Thursday, October 25, 2018

‘விராட் கோலி என்ன மனிதரா?’- வியப்பில் தமிம் இக்பால்

Published : 23 Oct 2018 19:01 IST

பிடிஐதுபாய்,




விராட் கோலி, தமிம் இக்பால் : கோப்புப்படம்

விராட் கோலி சில நேரங்களில் மனிதர் போல் பேட் செய்வது இல்லை, ஒவ்வொரு போட்டியிலும் அவர் சதம் அடிப்பது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது என்று வங்கதேச வீரர் தமிம் இக்பால் வியப்புத் தெரிவித்துள்ளார்.

வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட போதிலும், கையில் கட்டுப்போட்டுக்கொண்டு ஒருகையால் பேட் செய்தார் தமிம் இக்பால். இவரின் பேட்டிங் திறமை அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி புதிய சாதனையை படைத்தார். சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி, 204 இன்னிங்ஸ்களில் ஒருநாள், கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை எட்ட உள்ளார். சச்சின் டெண்டுல்கர் 264-வது இன்னிங்ஸில் இந்த சாதனையைப் படைத்தார்.

கையில் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்து வரும் தமிம் இக்பால், கலீஜ் டைம்ஸ் நாளேட்டில் விராட் கோலியின் திறமையைப் புகழ்ந்து பேட்டி அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

விராட் கோலியின் பேட்டிங்கை சமீபகாலங்களாகப் பார்க்கும்போது மிரட்சியாக இருக்கிறது. சில நேரங்களில் கோலி, சாதாரண மனிதர் போல பேட் செய்வதில்லை. அவரின் பேட் செய்யும் விதம், அவர் அடிக்கும் ஷாட்கள், ஒவ்வொரு போட்டியிலும் சதம் அடிக்கும் கோலியின் திறமை வியப்பில் ஆழ்த்துகிறது.



ஒவ்வொரு போட்டியிலும் விராட் கோலி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விதம், அவர் செயல்படும் விதம் தனித்துவமாக இருக்கிறது, என்னால் நம்பமுடியாத அளவுக்கு பேட்டிங் இருக்கிறது. டி20,ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி அனைத்திலும் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். விராட் கோலியின் பேட்டிங்கைப் பார்த்து, அதில் மயங்கியவர்கள், அதில் இருந்து கற்றுக்கொள்வார்கள். என்னைப் பொருத்தவரை கோலி, அற்புதமான பேட்ஸ்மேன்.

கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு நாட்டு வீரர்களுடன் விளையாடி இருக்கிறேன், சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடி இருக்கிறேன், பார்த்திருக்கிறேன். அவர்களுக்கென தனியாக வலிமை இருக்கிறது. ஆனால், யாரும் விராட் கோலி போன்று அனைத்து இடங்களிலும் தங்களின் ஆளுமையைப் பதித்து நான் பார்த்தது இல்லை.

ஆசியக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கையில் எனது அணிக்காக பேட் செய்தது பெருமையாக இருக்கிறது. நான் ஒரு பந்தைச் சந்தித்து ஷாட் அடித்தால் கூட என்னுடைய அணிக்கு 5 முதல் 10 ரன்கள் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால், முஷ்பிகுருக்கு ஆதரவாக பேட் செய்த காரணத்தால், என்னுடைய அணிக்குக் கூடுதலாக 32 ரன்கள் கிடைத்தது.

இவ்வாறு தமிம் இக்பால் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024