Thursday, October 25, 2018

தலையங்கம்

சத்தம் இல்லாத தீபாவளியா?



‘‘உன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி’’ என்று கையில் மத்தாப்புகளை கொளுத்தி உல்லாசமாக ஆடிப்பாடி கொண்டாடும் பண்டிகைதான் தீபாவளி.

அக்டோபர் 25 2018, 03:30

தீபாவளி பண்டிகையின் தனிச்சிறப்பே பட்டாசுதான். அதிகாலையில் பொழுது புலரும் முன்பே தலையில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, புத்தாடை அணிந்து, பூஜைசெய்து, மத்தாப்பு கொளுத்தி பட்டாசுகளை வெடிக்கச்செய்து குதூகலிக்கும் பண்டிகைதான் தீபாவளி. ஏற்கனவே கடந்த ஆண்டு டெல்லியில் பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு தடைசெய்திருந்தது. இதேபோல, நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடைசெய்யவேண்டும் என்று பொதுநல வழக்குகள் தொடர்ந்திருந்தனர். அதேநேரத்தில், பட்டாசுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கங்களின் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக எடுத்துக்கொண்டு விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பினால், பட்டாசு உற்பத்தியாளர்கள் நிம்மதி பெருமூச்சும் விடமுடிகிறது. அதுபோல இதை நிறைவேற்ற முடியுமா? என்று கலங்கவைக்கவும் செய்கிறது. பட்டாசு உற்பத்தியாளர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் இந்த தீபாவளியை மத்தாப்பு பட்டாசு வெடித்து கொண்டாடுவதற்கு இவ்வளவு தடையா? என்று சலிப்படையவும் செய்யவைக்கிறது. ஒட்டுமொத்த விற்பனைக்கு தடைவிதிக்காத சுப்ரீம்கோர்ட்டு, தீபாவளி பண்டிகை அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரைதான் பட்டாசு வெடிக்கலாம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகைகளின்போது நள்ளிரவு 11.55 முதல் 12.30 மணிவரைதான் பட்டாசு வெடிக்கலாம். சரவெடி வெடிக்கக்கூடாது. பசுமை வெடிகளைத்தான் உற்பத்திசெய்து விற்கவேண்டும். அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுடன்கூடிய பட்டாசுகளைத்தான் பயன்படுத்தவேண்டும். போலீசார் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றுவதை உறுதி செய்யவேண்டும் என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் கொண்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.

தீபாவளி என்றாலே அந்த கொண்டாட்டம் இரவு 8 மணி தொடங்கி 10 மணிக்கு முடிந்துவிடுவதில்லை. அன்று அதிகாலை சூரியன் உதிக்கும்முன்பே தொடங்கி நள்ளிரவு முடியும்வரை தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கக்கூடாது என்ற விதிகள் இருக்கிறது. அதுவே தாராளமாக போதும். மேலும் தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளில் மட்டும் பட்டாசு வெடிக்கப்படுகிறது என்பதில்லை. திருமணம், ஊர்வலங்கள், கோவில் திருவிழாக்கள், அரசியல் கட்சி கூட்டங்கள், மாநாடுகள், பல்வேறு வகையான விழாக்கள், சவஊர்வலங்கள் போன்ற பல நிகழ்வுகளில் பட்டாசுகள் வெடிக்கப்படுகிறது. அதற்கெல்லாம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் காலநிர்ணயம் செய்யப்படவில்லை. மேலும் பட்டாசு தொழிலின் கேந்திரமான சிவகாசியில் உற்பத்திசெய்த 80 சதவீத பட்டாசுகள் ஏற்கனவே நாடுமுழுவதும் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துவிட்டன. இப்போது சரவெடி போடக்கூடாது. அதிக சத்தம் உள்ள வெடிகளை வெடிக்கக்கூடாது என்பதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்தால், அவற்றையெல்லாம் உற்பத்தியாளர்கள் திரும்பப்பெறமுடியுமா?. அதையெல்லாம் எப்படி அழிப்பது என்பதெல்லாம் பெரிய பிரச்சினையாகிவிடும். எனவே, பட்டாசு உற்பத்தியாளர்கள் மறுசீராய்வு மனுதாக்கல் செய்யும்போது இதுபோன்ற நடைமுறை சிக்கல்களையெல்லாம் குறிப்பிடவேண்டும். அதை சுப்ரீம் கோர்ட்டு பரிசீலித்து, தீபாவளி கொண்டாட்டத்துக்கு தடையாக இருக்கும் அம்சங்களை நீக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

No comments:

Post a Comment

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC New Delhi : 27.11.2024  Terming it a “scam”, Delhi High Court on Tue...