேட்கலாம். அப்படத்தின் முதல் பாதி எனக்கு பிரச்சினையே இல்லை. இரண்டாம் பாதி பார்க்கும் போது தான் நொறுங்கிவிட்டேன். ஏனென்றால், அவளைப் பிரிந்தவுடன் நான் என்ன நிலையில் இருந்தேன் என்பது என்னுடன் இருந்த நண்பர்களுக்கு மட்டும் தெரியும். எப்போதுமே குடி தான். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்தேன்.

அவளைப் பிரிந்தவுடன் மனதுக் கேட்காமல், என்ன பிரச்சினையானாலும் பரவாயில்லை என்று அவள் பணிபுரிந்த கல்லூரியில் போய் நின்றேன். அவள் கல்லூரி வாசலில் இருக்கும் போது தான் ‘எங்கப்பா இருக்க.. நாளை ஆபிஸ் வாப்பா.. ஒரு ரெஸ்யூம் எடுத்துட்டு வா’ என்று அழைத்தார். பெரிய நிறுவனத்தில் வேலை என்பதால் வந்துவிட்டேன். அவளுடைய திருமணம் நடக்கும் போது, யாருக்குமே தெரியாமல் நின்றேன். இது அனைத்துமே விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் பேசிக் கொண்டிருக்கும் போது வரும். நான் போனது எதுவுமே அவளுக்கு தெரியாது. ஆனால், சிறிதாக யோசித்திருக்க வாய்ப்பு உண்டு. இப்போது அவளுக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது. எனக்கும் திருமணமாகிவிட்டது.

‘96’ படம் பார்த்த போது தான், மீண்டும் அப்படியே பழைய நிலைக்கு திரும்பினேன். அப்படம் பார்த்த அடுத்த நாள், காதல் தோல்வியின் போது என்னுடன் இருந்த நண்பனைப் பார்க்கச் சென்றேன். அவனுடைய வீட்டிலிருக்கும் கவரைப் பார்க்க வேண்டும் என்றேன். ‘ஏன் டா ‘96’ படம் பார்த்தியா’ என்று கேட்டான். அதைப் பிரித்துப் பார்த்தேன். அதிலும் ‘96’ படத்தின் ஒற்றுமையிக்கிறது. என்னவென்றால், அடுத்த முறை பார்க்க வரும் போது ‘மெட்டி’ வாங்கிக் கொடு என்றாள். ஒரு மெட்டியும், ஒரு சுடிதாரும் வாங்கினேன். நான் வாங்கிய சுடிதார் மஞ்சள் கலர். அந்த இரண்டையும் நீண்ட நேரம் பார்த்தேன். மறுபடியும் அவனிடம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.


நான் படம் பார்த்து ஒரு வாரம் கடந்துவிட்டாலும், இன்று எழுதுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இன்று தான் நானும் அவளும் பிரிந்த நாள். கண்டிப்பாக இன்று அவள் என்னைப் பற்றி கண்டிப்பாக நினைப்பாள் என்பது தெரியும்.

அவளும், நானும் பிரிந்து நீண்ட தூரம் வந்துவிட்டாலும் நாங்கள் விட்டுவந்த காதல் மட்டும் இன்னும் அதே இடத்தில் நிற்கிறது. அதற்கு என்றைக்குமே தோல்வியில்லை.

இக்கட்டுரையைப் படித்தவர்களுக்கு இது இவர்களது காதல் என்று தெரியவரலாம். அப்படித் தெரிந்தால், அவளிடம் போய் ‘96’ படம் பார்க்கச் சொல்லுங்கள். அவளுக்கும் என் நினைப்பு வரலாம்.

இப்படிக்கு,

காதலன்

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024